அய்ரோப்பிய வரலாற்றில் ‘அறிவொளி யுகம்’ ‘ (Age of Enlightenment) என்று அழைக்கப்படும் காலகட்டத்தின் மிக முக்கியமான தூண்களில் ஒருவர் வால்டேர் (Voltaire). இவரது இயற்பெயர் பிரான்சுவாமேரி அரோயட் (FrançoisMarie Arouet). நவம்பர் 21, 1694 அன்று பாரிசில் பிறந்த இவர், தனது கூர்மையான எழுத்துக்களால் பிரான்சின் சமூக, அரசியல் மற்றும் மதக் கட்டமைப்புகளை கேள்விக்குள்ளாக்கினார்.
வால்டேரின் எழுத்துக்களில் மிக முக்கியமானது கருத்து சுதந்திரத்திற்கான அவரது குரலாகும். இன்றைய ஜனநாயக நாடுகளில் உள்ள ‘பேச்சுரிமை’ என்ற அடிப்படை உரிமைக்கு வித்திட்ட முன்னோடி இவர்.
“நீங்கள் சொல்வதை நான் முழுமையாக மறுக்கலாம்; ஆனால் அதைச் சொல்வதற்கான உங்கள் உரிமையை, என் உயிர் உள்ளவரை காப்பேன்.”
இது வால்டேரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் அவரது சிந்தனையைச் சுருக்கிச் சொன்ன வரிகள். இதுவே ஜனநாயகத்தின் அடிப்படை தத்துவமாக இன்றும் கருதப்படுகிறது. மாற்றுக் கருத்துக்களையும் சகித்துக்கொள்ளும் பண்பே உண்மையான நாகரிகம் என்று அவர் போதித்தார்.
மதச்சார்பின்மை மற்றும் சகிப்புத்தன்மை
அந்தக் காலத்தில் அய்ரோப்பாவில் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆதிக்கம் மிக அதிகமாக இருந்தது. மதத்தின் பெயரால் நடந்த கொடுமைகளையும், மதவெறியையும் வால்டேர் கடுமையாக எதிர்த்தார்.
தனது ‘சகிப்புத்தன்மை குறித்த ஒப்பந்தம்’ என்ற நூலில், மத நல்லிணக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். மதம் என்பது மனிதனை நெறிப்படுத்த வேண்டுமே தவிர, அவனைக் குருட்டு நம்பிக்கையில் தள்ளக்கூடாது என்று வாதிட்டார்.
அரசாங்கமும் மதமும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்ற கருத்தை ஆழமாக விதைத்தார்.
அநீதிக்கு எதிரான நேரடிப் போராட்டம்
வால்டேர் வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல, களப் போராளியும் கூட.
ஜீன் கால்லஸ் சீர்திருத்தவாதியாவார். புரட்சிகர கருத்துக்களைக் கூறினார் என்பதற்காகவே மதத்தை நிந்தனை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கொல்லப்பட்டார். வால்டேர் இந்த அநீதியை எதிர்த்துப் பல ஆண்டுகள் போராடி, அந்த தீர்ப்பை மாற்றியமைக்கச் செய்தார். பேனா வால் மட்டுமல்ல, செயலாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்தார்.
பிரஞ்சுப் புரட்சியின் வித்து
வால்டேரின் மரணத்திற்குப் பிறகு (1778), பதினொரு ஆண்டுகள் கழித்து பிரஞ்சுப் புரட்சி வெடித்தது. மன்னராட்சியை எதிர்த்தும், மக்களின் உரிமைக்காகவும் போராடிய புரட்சியாளர்களுக்கு வால்டேரின் எழுத்துக்களே உத்வேகமாக இருந்தன.
வால்டேர் தன் வாழ்நாளில் சிறைவாசம், நாடு கடத்தல் எனப் பல துன்பங்களை அனுபவித்தார். ஆனாலும், அவர் தன் பேனாவை கீழே வைக்கவில்லை. மூடநம்பிக்கை, அநீதி, மற்றும் அடிமைத்தனம் ஆகியவற்றிற்கு எதிராக அவர் ஏற்றிய அறிவுச்சுடர், இன்றும் உலகெங்கிலும் உள்ள முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது.
