சேலம், நவ.20- தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் (18.11.2025) இரவு சேலத்திற்கு வந்தார். பின்னர் அவர் சேலம் குமாரசாமிப்பட்டி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் திடீரென ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து இரவில் சேலத்தில் உள்ள ஆய்வு மாளிகையில் தங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (19.11.2025) அதிகாலை ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி கிராமத்தில் இருந்து கருங்காலி, குடவம்பட்டி வழியாக 23.5 கிலோ மீட்டர் தூரம் ஏற்காடு மலைக்கிராமங்களுக்கு நடந்தே சென்ற மக்களை சந்தித்தார். அவருடன் மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் யோகானந்த் மற்றும் அதிகாரிகளும் நடந்து சென்றனர். அப்போது அமைச்சர் நடந்து செல்லும் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சொனப்பாடி மலைக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களை சந்தித்து மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து கலந்துரையாடினார்.
