ஆலந்தூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத ஒருவரை பாரதிய ஜனதா கட்சி வாக்குச்சாவடி முகவராக நியமனம் செய்துள்ளதாக, ஆலந்தூரைச் சேர்ந்த முகேஷ் குமார் என்பவர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
வாக்குச்சாவடி முகவர் நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையம் கொண்டுவந்த புதிய விதிமுறை மாற்றம், ஆளும் கட்சிகளுக்கு ஆதரவாகப் பயன்படுத்தப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு எழுந்துள்ளது.
முகேஷ் குமார் என்பவர் அளித்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
‘‘ஆலந்தூர் தொகுதியில் பா.ஜ.க-வால் வாக்குச்சாவடி முகவராக நியமனம் செய்யப்பட்டுள்ள சுப்பையா என்பவரின் பெயர், ஆலந்தூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் மட்டுமல்லாமல், வேறு எந்த வாக்காளர் பட்டியலிலும் இடம்பெறவில்லை.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளின்போது, ஒருவரை வாக்குச்சாவடி முகவராக நியமனம் செய்ய வேண்டுமானால், சம்பந்தப்பட்ட தொகுதிக்கு வாக்களிக்கும் உரிமை அவருக்கு இருக்க வேண்டும் என்பதே விதி!
வாக்காளர் உரிமையே இல்லாத ஒருவரை முகவராக நியமித்திருப்பது சட்டவிரோதமானது. எனவே, சுப்பையாவின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்று அவர் தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய விதிமுறை மாற்றம்: பின்னணி என்ன? சமீபத்தில் தேர்தல் ஆணையம் ஒரு விதிமுறை மாற்றத்தைக் கொண்டுவந்தது.
பழைய விதிமுறை: வாக்குச்சாவடி முகவர் என்பவர், அதே வாக்குச்சாவடியில் வாக்காளராக இருக்க வேண்டும் மற்றும் அப்பகுதி மக்களை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபடுதல் அல்லது பிழைகள் இருந்தால், அப்பகுதி மக்களுக்குத் தெரிந்த முகவராக இருந்தால், அவர்கள் தங்கள் கோரிக்கைகளை எளிதில் கூறி தீர்வு காண முடியும். அறிமுகமில்லாத நபராக இருந்தால், பொதுமக்கள் அளிக்கும் ஆவணங்கள் மற்றும் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
புதிய விதிமுறை: வாக்குச்சாவடி முகவர்களை அந்தத் தொகுதியின் எந்தப் பகுதியிலிருந்தும் நியமிக்கலாமாம்.
தேர்தல் ஆணையத்தின் இந்த விதிமுறை மாற்றமானது, ஆளும் கட்சியான பா.ஜ.க-வுக்குச் சாதகமாகச் செய்யப்பட்டுள்ளது என்பதே உண்மை. எல்லா வாக்குச் சாவடிகளுக்கும் முகவர்களை நியமிக்க பா.ஜ.க.வில் ஆள் பற்றாக்குறையே இதற்குக் காரணம்.
இதேபோன்ற ஒரு நிலைமை மேற்கு வங்கத்திலும் ஏற்பட்டது. அங்கு, அடையாளம் தெரியாத நபர்களை வாக்குச்சாவடி முகவர்களாக நியமித்தபோது, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா இதற்குக் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்தார்
தற்போது, தமிழ்நாட்டிலும் ஆலந்தூர் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயரில்லாத ஒருவர் வாக்குச்சாவடி முகவராக நியமிக்கப்பட்டிருப்பது, மேற்கு வங்க பாணியிலான “அடையாளம் தெரியாத முகவர்கள்” நியமனத்தைத் தமிழ்நாட்டிலும் பா.ஜ.க துவக்கிவிட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்த தில்லுமுல்லு செய்தாவது வெற்றி பெற முடியுமா என்ற போக்கில்தான் ஒவ்வொரு காயையும் பிஜேபி நகர்த்தி வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிஜேபியின் திருவிளையாடல்களுக்கு இடம் கொடுக்காமல் மிகவும் விழிப்புணர்வோடு தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சித் தோழர்கள் கண்காணிக்க வேண்டும்.
பட்டியலில் பெயர் விடுபட்டு இருந்தால், அதைச் சேர்ப்பதற்கும் முனைப்புக் காட்ட வேண்டும்.
வீட்டு எண்ணே இல்லாத வெறும் பூஜ்யம் என்ற கதவு எண்ணில் நூற்றுக்கணக்கானவர்களை – பீகாரைச் சேர்ந்தவர்களை வாக்காளர்ப் பட்டியலில் சேர்த்தவர்கள் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். பேர் வழிகள் என்பது நினைவில் இருக்கட்டும்!
உஷார்! உஷார்.
