நீதிக்கட்சியை நிறுவிய டாக்டர் டி.எம். நாயர் 1919ஆம் ஆண்டிலும்; பிட்டி தியாகராயர் 1925ஆம் ஆண்டிலும் மறைந்திடவே, பொப்பிலி அரசர் அக்கட்சியின் தலைவராகி 1932 முதல் 1936 வரை சென்னை மாகாண முதலமைச் சராகவும் விளங்கினார்.

1937இல் நடைபெற்ற சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியடைந்து, காங்கிரசு வெற்றிபெற்று. இராஜாஜி முதலமைச்சர் ஆனார். அப்போது அவர் கொண்டுவந்த கட்டாய இந்தி சட்டத்தை எதிர்த்துப் போராடிய தந்தை பெரியார் அவர்கள், 26.11.1938இல் கைது செய்யப்பட்டு. முதலில் சென்னை மத்திய சிறையிலும், பின்னர் 16.2.1939 அன்று பெல்லாரி சிறையிலும் அடைக்கப்பட்டார்.
அக்காலகட்டத்தில், 1938 டிசம்பர் 29, 30, 31 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 14ஆவது மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் நீதிக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டிற்கு முன்பாக, பெரியார் பெல்லாரி சிறைக்குள் அடைபட்டிருப்பதுபோல் வடிவமைக்கப்பட்ட அலங்கார வண்டி ஊர்வலமாய் வந்தது. மாநாட்டு மேடையில் தலைவரின் நாற்காலியில் பெரியாரின் உருவப்படம் பெரிதாக வைக்கப்பட்டிருந்தது. “என் தோளுக்குச் சூட்டிய மாலையைப் பெரியாரின் தாளுக்குச் சூட்டுகிறேன்” என சர். ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் நா தழுதழுக்க, தமது பெருமீசை துடிதுடிக்கக் கூறி, தமக்கு அணிவிக்கப்பட்ட மாலையைப் பெரியார் படத்திற்குச் சூட்டினார். சிறையிலிருந்து விடுதலையாகிய பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று சமத்துவ, சமதர்ம கொள்கைகளைப் பரப்பி வந்தார்.
