நமது நாட்டில் பாமரனை விட படித்தவன் என்றால் அசல் மடையன் என்றுதான் சொல்ல வேண்டும். இங்கிலீஷ் படித்தால் புத்தி வரும். தமிழ் படித்தால் நாளுக்கு நாள் மடையனாகத்தான் முடியும்.
மேலும், நமக்கென்று ஒரு வரலாறு இல்லை, இலக்கியம் இல்லை. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பு வள்ளுவன் இருந்தான். அவன் வாழ்ந்த காலத்தில் 1,330 குறள்கள் எழுதியிருக்கிறானே என்று சொல்லுவார்கள். வள்ளுவன் வாழ்ந்த காலம் காட்டுமிராண்டிக் காலம். சாஸ்திரம், மதம், கீழ் ஜாதி, மேல்ஜாதி, கீழ் – மேலோகம் என்றெல்லாம் சொல்லி இருக்கிறானே தவிர, நாம் மாறுதல் அடைய வழியில்லையே.
ஜாதி ஒழிய வேண்டும், மதம் ஒழிய வேண்டும், கடவுள் ஒழிய வேண்டும் என்று சொல்லுவதற்கு அந்த அமைப்பில் கை வைக்கப் பயப்படுவதோடு மரியாதை வேறு செய்கிறானே, நம்முடைய முட்டாள்கள் இராமாயணத்தைப் படித்துப் பத்துப்பாட்டு மனத்தில் வைத்துக் கொண்டு திரிகிறவனுக்குப் பெயர் புலவன். அவனுக்கு இரண்டாவது கம்பன் என்று பட்டம்.
இராமாயணத்தில், ஜாதியைப் புகுத்திய பார்ப்பானை எவன் வணங்கவில்லையோ, அவனைத் துண்டு துண்டாக வெட்டியிருக்கிறான். இதையும் படித்துக் கொண்டு ஆடுகிறானே. உலகம் எந்த அளவுக்கு மேலே போய்க் கொண்டிருக்கிறது என்பதை உணர வேண்டாமா?
இரண்டு லட்சத்து முப்பத்தினாயிரம் மைல் கடந்து நிலவுக்குத் தாவுகிறான். ஒரு மணிக்கு அய்யாயிரம் மைல் வேகத்தில் மேலே போகிறான். இன்னும் கொஞ்ச நாள் போனால் மோட்டாரிலும், சைக்கிளிலும் போகக் கூடிய வசதி ஏற்பட்டு விடும். நம்முடைய ஆள் எங்கே போகிறான் என்றால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னா லிருந்த முட்டாள்தனத்தில் வடித்தெடுத்தக் காட்டுமிராண்டி தனத்துக்குப் போகிறானே?
படித்தவன் நிலையே இப்படி என்றால், படிக்காத பாமரன் நிலைமை எப்படி இருக்கும்? நம்முடைய அறிவு எங்கே? வெளிநாட்டான் அறிவு எங்கே?
தமிழ் படித்தவர்கள் சொல்லுவார்கள். வெளிநாட்டான் தோன்றுவதற்கு முன் நாம் தோன்றியவர்கள் என்று; அப்படிப் பட்ட நாம் என்ன செய்தோம்? எதைக் கண்டுபிடித்தோம்? மின்சாரம், மோட்டார், ரேடியோ, ரயில் போன்ற சாதனங்கள் ஏதாவது ஒன்று சொல்ல முடியுமா?
அல்லது மகான், மகாத்மா, அரவிந்தர், சங்கரர், விவேகாநந்தர் போன்றவர்கள்தான் எதைக் கண்டுபிடித்தார்கள்? மக்களுக்கு என்ன வழி காட்டினார்கள்? தினசரி ஒரு கடவுளை உண்டாக்கியதைத் தவிர, வெளிநாட்டில் காந்திக்கு மரியாதை உண்டா? ரஷ்யா போன்ற நாடுகளில் கடவுள், ரிஷி, மகாத்மா இருக்க முடியுமா என்று கேட்கிறேன்.
