1919ஆம் ஆண்டு பீதாபுரம் மகாராஜா ஒரு தீர்மானத்தை சென்னை மாகாணக் கவுன்சில் மூலம் அரசுக்கு கொடுத்தார்.
“நமது சட்டமன்றக் குழு, தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சமுதாயத்தில் வஞ்சிக்கப்பட்டவர்களுக்கும் தண்ணீர் எடுக்கும் கிணறு, பொதுச் சாலைகள், நீதிமன்றங்கள், சத்திரங்கள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசாங்கத்தால் நடத்தப்படும் அல்லது அரசு உதவி பெற்று இயங்கி வரும் ஸ்தாபனங்களில் முழு உரிமைகள் கிடைக்க வேண்டி ஆளுநர் அவர்கள் சரியான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும்.”
அப்போதிருந்த உள்துறை உறுப்பினர் (அமைச்சர்) சர் சைக்ஸ் தோதுண்டர் எழுதியது, பக்கம் 4-7 அரசு உத்தரவு 23லும் (தேதி 8.1.1920) காணப்படுகிறது.
அப்போது அவர் எழுதியது வருமாறு:
“ஜாதியை உடனே ஒழித்துவிட முடியாது. மக்களின் அபிப்பிராயத்துக்கு எதிராக நாம் முயற்சி செய்தால் நல்லதை விட கெடுதலே அதிகம் விளையும். சமுதாயத்தின் மொத்த நன்மைக்காக நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்.
ஜாதியில் உயர்வு, தாழ்வுகளைக் கடைப்பிடித்துவரும் கல்வி நிலையங்களுக்கு அரசாங்கம் செய்துவரும் உதவிகளை நிறுத்த வேண்டும் என்று அபிப்பிராயம் சொல்லப்பட்டு வருவதை அரசு கடைப் பிடித்தால் எல்லாப் பள்ளிக் கூடங்களும் அதை நடத்துபவர்களால் இழுத்து மூடப் பட்டு விடும். இதனால் சமுதாயத்தில், பெரும்பான்மையானவர்களுக்கு உள்ள கல்வி வாய்ப்பும் வீணாக்கப்பட்டு விடும் என்பதால் அரசாங்கம் இதிலெல்லாம் நன்றாக சிந்தித்துதான் செயல்பட முடியும். சமுதாயத்தில் உள்ள ஒரு பிரிவினருக்கு நன்மை செய்யப்போக, அது இன்னொரு பிரிவினருக்கு கெடுதலாக முடிந்துவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் கண்ணுங் கருத்துமாய் இருக்க வேண்டும் என்பது முக்கியம். நாம் செய்யும் நன்மைகள் பெருவாரியான மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.” இந்த தீர்மானம் நிறைவேறவில்லை.
இந்த தீர்மானம் நிறைவேறாததால் நீதிக்கட்சி முன்னெடுத்த முயற்சியில் அப்போது வெற்றி கிட்டிடவில்லை.
