தமிழ்நாட்டு வரலாற்றில் நீதிக்கட்சியின் ஆட்சி-பாசறை மு. பாலன்

13 Min Read

1947க்கு முன்பு வரை ‘இந்தியா’ என்பது ஒரு நாடல்ல. அது ஒரு துணைக் கண்டம். பல நாடுகள், பல இனங்கள், பல மதங்கள், பல மொழிகள், பல பழக்க வழக்கங்களைக் கொண்டதாகும். அதன் காரணமாகவே மகாராஜாக்கள், நவாபுகள், சமஸ்தானங்கள் என 565 மன்னர்கள் இந்தியாவை ஆட்சி செய்து வந்தனர். இவர்களில் பெரும்பாலோர் ஆங்கிலேயர்களை இரு கரம் நீட்டி வரவேற்றவர்கள். பிரிட்டனின் மேலாதிக்கத்தை இவர்கள் ஏற்றுக் கொண்டதால், அவர்களின் சிம்மாசனத்தை அவரவரே வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட பல மன்னர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி 1757ஆம் ஆண்டில் தொடங்கி, 1947 வரை நீடித்தது. 1757 முதல் 1857 வரை கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியும், 1858 முதல் 1947 வரை பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சியும் நடைபெற்றது.

ஆங்கிலேயர் ஆட்சியில், அரசுக்கு எதிராகப் போராடியவர்களை அடக்குவதில் தீவிரம் காட்டினாலும், அவர்கள் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டினர். அவர் களின் ஆட்சியில் பொருளாதார சுரண்டல் இருந்தாலும் சமூக மாற்றங்களைக் கொண்டு வந்தனர்.

  • அனைவரும் கல்வி கற்க பள்ளிக்கூடங்களையும் பல்கலைக்கழகங்களையும் தொடங்கினர்.
  • மருத்துவமனைகளை ஆங்காங்கே ஏற்படுத்தினர்.
  • சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல் நிலையங் களையும் நீதிமன்றங்களையும் நிறுவினர்.
  • போக்குவரத்துக்காக குதிரைகள் இழுக்கும் டிராம் (Tram) வண்டிகளை 1874 ஆம் ஆண்டிலும், மின்சார ட்ராம் வண்டிகளை 1902 ஆம் ஆண்டிலும் செயல்படுத்தினர்.
  • 1853ஆம் ஆண்டு இரயில் போக்குவரத்து சேவையையும் 1932இல் விமான போக்குவரத்து சேவையையும் தொடங்கினர்.
  • நாடு முழுவதும் தபால் நிலையங்களைத் தொடங்கினர்.
  • நீர்ப்பாசன மேம்பாட்டிற்கு பல அணைகளைக் கட்டினர்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் 1757இல் நுழைந்தனர் என்றாலும், ஆரியர்கள் கி.மு.2000ஆம் ஆண்டில் அதாவது சற்றொப்ப 4000 ஆண்டுகளுக்கு முன்பே நுழைந்தனர்.

“கி.மு. 2000ஆவது ஆண்டில் வடமேற்கிலிருந்து ஆரியர்கள் வெற்றிகரமாக அலை அலையாய் இந்தியாவில் நுழைந்து வடக்கே தங்களை நிறுவிக் கொண்டனர். ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தபோது அவர்கள் திராவிடக் கலை நாகரிகத்தையும், பழக்க வழக்கங்களையும் ஏற்று அவற்றை தம் வாழ்க்கையில் பொருந்துமாறு அமைத்துக் கொண்டனர். மொகஞ்சதாரோவில் நமக்குக் கிடைத்தவற்றிலிருந்து ஆரியர்களின் வருகைக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே இந்தியாவில் வடமேற்குப் பகுதியில் ஒரு பெரிய நாகரிகம் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. இஃதன்றியும் தென்னிந்தியாவிலும் ஒரு வேளை வட இந்தியாவிலும் கூட திராவிடர்களின் நாகரிகம் மிகவும் சிறப்புற்றிருந்தது என்பது தெளிவா கிறது. அவர்களின் பாஷைகள் ஆரியர்களின் சமஸ்கிருதத் திலிருந்து பிறந்தவை அல்ல. மிகவும் பழமையான அப்பாஷைகளில் சிறந்த இலக்கியங்கள் காணப்படுகிறது. இம்மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகும். இவை தென்னிந்தியாவில் இன்றும் வழங்கி வருகிறது,”

என்று ஜவஹர்லால் நேரு அவர்கள் தனது ‘உலக சரித்திரம்‘ நூலில் குறிப்பிடுகிறார்.

