சென்னை வேப்பேரி எதிராஜூலு முதலியார் இல்லத்தில் 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி பார்ப்பனர் அல்லாதாரின் ஓர் அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் சென்னை விக்டோரியா ஹாலில் நடைபெற்றதாகவும் எழுதி இருக்கின்றனர். இக்கூட்டமே நீதிக்கட்சி தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது. இக்கூட்டம் நடைபெற்ற நாளே நீதிக்கட்சி தோன்றிய நாள் (20.11.1916) ஆகும்.) அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் கீழ்க்காணும் பெருமக்கள் ஒரு சிலராவர். அப்பெயர்கள் வருமாறு:
திவான் பகதூர் பிட்டி. தியாகராயச் செட்டியார், 2. டாக்டர் டி.எம். நாயர், 3. திவான் பகதூர் பி. இராஜரத்தின முதலியார், 4. டாக்டர் சி.நடேச முதலியார், 5. திவான் பகதூர் பி.என். சிவஞான முதலியார். 6.திவான் பகதூர் பி. இராமராய நிங்கார் (பானகல் அரசர்) 7. திவான் பகதூர் எம்.ஜி. ஆரோக்கியசாமி பிள்ளை, 8. இராவ் பகதூர் நாராயணசாமி செட்டி, 9. இராவ் பகதூர் தணிகாசலம் செட்டி, 10. இராவ் பகதூர் எம்.சி. ராஜா, 11. டாக்டர் முகமது உசுமான் சாயுபு, 12. ஜே.எம்.நல்லசாமி பிள்ளை, 13. இராவ் பகதூர் வெங்கட்ட ரெட்டி நாயுடு, 14. இராவ் பகதூர் ஏ.பி. பாத்ரோ, 15. டி. எத்திராஜூலு முதலியார், 16.ந.கந்தசாமி செட்டியார், 17. ஜே.என். இராமநாதன், 18. கான்பகதூர் ஏ.கே.ஜி. அகமது தம்பி மரைக்காயர், 19. திருமதி அலுமேலு மங்கைத் தாயாரம்மாள், 20. த.இராமசாமி முதலியார், 21. திவான் பகதூர் கருணாகர மேனன், 22. டி. வரதராஜூலு நாயுடு, 23. மதுரை வக்கீல் எல்.கே.துளசிராமன், 24. கே.அப்பாராவ் நாயுடுகாரு, 25. எஸ். முத்தையா முதலியார், 26. மூப்பில் நாயர் போன்ற முக்கியமானத் தலைவர்கள் அனைவரும் கூடி ‘South Indian Liberal Federation’ எனும் பெயரைத் தெரிவு செய்தனர். இதனைத் தான் சுருக்கமாக ‘SILF’ என்று கூறினர். இதைத் தமிழில் ‘தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்’ என்று எழுதினர். இவ்வமைப்புக்கு நீதிக்கட்சிக்கு இராஜரத்தின முதலியார் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர்களாகப் பானகல் அரசர் இராமராய நிங்கார், பிட்டி. தியாகராயர், கே.ஜி. அகமது தம்பி மரைக்காயர், எம்.ஜி. ஆரோக்கியசாமி பிள்ளை ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். செயலாளர்களாக பி.எம். சிவஞான முதலியார், பி. நாராயணசாமி முதலியார், முகமது உஸ்மான், எம். கோவிந்தராஜூலு நாயுடு ஆகியோர் பணியாற்றினர். பொருளாளராக ஜி. நாராயணசாமி செட்டியார் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றினார்.
