அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அறிக்கை
சென்னை, நவ.21 ‘திமுக ஆட்சியில் தமிழ்நா டு தொழில்துறையில் உன்னத வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே எதிர்க் கட்சிகள், அவதூறு அறிக்கைகளை தவிர்த்து மாநிலத்தின் நலனில் அக் கறை செலுத்த வேண்டும்’ என்று தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித் துள்ளார்.
தொழில் துறை வளர்ச்சி
இதுகுறித்து அவர் 19.11.2025 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டிற்கு ஒவ்வொரு முறையும் புதிய முதலீடுகள் வரும் போதோ, அறிவிக்கும்போதோ ஒரு சில அரசியல்வாதிகள் அவதூறுகளை அள்ளி வீசுவதையே வேலையாக வைத்துள்ளனர். அவர்களின் குற்றச்சாட்டுகள் ஆதார மற்றவை. கடந்த 2021-இல் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.11.4 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதோடு, 34 லட்சம் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில், இப்பொழுது 80 சதவீதம் அதாவது 809 திட்டங்கள் நிலம் ஒதுக்கீடு, கட்டுமானம், சோதனை உற்பத்தி, வணிகரீதியான உற்பத்தி என பல்வேறு நிலை செயல்பாடுகளில் உள்ளன. திட்டங்களின் செயலாக்கத்தில் நமது அரசு மிகவும் தெளிவாக உள்ளது. ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உள்ளபடி முதலீடுகள் பல கட்டங்களாக வருவதற்கு ஒருசில ஆண்டுகள் ஆகும் என்பதைக்கூட அறியாமல் உளறுவது நகைப்புக்குரியது.
அரசியல் நோக்கம்
இத்தகைய குற்றச்சாட்டுகள் தமிழ் நாட்டு மக்களின் முன்னேற்றத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்துடனும், குறுகியகால அரசியல் நாடகத்துக்காகவும் முன்வைக்கப்படுகின்றன. குற்றச்சாட்டுக் குரல் எழுப்புவோர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற தமிழ் நாட்டிற்குத் தேவையான முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் தர ஒன்றிய பாஜக அரசு மறுக்கும்போது மவுனம் காப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அதேபோல், தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் துறைக்கான நல்ல சூழல் இருந்தபோதும்கூட முக்கியமான செமிகண்டக்டர் திட்டங்கள் வேறு மாநிலங்களுக்குத் திருப்பிவிடப்படும்போதும் இவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்புவதில்லை.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை ஆதரிப்பதாகக் கூறிக்கொண்டே, மறுபுறம் தொழிற்பேட்டைகளுக்கான நிலம் கையகப்படுத்துவதை எதிர்ப்பதும், விமான நிலைய விரிவாக்கம் போன்ற வளர்ச்சிக்கான கட்டமைப்புகளை எதிர்ப்பதும் பெரும் முரண்பாடாக உள்ளது. எனவே, எதிர்க்கட்சியினர் தங்களின் குறுகிய அரசியல் நோக்கத்தைக் கைவிட்டு, தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை செலுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
