கோவை, நவ. 20- எஸ்.அய்.ஆர். (SIR) என்பது தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு செய்த மிகப்பெரிய ஜனநாயக மோசடி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
இது தொடர்பாக கோவையில் நேற்று (19.11.2025) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“கடந்த மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கோவை உள்ளிட்ட 19 நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது திடீெரன இத்திட்டம் கோவையில் செயல்படுத்தப்படாது என தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் முதலில் 10 லட்சம் பேருக்கு மேல் மக்கள் தொகை உள்ள நகரங்களை தேர்வு செய்தனர். தற்போது 20 லட்சத்திற்கும் குறைவாக மக்கள் தொகை உள்ள பாட்னா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை இத்திட்டத்தின் கீழ் சேர்த்து பணிகளைத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரமான கோவை ஒரு தொழில் நகரம் ஆகும். கோவை நகரில் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது, தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு செய்த துரோகம். எனவே இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்காக நவம்பர் 24ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளோம். எனவே ஒன்றிய அரசு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். எஸ்.அய்.ஆர். (SIR) என்பது தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு செய்த மிகப் பெரிய ஜனநாயக மோசடி. பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்தியுள்ளார். எனவே 2026 தேர்தலுக்குப் பின் அவரின் ஆட்சி தொடர வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
