1885இல் வெள்ளைக்காரர் களால் தோற்றுவிக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு கல்வி வேலை வாய்ப்புகள் பெற என்றும் உதவப் போவதில்லை என்பதனை 30 ஆண்டுகளில் முற்றிலுமாக உணர்ந்த பிட்டி. தியாகராயர், சி நடேசன், டி எம் நாயர் போன்றவர்களால் எழுப்பப்பட்ட உரிமை முழக்கமே 1916 இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற நீதிக்கட்சி தோன்றும் கட்டாயமான காரியமாக இருந்தது.
இந்தச் சங்கத்திற்கு ஈடாக காங்கிரசுக்கு உள்ளே இருந்த மற்ற பார்ப்பனர் அல்லாத தலைவர்கள் ஒன்றிணைந்து சென்னை மாகாண சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் துணைத் தலைவர்களில் ஒருவராக தந்தை பெரியார் அவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
அய்யாவும் காங்கிரசுக்குள் இருந்து கொண்டே பார்ப்பனர் அல்லாத மக்களுக்குக் கல்வி வேலை வாய்ப்பு, அரசியல் வினைப்பாடுகளில் போதிய வாய்ப்புகளை பெற்று விட ஆறாண்டுகளுக்கு மேலாகப் போராடினார். அது பார்ப்பனர்கள் ஆதிக்கம் நிரம்பிய காங்கிரஸால் கிட்டாது என்பதை உணர்ந்த பின்பே காஞ்சி மாநாட்டில் “வகுப்பரிமையை நிலைநாட்டியே தீருவேன்” என்று வஞ்சினம் உரைத்து வெளியேறினார்.
ஒரு 14 அல்லது 15 ஆண்டுகால நீதிக் கட்சி ஆட்சியில் பெண்கள் பெற்ற உரிமைகள் என்று நோக்கும் போது இரட்டை ஆட்சி முறையில் பங்கேற்ற வாய்ப்பில், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் உரிமையினை இந்தியாவில் மட்டுமல்ல மற்ற பல நாடுகளை ஒப்பிட்டுக் கூறும் பொழுது, முன்னதாக வழங்கியது நீதிக்கட்சி.
இந்த வாய்ப்பின் காரணமாகவே பன்னெடுங்காலமாக பார்ப்பனப் பணக்கார ஆண்களின் மகிழ்ச்சிக்காக “வேஸ்ய தரிசனம் புண்யம்! பாபநாசனம்” என்று பார்ப்பனர்களால் நற்செயலாகக் கருதப்பட்ட, கேவலமான தேவதாசி முறையை ஒழிப்பதற்கான தீர்மானத்தை முத்துலட்சுமி அவர்கள் கொண்டு வந்தார்.
“ருதுவாகும் முன்னரே பெண்களுக்குத் திருமணம் செய்து விட வேண்டியது ஒரு தகப்பனின் கடமை என்று சாத்திரம் கூறும் கொள்கையினை மறுத்து, குழந்தைத் திருமண முறையினை ஒழிக்கும் சாரதா சட்டத்தினைச் செய்து பெண்களின் திருமண வயது 14ஆக உயர்வதற்கு வாய்ப்பினை அளித்தது நீதிக்கட்சி.
பெண் தொழிலாளர்களுக்கு அவர்கள் குழந்தைகளைக் கவனிப்பதற்கான வசதிகளைச் செய்து ஓய்வு நேரத்தையும் அதிகப்படுத்தி தர வேண்டும் என்ற ஆணையினை நீதிக்கட்சி ஆட்சியாளர்கள் பிறப்பித்துள்ளார்கள் அந்தக் காலத்திலேயே!
தந்தை பெரியார் அவர்கள் ரஷ்யா சென்று வந்த பிறகு அளித்த ஈரோடு செயல்திட்டத்தினை ஏற்று பணியாற்ற முன்வந்த நீதிக் கட்சியினைத் தலைமை ஏற்று நடத்தவும் வேண்டிய சூழலில் தம் சொந்த அமைப்பான சுயமரியாதை இயக்கத்தின் தலைமை பொறுப்புடன் கட்சியின் தலைமை பொறுப்பையும் ஏற்று வினையாற்றிய தந்தை பெரியார் அவர்களால் 1944ல் இரண்டினையும் இணைத்து தென்னிந்திய நல உரிமை என்னும் புவியியல் பெயர் திராவிடர் கழகம் என்ற வரலாற்றுப் பெயராக மாற்றப்பட்டது.
இந்த அமைப்பின் கொள்கைகளால் பெண்களாகிய நாம் பெற்றுள்ள கல்வி, பொருளாதாரம், அரசியல் துறைகளில் வாய்ப்புகளும், உள ரீதியாக நாம் பெற்றுள்ள விடுதலை உணர்வும் நம்மை என்றென்றும் நன்றி போற்றக் கடமை உள்ளவர்களாக ஆக்கியுள்ளது.
– இறைவி