நாரதன் எத்தனையோ யுகம் உயிரோடு இருந்திருக்கிறான் என்று எழுதியிருக்கிறானே, அது நடக்கக் கூடிய காரியமா? வசிஷ்டர், விசுவாமித்திரர் எல்லாம் எழுதி வைத்திருப்பதாகச் சொல்லுகிறார்களே, அவற்றை மறுத்து சொல்ல யாராவது ஒருவர் என்னைத் தவிர காட்டுங்கள் பார்ப்போம். ஏன் இதுவரை வரவில்லை.
நமது நாட்டிலுள்ள குப்பைக் கூளங்களுக்கெல்லாம் இலக்கியம் என்று பெயர். அதில் ஆரியம் கலக்காத நூல் எது? நாம் எதை சங்க இலக்கியம் என்று சொல்கிறோமோ, அதில் எல்லாம் ஆரியக் கலப்பு இருக்கிறதே!
அவைகளை எல்லாம் கண்டு மனம் பொறுக்காத நிலையில் எங்களுடைய வாய்ப்பு – வசதிகளை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு உண்மை நிலையை மக்கள் உணரச் செய்ய வேண்டும் என்று 1925-இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி அதன்மூலம் கடவுளை ஒழி, மதத்தை ஒழி, ஜாதியை ஒழி, அதற்கு ஆதாரமாக இருக்கிற புராண, இதிகாசங்களை ஒழி என்று சொன்னேன்.
அப்பொழுது 100-க்கு 5 பேர்கள் தான் படித்தவர்கள். உத்தியோகத்தில் ‘அடா’ என்று அழைப்பதெல்லாம் பார்ப் பானுக்கு! ‘சாமி – எஜமான்’ என்று அழைப்பதெல்லாம் நமக்கு! நடுரோட்டில் நடக்கக்கூட நமக்கு உரிமை இல்லையே.
உலகத்தில் கோவில் – சாமி – மதம் இல்லாத நாடு எத்தனையோ இருக்கிறது. மனித வளர்ச்சிக்கு வாழ்வுக்கு வேண்டிய வசதிகளைச் செய்கிறார்கள், இங்கே பெரியவர்கள் போட்ட அஸ்திவாரத்தைத் தொடாதே என்றால், நமது முன்னோர்கள் சொன்னார்கள் என்றால், முன்னோர்கள் என்றால் யார்? குரங்குகள் தானே? வாலிபர்கள் இவைகளை எல்லாம் நல்லவண்ணம் சிந்தித்துத் துணிவு கொள்ள வேண்டும்.
உலக நாடுகளில் ரஷ்யாவைத் தவிர, மற்றெல்லா நாடுகளிலும் மனிதனுடைய அறிவு வளர்ச்சி அடைய பகுத்தறிவு சங்கம், அறிவு வளர்ச்சி சங்கம், உண்மை நாடுவோர் சங்கம், தாராள சிந்தனையாளர் சங்கம் என்பது போன்ற பெயரில் பல சங்கங்கள் இருக்கிறது. ஒவ்வொரு சங்கத்திற்கும் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவற்றை நான் நேரில் கண்டு அவர்களிடம் உரையாடி மகிழ்ச்சியடைந்திருக்கிறேன்.
அதுபோலவே இங்கும் ஏற்பட வேண்டும். திருச்சி, மதுரை, சென்னை போன்ற இடங்களில் இப்போது ஏற்பட்டிருக்கிறது. நமக்குப் பகுத்தறிவு வளர சாதனம் இடம் இல்லையா னால், கல்லில்தானே போய் முட்டிக் கொள்ள வேண்டும். இப்படியே இன்னும் 50 ஆண்டுகள் சென்றால் நாம் எப்படி இருப்போம் என்பதை எண்ணிப் பாருங்கள். உலக அறிவாளிகள் சிந்தனா சக்தியுள்ளவர்கள். அவர்களின் சிந்தனா சக்தியை இந்த நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். போற்றவும் செய்கிறார்கள். இங்கே இந்தியா பூராவும் ஒருவரைக் காட்டுங்கள் பார்க்கலாம்?
