ஸ்பெயினைச் சேர்ந்த உடற் பயிற்சியாளர் பீட்ரிஸ் ஃப்ளாமினி – கோவிட் தொற்று காரணமாக உலகமே வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தபோது, இவர் தனியாக ஒரு குகைக்குள் வாழ வேண்டும் என்று முடிவெடுத்தார். இவரது எண்ணத்தை அறிந்த ஆராய்ச்சி யாளர்கள், வெளியுலகத் தொடர் பின்றி ஒரு மனிதரால் வாழ முடியுமா, அப்படி வாழும் போது மன நிலையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதை எல்லாம் அறிந்துகொள்ள முடிவெடுத்தனர்.
48 வயது ஃப்ளாமினி ஸ்பெயினில் கிரானடா பகுதியில் உள்ள குகைக்குச் சென்றார். 70 மீட்டர் (230 அடி) ஆழமுள்ள குகைக்குள் 2021 நவம்பர் மாதம் நுழைந்தார். குகையின் வாயிலுக்கு வேலி போடப்பட்டது.
500 நாள்களுக்குப் பிறகு 2023 ஏப்ரலில் ஃப்ளாமினி வெளியே வந்தபோது, பெருந் தொற்று காலம் முடிந்து உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது இவருக்குத் தெரி யாது. ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தது தெரியாது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்ததும் தெரியாது. இவருக்கு 50 வயதானதும்கூடத் தெரியாது. கடந்த 500 நாள்களில் வெளி உலகில் என்ன நடந்தது என்று எதுவும் தெரியாது. ஃப்ளாமினி மனிதர்கள் யாரிடமும் தொடர்பில் இருக்க வில்லை. ஆனால் உளவியலாளர்கள், விஞ்ஞானிகள் குழுவினரால் கண் காணிக்கப் பட்டார்.
வெளியுலகத்துக்கு வந்தபோது, வெளிச் சத்தைக் கண்டு அவரது கண்கள் கூசின. அதனால் கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டார். உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் காணப்பட்டார்.
“சூரிய வெளிச்சம் இல்லாத குகை. உள்ளே சென்ற சில வாரங்கள் வரை நாள்களை எண்ணிக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு விட்டுவிட்டேன். விளக்கின் வெளிச்சத்தில் படித்தேன். கம்பளி நூலால் தொப்பிகளைத் தைத்தேன். ஓவியம் தீட்டி னேன். உடற் பயிற்சி செய்தேன். எனக்கு நானே பேசிக் கொண்டேன். ஈக்கள், சிறிய பூச்சிகளைத் தவிர, இந்தக் குகையில் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. குறைவான உணவே எடுத்துக் கொண்டேன். ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடித்தேன். 160, 170 நாள்கள் குகைக்குள் இருந்திருப்பேன் என்று நினைத்தேன். ஆனால், 500 நாள்கள் குகைக்குள் இருந்தேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. உலகத் தொடர்பு இன்றி, தனிமையில் இருந்த அனுபவம் அற்புதமானது” என்று தெரிவித்தார் ஃப்ளாமினி.
500 நாள்களில் 60 புத்தகங்களைப் படித்திருக்கிறார். 1000 லிட்டர் தண்ணீரைக் குடித்திருக்கிறார்.
ப்ளாமினி 500 நாள்கள் முழுவதுமாகத் தனிமைப்படுத்தப்பட்டதை ஒரு சாதனை யாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மிக முக்கியமாக, அவரது தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள் விலைமதிப்பற்றதாக இருக்கும் என்று எண்ணுகிறார்கள்.