இப்படி அமைப்புக் கூட்டம் நடைபெற்று முடிந்தவுடன் ‘பிராமணர் அல்லாதார் முன்னேற்றம்’ பற்றி சென்னை மயிலாப்பூர் இராஜூ கிராமணியார் தோட்டத்தில் (இப்போது டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் ‘சிட்டி செண்டர்’ உள்ள பகுதி) பிட்டி. தியாகராயர் பேசினார். இது குறித்துத் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் தமது வாழ்க்கைக் குறிப்பில்,
‘1916ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் ஓய்வில் சென்னை ஹாமில்டன் வாராவதி அருகே இராஜூ கிராமணியார் தோட்டத்தில் யாழ்பாணம் முதலியார் சபாரத்தினம் தலைமையில் சைவ சித்தாந்த மகாசமாஜத்தின் சார்பில் சைவர் மகாநாடு கூடியது. மகாநாடு மூன்று நாள்கள் நடைபெற்றது. மூன்றாம் நாள் பகல் ஓர் அறிக்கை வழங்கப்பட்டது. அதில் அம் மாநாட்டுக் கொட்டகை யிலேயே அன்று மாலை ‘பிராமணர் அல்லாதார் முன்னேற்றம்’ பற்றி பி. தியாகராயச் செட்டியார் பேசுவார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அவ்விதமே தியாகராயச் செட்டியார் பேசினார். அவர் பிராமணர் செல்வாக்கைப் பற்றியும், அதனால் பிராமணர் அல்லாதார் நசுக்குண்டு நாசமடைவதைப் பற்றியும் பேசி, காங்கிரசை நம்ப வேண்டாம், அவற்றினால் பிராமணரல்லாதார் மயங்குறல் வேண்டாம் என்று வற்புறுத்தினார்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
பிட்டி. தியாகராயர் ‘பிராமணர் அல்லாதார் முன்னேற்றம்’ பற்றிப் பேசிய ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் கையொப்பமிடப்பட்டு பிராமணர் அல்லாதார் அறிக்கையொன்று 20.12.1916இல் வெளியிடப்பட்டது. இதனை முழுமையாக 22.12.1916 தேதியிட்ட இந்து வார வெளியீடு வெளியிட்டது.
அவ்வறிக்கை நீதிக்கட்சித் தோன்றுவதற்கான பின்னணியை எடுத்து விளக்கியது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிக்கையைத் திராவிட இயக்கத்தின் முதல் ஆவணம் என்று குறிப்பிடலாம். இதைப் போலவே சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதற்கான காரணங்களை – அவ்வியக்கம் தோற்றுவிக்கப் பட்டதற்குப் பிறகு ஈ.வெ. இராமசாமிப் பெரியார் ‘சுயமரியாதை இயக்கம் தோன்றியது ஏன்?’ என்று விளக்கிப் பேசியதும் எழுதியதும் திராவிட இயக்கத்தின் இரண்டாவது ஆவணமாகும்.
நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் 1938 முதல் 1944 வரை இணைந்து பணியாற்றின. 1944ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 16ஆவது மாநாட்டில் ‘அண்ணாதுரை தீர்மானத்தின்’ மூலமாக நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் பெயர்கள் ‘திராவிடர் கழகம்’ என மாற்றம் செய்யப்பட்டது. இதற்கான தீர்மானமும் இதற்கென்று சிறப்பாக 20.8.1944 எனத் தேதியிடப்பட்டு ஈரோட்டில் அச்சிடப்பட்ட ‘திராவிடநாடு’ வார இதழும், ‘குடிஅரசு’ இதழும் திராவிட இயக்கத்தின் மூன்றாவது ஆவணமாகும்.
திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட போது அறிஞர் அண்ணா அவர்கள் ஓர் அறிக்கையை 17.9.1949இல் வெளியிட்டார். அந்த அறிக்கை திராவிட இயக்கத்தின் நான்காவது ஆவணமாகும். நீதிக்கட்சி (1916), சுயமரியாதை இயக்கம் (1925), திராவிடர் கழகம் (1944) ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ (1949) ஆகிய இவ்வமைப்புகள் தோன்றுவதற்கான காரண, காரிய, விளக்கங்கள் குறித்த அறிக்கைகள் திராவிட இயக்கத்தின் மூல ஆவணங்களாக விளங்கி வருகின்றன .
இதோடு முக்கிய இரு சொற்பொழிவுகளை அய்ந்தாவது ஆவணமாகச் சேர்க்க வேண்டும். அவ்விரு சொற்பொழிவுகளில் ஒரு சொற்பொழிவு மட்டுமே கிடைத்துள்ளது. அது 1919ஆம் ஆண்டு முதல் உலகப் போருக்குப் பின் ஆற்றிய உரையாகும். அதனைப் பிற்சேர்க்கை ஒன்றில் இணைத்து இருக்கிறோம். சென்னைச் சேத்துப்பட்டு ஸ்பர்டாங் சாலையில் டாக்டர் டி.எம். நாயர் நிகழ்த்திய முதல் சொற்பொழிவு 1917ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி நிகழ்த்தப்பட்டது. டாக்டர் டி.எம்.நாயரின் ஆங்கிலப் பேச்சை சோமசுந்தரம் பிள்ளை தமிழில் எடுத்துரைத்தார். இச்சொற்பொழிவு கிடைக்கவில்லை.
(திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு எழுதிய ‘நீதிக்கட்சி வரலாறு’ நூலிலிருந்து…)
