1916 நவம்பர் 20–ஆம் நாள் – பார்ப்பனரல்லாத மக்கள் மறக்கவே முடியாத – மறக்கவே கூடாத வரலாற்றுச் சிகரத்தில் முத்திரைக் கொடியைப் பறக்க விட்ட நாள்.
அந்நாளில்தான் ‘தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்’ பிறந்த பொன்னாள்! இந்தச் சங்கம் ‘ஜஸ்டிஸ்’ என்ற பத்திரிகையை நடத்திய காரணத்தால், அந்தப் பெயராலேயே ‘ஜஸ்டிஸ்’ கட்சி என்றும், தமிழில் ‘நீதிக்கட்சி’ என்றும் அழைக்கப்படலாயிற்று.
டாக்டர் சி. நடேசனார், ‘வெள்ளுடைவேந்தர்’ சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் ஆகிய பெரு மக்கள் இவ்வமைப்புத் தோற்றம் பெற்றதற்கு ஆயுத எழுத்துகளாக (ஃ) இருந்தனர் என்று சொல்லுவதே பொருத்தமானதாகும்.
1916 டிசம்பர் 20ஆம் தேதி வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயரால் சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஒரு ‘கொள்கை அறிக்கை’ வெளியிடப்பட்டது.
அது நீதிக்கட்சியின் கொள்கை அறிக்கை மட்டுமல்ல; அந்தக் கால கூட்டத்தில் பார்ப்பனர் ஆதிக்கத்தையும் பார்ப்பனர் அல்லாதாரின் பரிதாப நிலையையும் விவரிக்கும் புள்ளி விவரங்கள் அடங்கிய ஆதாரப் பூர்வமானதாகும்.
சென்னை மாநிலத்தின் மக்கள் தொகை நான்கரைக் கோடியாகும். அதில் பார்ப்பனர் அல்லாதார் 4 கோடியாகும். பார்ப்பனர்களோ 15 லட்சம் பேர்களே!
ஆனால் ஆதிக்கம் யார் கையில் இருந்தது என்பது தான் முக்கியம். 1892 முதல் 1904 வரை நடைபெற்ற போட்டித் தேர்வுகளில் இடம் கிடைக்கப் ெபற்ற பார்ப்பனர்கள் 15 பேர்; பார்ப்பனரல்லாதாருக்குக் கிடைத்த இடம் ஒன்றே ஒன்றுதான்!
சென்னை மாகாணத்தில் உதவிப் பொறியாளர் வேலையில் பார்ப்பனருக்குக் கிடைத்த இடம் 17, பார்ப்பனர் அல்லாதாருக்கு வெறும் 4 இடங்கள் தான். சென்னை மாகாணத்தில் உதவி கலெக்டர் 140 இடங்களில் பார்ப்பனருக்குக் கிடைத்த இடங்கள் 77, பார்ப்பனர் அல்லாதாருக்குக் கிடைத்தவை 30 இடங்கள், ஏனைய இடங்கள் அய்ரோப்பியர் – ஆங்கிலோ இந்தியர்களுக்குக் கிடைத்தன. எடுத்துக்காட்டாக இவை தரப்படுகின்றன.
இவ்வாறு காணப்படும் பார்ப்பனர் ஆதிக்கத்திற்குக் காரணம் என்ன கூறப்பட்டது? பார்ப்பனர் அல்லாதாரைவிட கல்லூரிப் படிப்புப் பெற்ற பார்ப்பனர்கள் அதிகமாக இருப்பதால்தான் அரசாங்க அலுவலகங்களிலும், பிற நிறுவனங்களிலும் அவர்கள் அதிகமாக இருக்கின்றனர் என்பர்.
பழங்காலந் தொட்டு அவர்களால் உருவாக்கப்பட்ட பாரம்பரியம், இந்துக்களிலேயே உயர்ந்த ‘புனித’மான ஜாதி என்று கருதும் தன்மை, நிலையான நம்பிக்கை, இவற்றை நூல்கள் வாயிலாகவும், வாய் மொழியாகவும் சொல்லிச் சொல்லி, தாங்களே ஏனையோரைவிட உயர்ந்தவர்கள், தாங்களே கடவுளின் நேரடிப் பிரதிநிதிகள் என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டனர் – என்ற கருத்து மிக்க தகவலை வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயர் 110 ஆண்டுகளுக்கு முன்பே ‘புகழ் பெற்ற பார்ப்பனர் அல்லாதார் கொள்கையில்’ (Non–Brahmin Manifesto) வெளியிட்டார் என்பதைக் கவனிக்க வேண்டும்.
இந்தக் கால கட்டத்தில் தான் தமிழ்நாடு காங்கிரஸில் முக்கிய பொறுப்புகளில் இருந்த தந்தை பெரியார் வகுப்புரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததும், பார்ப்பன ஆதிக்கப் புரியாக அந்தக் காலத்துக் காங்கிரஸ் அதனை நிராகரித்ததுமான நிலையில், காங்கிரசை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில் சென்னை மாகாணத்திற்கு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் (1920 நவம்பர் 20) நீதிக்கட்சி 98 தொகுதிகளில் பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றி பெற்றது. இவ்வகையில்கூட
‘நவம்பர் 20’ – என்னே சிறப்பு!
அப்போது, வெள்ளுடை வேந்தர் பிட்டி. தியாகராயர் அமைச்சரவைக்குத் தலைமை தாங்க வேண்டியிருந்த நிலையில், அதனை ஏற்காமல் கடலூர் ஏ. சுப்பிராயலு (ரெட்டியார்) அவர்களைப் பிரதம அமைச்சராக்கினார். (நீதிக்கட்சித் தலைவராகப் பிற்காலத்தில் வந்த தந்தை பெரியாருக்குப் பிரதம அமைச்சர் பதவி பிரிட்டீஷ் அரசாங்கத்தால் வலிய வந்தும், அதனை ஏற்க மறுத்ததை இந்த இடத்தில் நினைவு கூர்தல் பொருத்தமானதாகும்).
‘நீதிக்கட்சி ஆட்சி’ என்பது – பார்ப்பனர் அல்லாதவர் களின் வரலாற்றில் திருப்பம் நிறைந்த பொற்காலமாகும்.
இந்தியாவிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது நீதிக்கட்சி ஆட்சியேயாகும் (1921).
நீதிக்கட்சி ஆட்சியில் 1921, 1922, 1923ஆம் ஆண்டுகளில் வகுப்புரிமைக்கான ஆணைகளும், சட்டங்களும் கொண்டு வரப்பட்டாலும், அப்பொழுது பார்ப்பன அதிகார வர்க்கத்தின் முட்டுக்கட்டைகளால் (அப்பொழுது இரட்டை ஆட்சிமுறை) செயல்பாட்டுக்கு வர முடியாத நிலை!
கடைசியில் நீதிக் கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்ச ராகவிருந்த எஸ். முத்தையா முதலியார் அவர்களின் முயற்சியால் வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை செயல்பாட்டுக்கு வந்தது (G.O. Ms No.1880 Education Dated 15.9.1928 Amd 27.2.1929 and 29.8.1929).
முத்தையா முதலியார் அவர்களை இதற்காக தந்தை பெரியார் பல படப் புகழ்ந்தார். பார்ப்பனரல்லாதார் குடும்பத்தில் பிறக்கும் ஆண் குழந்தைக்கு முத்தையா என்றும், பெண்ணுக்கு முத்தம்மாள் என்றும் பெயர் சூட்ட வேண்டும் என்றார்.
இன்றைக்கு இந்தியாவிலேயே 9ஆவது அட்டவணைப் பாதுகாப்புடன் தமிழ்நாட்டில் 69 விழுக்காடு – திராவிடர் கழகத்தின் முயற்சியால் இடஒதுக்கீடு, பீடு நடைபோடுகிறது என்றால், அதன் பின்னணியில் நீதிக்கட்சியின் தொடக்கம் இருப்பதை நன்றியுடன் நினைவு கூர்வோம்.
உயர் தட்டு உத்தியோகங்களில் பார்ப்பனர்களே பெரும்பாலும் இருந்தமையால், எழுத்தர் பதவிக்குக்கூட பார்ப்பனர் அல்லாதாருக்குக் கதவடைப்பு ஏற்பட்ட சூழ்நிலையில் ‘ஸ்டாஃப் செலக்ஷன் போர்டு’; கல்லூரிகளில் பார்ப்பனர் அல்லாதாருக்கும் வாய்ப்புக் கதவு திறக்கப்பட ‘செலக்சன் போர்டு’; சென்னைப் பல்கலைக் கழக செனட்டில் எல்லா வகுப்பினருக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வழிகோலும் வகையில் சென்னைப் பல்கலைக் கழகச் சட்டம் (Madras University Action 1923); சிதம்பரம் ்அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தொடங்க உறுதுணை (1929); பொதுக் குளம், கிணறுகளில் தாழ்த்தப்பட்டோர் புழங்க இரட்டைமலை சீனிவாசன் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம் (22.8.1924); இந்து அறநிலையத்துறை பாதுகாப்புச் சட்டம்; மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கம்; தேவதாசி ஒழிப்புச் சட்டம்; பதவி உயர்விலும் இடஒதுக்கீடு ஆணை – என்றவாறு பார்ப்பனர் அல்லாதாரின் உரிமை வாழ்வுக்கு எவ்வாறெல்லாம் உதவிக்கரம் நீட்டியது நீதிக்கட்சி என்பது வரலாற்றுக் கல்வெட்டு!
நீதிக்கட்சி 1937 தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் சென்னையில் கூடிய ‘நீதிக்கட்சி’யின் 14ஆவது மாநாட்டில், தந்தை பெரியார் ஹிந்தி எதிர்ப்புக்காக சிறையில் இருந்தபோது, நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எப்பொழுதுமே பொறுப்புகள் தந்தை பெரியாரைத் தேடி வந்தன என்பதுதான் வரலாறு.
ஒரே நேரத்தில் சுயமரியாதை இயக்கத்துக்கும், நீதிக்கட்சிக்கும் தலைவராக இருந்த பெருமை தந்தை பெரியாருக்கே உண்டு.
நீதிக்கட்சியின் கோட்பாடுகளில், சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை இணைத்து சேலத்தில் 1944 ஆகஸ்டு 27இல் கூடிய நீதிக்கட்சி மாநாட்டில் ‘‘திராவிடர் கழகம்’’ என்று பெயர் மாற்றம் தந்தை பெரியாரால் செய்யப்பட்டது என்பது வரலாறு.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சமூக நீதிக்கான சரித்திர நாயகராம் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் ஆட்சி என்பது – ‘நீதிக்கட்சியின் நீட்சியே’ என்பது நினைவிலிருக்கட்டும்.
அந்த அடிப்படையில் தான் சமூகநீதி, மதச் சார்பின்மை, பாலியல் நீதி, சம தர்மம், சமத்துவக் கொள்கையின் அடிப்படையில் இந்தியாவுக்கே வழி காட்டும் முதல் நிலை ஆட்சியாக ‘திராவிட மாடல்’ அரசு மலர்ந்து மணம் கமழ்கிறது.
நீதிக்கட்சியின் 110ஆம் ஆண்டில், அதன் நீட்சியான திராவிட மாடல் அரசு மீண்டும் மலர்ந்திட வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளில் வீர உறுதிமொழி எடுப்போம்!
வாழ்க பெரியார்!
வெல்க திராவிடம்!!
