‘டி.எம்.நாயர் – தியாகராயர் – நான்’ நாங்கள் இராட்சதர்களாக்கப்பட்டது எப்படி?

2 Min Read

தோழர்களே! நீங்கள் யோசிக்க வேண்டுவது அவசியம். டாக்டர் நாயர் போன்ற பெரியார் ஏன் ‘பாவி’யாக்கப்பட்டார்? நான் ஏன் பாவி யாக்கப்பட்டிருக்கிறேன்? முன்பெல்லாம் டாக்டர் நாயர் வெளியே செல்லுகிறார் என்றால் அவரோடு ஒரு துப்பறியும் சப்-இன்ஸ்பெக்டரும் மாறு உடையில் உடன் செல்வாராம். அதுசமயம் நான் ஓர் இளைஞன். ஒருசமயம் ஏதோ ஒரு பொது அலுவலாக அவர் ஈரோட்டுக்கு வந்திருந்தார். அவருடைய சாமான்களை எல்லாம் இரயிலடியிலேயே விட்டுவிட்டு வந்திருந்தார். அவருடைய நண்பர் ஒருவர், ‘யாருடைய பாதுகாப்பில் சாமான்கள் விடப்பட்டிருக்கின்றன?’ என்று கேட்கவும், தனக்குக் காவலாக ஓர் இரகசிய போலிஸ் இன்ஸ்பெக்டர் அனுப்பப்பட்டிருப்பதாகவும், வேறு நபர் தன்னுடன் இல்லாமையால் அவரிடமே தன் சாமான்களை ஒப்புவித்துவிட்டு வந்ததாகவும் தெரிவித்தார். ஓர் இரகசிய போலீஸ் அதிகாரி பின்பற்றும் அளவுக்கு தேசியவாதியாய் இருந்த அவர்தான் – பிறகு ‘தேசத் துரோகி’யாக்கப்பட்டார். ஆரம்பத்தில் பார்ப்பனரல்லாதவர்களுக்கு விரோதமாக தேசியப் போர்வையில் பார்ப்பனர்களை ஆதரித்தவர்தான் அவர். நானும் ஆரம்பத்தில் பார்ப்பனர்களுக்கு ஆதரவாயிருந்து பார்ப்பனரல்லாதார் தேர்தலை எதிர்த்தவன்தான். பிறகுதான் உண்மை உணர்ந்து நாங்கள் பார்ப்பனரல்லாதாரோடு ஒன்றானோம்.

ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களில் மிக முக்கியமானவரான சர்.பி. தியாகராயச் செட்டியார் கூட ஆரம்பத்தில் தேசியவாதி யாக இருந்தவர்தான். 1914-இல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் காரியதரிசியாயிருந்து அரும்பெரும் தொண்டாற்றியவர்தான் அவர். பிறகுதான் அவரும் இன உணர்ச்சி பெற்றார். ஆகவே, நாங்களெல்லாம் துவக்கத்திலேயே ‘இராட்சதர்களாக’ ஆக்கப்பட்டவர்கள் அல்லர். அடிமைகளாயிருந்து பிறகு அவர்களின் கொடுமை தாங்கமுடியாமல், இழிவு பற்றிய உணர்ச்சிபெற்று விழிப்படைந்தவர்கள் தாம் நாங்கள். அப்படி மான விழிப்புணர்ச்சி பெற்ற பிறகு தான் நாங்கள் ‘இராட்சதர்களா’க்கப்பட்டோம்.

பிறகுதான் அவர்கள் எங்களை விட்டுவிட்டு வேறு விபிஷணர்களைப் பிடிக்க ஆரம்பித்தார்கள். உத்தியோகத்தில் நம் இனத்தவருக்கு உரிய பங்கு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்த பிறகுதான், காங்கிரஸ் ஸ்தாபனம் வேறுபக்கம் பார்க்க ஆரம்பித்தது. அதுவரை அது வெறும் உத்தியோகக் கோரிக்கை ஸ்தாபனமாகத் தான் இருந்து வந்தது.

காங்கிரசின் ஆரம்பகால சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் இதன் உண்மை விளங்கும். அப்போதெல்லாம் காங்கிரஸ் மாநாடுகளில் முதலாவதாக இராஜவிசுவாசப் பிரமாணத் தீர்மானம் நிறைவேற்றப்படும். வெள்ளையரை இந்நாட்டுக்கு அனுப்பியதற்காகக் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படும். அவர்கள் ஆட்சி நீடூழி காலம் இருக்கவேண்டுமென்று வாழ்த்துச் செய்யப்படும். சென்னையில் 1915-இல் நடைபெற்ற மாநாட்டில் இம்மாதிரி இராஜ விசுவாசத் தீர்மானம் காலை ஒருமுறையும், மாலையில் கவர்னர் விஜயத்தின்போது மற்றொரு முறையும் ஆக இரண்டு முறைகள் நிறைவேற்றம் ஆகியது எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருந்துவருகிறது.

ஆகவே, வெள்ளையர் வழங்கிய உத்தியோக சலுகைகளில் நம் இனத்தவருக்கும் உரிய பங்கு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்த பிறகுதான் – வெள்ளையர்களும் கொஞ்சம் நமக்குச் சலுகை தர ஆரம்பித்த பிறகுதான் – காங்கிரஸ் இயக்கமானது ஒரு தேசிய ஸ்தாபனமாக மாறி, வெள்ளையர்கள் வெளியேற வேண்டும் என்று கூறிற்றே ஒழிய,  அதுவரை அது பார்ப்பனர்களுக்குப் பதவி தேடித் தரும் ஸ்தாபனமாகத்தான் இருந்துவந்தது என்பது கண்கூடு.

( ‘விடுதலை’ – 14.12.1950)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *