ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் W.P.A.சவுந்தரபாண்டியன் அவர்கள் மோட்டார் கம்பெனி முதலாளிகளுக்குப் பின்வருமாறு ஒரு சுற்றுக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அது வருமாறு:
“இந்த ஜில்லாவிலுள்ள சில மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஆதி திராவிடர்களை தமது ‘பஸ்களில்’ ஏற்றிக் கொண்டு போவதில்லையென்றும், டிக்கெட்டில், “ஆதி திராவிடர்களுக்கு டிக்கட்டு கொடுக்கப்பட மாட்டாது” என்றும் நிபந்தனை எற்படுத்தியிருப்பதாகவும் அறிகின்றோம். இவ் வழக்கம் பிரயாணிகளுக்கு இடைஞ்சல் உண்டுபண்ணத் தக்கதாகவும், மிக அக்கிரமமான தாகவும் இருக்கிறது. ஆகவே, மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஏதேனும் ஒரு சமூகத்தாரை பஸ்சில் ஏற்றிச் செல்ல மறுக்கவோ டிக்கெட்டுகளில் மறுப்பு விதிகள் அச்சிடவோ செய்தால் அவர்களுடைய லைசென்சு, முன்னறிக்கை கொடாமலே ரத்து செய்யப்படுமென இதனால் எச்சரிக்கை செய்கிறோம். இந்தச் சுற்றுக் கடிதம் கிடைத்து ஒரு வாரத்துக்குள் அந்தத் தடை விதி நீக்கப்பட்டதா அல்லவா என்று சாம்பிள் டிக்கெட் டுடன் ரிப்போர்ட் செய்து கொள்ள வேண்டும்.
( ‘குடிஅரசு’ – 4.5.1930, பக்.13)