பாவம், புண்ணியம், ஆத்மா, நரகம் இன்னும் இவை போன்றவைகளைப் பற்றிப் பேசுகிற சாமியார்கள் இருக்கிறார்களே தவிர, அறிவாளி என்று ஒருவரையும் காண முடியவில்லையே.
அய்.நா. கல்வி பண்பாட்டுக் கழகம் என்று யுனெஸ்கோவில் இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு அவர்கள் ஆசியாவிலேயே ஒரு அறிவாளி என்றும், ‘புது உலக தீர்க்கத்தரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்” என்று எனக்கு விருது ஒன்றைக் கொடுத்துள்ளார்கள்.
இது எப்படியோ இருந்தாலும், இந்தியாவிலேயே கடவுளுக்கு நேர் எதிரி என்று ஒருவரைக் காணோமே, அவர்கள் ரஷ்யாவில் உலக நாடுகளில் எத்தனை பேர்களைக் கண்டிருக்கலாம்? என்னைத் தவிர, வேறு ஒருவர் அவர்கள் கண்ணுக்குத் தென்படவில்லை என்றால் நமது நாட்டையும், மக்களையும் என்னவென்று சொல்லுவது?
நான் வெளிநாடு சென்றிருந்தபோது ரஷ்யாவில் ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுச் சிறுவர்களின் பாடப் புத்தகத்தில் ‘இந்தியா என்பது காட்டுமிராண்டி நாடு. அதில் வாழும் மக்கள் எல்லோரும் காட்டுமிராண்டிகள்’ என்று எழுதியிருந்தது. அங்கு மட்டுமல்ல, உலகத்தில் எல்லோரும் அப்படித்தான் நம்மை எண்ணுகிறார்கள்.
நமக்கு அறிவு உண்டு. அதற்கு மதிப்புக் கொடுத்தால் உலகத்தில் உயர்ந்து வாழலாம். அதற்கான வாய்ப்புகள் இருக் கிறது. அதற்கேற்றபடி நம்முடைய நிலைமையைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் யாருக்கும் விரோதிகள் அல்ல, நம்முடைய மக்கள் வளர்ச்சிக்கு உலக மக்களிடம் சரி சமமாக வாழ வகை என்ன என்பதைச் சிந்தித்து நடக்க வேண்டும்.
நான் சொல்வதுதான் பகுத்தறிவு என்று சொல்லவில்லை. உங்களுடைய அறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறேன். நம்முடைய கருத்தை நாட்டில் சொல்லியவர்கள் தான் இன்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இதை பார்க்கிறபோது நம்முடைய மக்கள் எங்கள் கருத்துக்கு ஆதரவு தருகிறார்கள் என்று தானே பொருள். கம்யூனிஸ்டுகள் ஜாதி – மதம்- கடவுளைப் பற்றிப் பேசமாட்டார்கள் – பணக்காரனைப்பற்றிதான் பேசுவார்கள்.
காந்தியார், கோயில் என்பது குச்சுக்காரிகள் வீடு என்றார். அதற்காக இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டான். அதுவும் இந்த நாட்டில்தானே நடந்தது. எங்களுடைய முயற்சி சாதாரண காரியமல்ல, மரண முயற்சி. எங்களைத் தவிர, இந்தியாவில் இந்த கொள்கையைப் பேச ஆள் இல்லை. ஒவ்வொருவரும் பெரு முயற்சி எடுத்துக் கொண்டு ஜாதி – மத – கடவுள் ஒழிப்புக்குப் பாடுபடவேண்டும். அதுபோலவே தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்கள் மக்கள் அறிவு வளர்ச்சி பெற பாடுபட வேண்டும்.
(15.9.1970 அன்று பங்களாப்புதூரில் நடைபெற்ற பாராட்டு விழாக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை – ‘விடுதலை 6.10.1970)
