சென்னை, நவ. 21- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் பேட்டரி கார் சேவை உடனடியாக தொடங்கியது.
சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் பேட்டரி கார் சேவை இல்லாததால், கண் அறுவை சிகிச்சை செய்துள்ள மருத் துவ பயனாளிகள், வயதானவர்கள் கடும் சிரமப்பட்டனர். இது குறித்து நேற்று (20.11.2025) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவ மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியனை கைப்பேசியில் தொடர்புகொண்டு, இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று உத்தர விட்டார்.
பேட்டரி சேவை தொடங்கியது
இதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உபரியாக இருந்த ரூ.14 லட்சம் மதிப்பிலான 2 பேட்டரி கார்களை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டது.
அமைச்சர் மா.சுப்பிரமணி யன் இந்த சேவையை தொடங்கி வைத்து, கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட வயதான மருத்துவ பயனாளிகளுடன் அமர்ந்து பேட்டரி காரில் வலம் வந்தார். அவருடன் எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பரந்தாமன் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சித்ரா ஆகியோரும் பயணித்தனர். ஒரே சமயத்தில் இந்த பேட்டரி காரில் 10 பேர் பயணிக்கலாம்.
தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-
எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் பேட்டரி கார் இருந்தால் மருத்துவ பயனாளர்களுக்கு வசதியாக இருக்கும் என்று பொது மக்கள் பலர் கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் என்னிடம் இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண உத்தர விட்டார். புதிய பேட்டரி வாகனங்களை உடனடியாக வாங்குவதற்கு இயலாத காரியம் என்றாலும், ஏற்கனவே நமது அரசு மருத்துவமனைகளில் உபரியாக இருக்கும் பேட்டரி வாகனங்களை எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். அந்த வகையில் 2 பேட்டரி கார்களை இயக்கி வைத்துள்ளோம். இம்மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் முதியோர்கள் தடுமாற்றம் இன்றி பேருந்து நிலையத்திற்கு செல்லவும், அடுத்தடுத்து நிலையங்களில் மருத்துவ சேவை பெறுவதற்கு வசதியாக இருக்கும் என்கிற வகையில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
தமிழ்நாட்டில் 2 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு
மேலும் அவர் கூறும்போது, தமிழ் நாட்டில் பள்ளி-மாணவர் களில் பார்வை குறைபாடு பிரச் சினை மிகவும் பயங்கரமான அளவுக்கு வந்துள்ளது.
“இன்று வரை 27 லட்சத்து 90 ஆயிரத்து 93 மாணவர்கள் கண் பரிசோதனை மூலம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருக்கின்றனர். அதில் 2 லட்சத்து 14 மாணவர்களுக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப் பட்டது. அதன்பிறகு, இந்த ஆண்டு இறுதிக்குள் 3 லட்சம் பள்ளி மாண வர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்க அர சாங்கம் ஏற்பாடு செய்துள்ளது” என்றார்.