திராவிடர் கழகம்

இராபர்ட் கால்டுவெல்

திராவிட மொழியான தமிழ் ஆரிய மொழியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மொழி என்ற கருத்தையும், தமிழ் மொழியானது உயர் தனிச் செம்மொழியாய் தனித்தியங்க வல்லது என்ற கருத்தையும், திராவிடர்கள், ஆரியர்கள் வருகைக்குப் பன்னெடுங்காலத்திற்கு முன்பே நாகரிக வாழ்வில் மிகவும் சிறப்புற்று விளங்கினர் என்ற கருத்தையும் தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் அவர்கள் தெளிவாக பதிவு செய்துள்ளார். (நூல்: திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்)

ஆரியர்கள் வணிகத் தொடர்புகள் மூலம் தமிழ்நாட்டில் நுழைந்தனர். அவர்களில் பலர் தமிழ்நாட்டிலேயே தங்கினர். தமிழர்களுடன் கலந்து வாழ்ந்தும், தமிழ் மொழியைப் பயின்றும், தமிழர் பழக்க வழக்கங்களை மேற்கொண்டும், தமிழர் போன்றே மாறினர். எனினும் தமிழரின் பண்பாடு, சமயம், தெய்வ வழிபாடு, மொழி முதலியவற்றிலிருந்து ஆரியர்களுடையது முற்றிலும் மாறுபட்டது. எனவே ஆரியர்களின் நெஞ்சில் “தாம் வடவர் என்றும், தமது நாகரிகமும் பழக்க வழக்கங்களும் மேலானது என்றும் தமக்கு வாழ இடமளித்துள்ள தமிழர்கள் தாழ்ந்த குடிகள்” என்றும் எண்ணும் எண்ணம் எப்போதும் அவர்களிடம் உண்டு. அதனால் தான் அவர்கள் தமிழர்களுடன் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆரியர்களின் சிவந்த மேனியும், என்னவென்பது புரியாவிட்டாலும் இவர்களின் வடமொழி, சுலோக மந்திரங்களும், தமிழ் மன்னர்களின் கவனத்தை ஈர்த்தன. தாங்கள் “தெய்வப் பிறவிகள் என்றும், தெய்வங்களுடன் தங்களால் உரையாட முடியும் என்றும், மன்னர்களின் குடும்பம். செல்வ வளத்தோடும். உடல்நலத்தோடும் செழித்தோங்க தங்களால் சுடவுளின் அருளைப் பெற்றுத் தர முடியும்” என்றும் அவர்கள் கூறியதை மன்னர்கள் உண்மை என்று நம்பினர். விளைவு மன்னர் குடும்ப நிகழ்ச்சிகளிலும் திருமணம் போன்ற சடங்குகளிலும் ஆரியர்கள் கலந்து கொண்டு ஆசீர்வதிக்கத் தொடங்கினர்.

மன்னர்களுக்கோ, மன்னர் குடும்ப உறுப்பினர்களுக்கோ சாதாரணமாக ஏற்படும் உடல் நலக் குறைவுக்கு மன்னர் போர்களில் செய்த கொலை பாவமே காரணமென்றும். அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறுவதை நம்பி, அவர்கள் கூறும் பரிகாரச் சடங்குகளை மன்னர்கள் மேற்கொண்டனர்.

அரச பதவியும், அரச போகமும் தனக்கும் தன் குடும்பத்திற்கும் மட்டுமே தொடர வேண்டும் என்ற தன்னலப் போக்கும் அவர்கள் சொன்ன உறுதிமொழியும். தமிழ் மன்னர்களைத் தடுமாறச் செய்தன. ‘ஆரியனை அடிபணிந்தால் ஆகாதது எதுமில்லை’ அகில உலகை ஆளலாம்; ஆண்டவனையும் அடையலாம் என்ற பேராசையை கொஞ்சம் கொஞ்சமாக மன்னர்கள் மனதில் வளர்த்து விட்டனர் ஆரிய பூசாரிகள்.

அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற தமிழர் அரசியலமைப்பில் அரசன் முதலிடம் வகித்து வந்தான். பிரம்ம சத்திரிய, வைசிய, சூத்திரன் என்ற ஆரிய அரசமைப்பில் அரசன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டான். தெய்வ பிறப்பாளனான பிராமணன் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பதே கடவுளின் கட்டளை என்பதை தமிழ் மன்னர்களை ஏற்க வைத்ததே ஆரியர்களின் முதல் வெற்றியாகும்.

பிராமண ராஜகுரு

அரசனை பொம்மையாக்கிவிட்டு. அரச அதிகாரம் ஆரியர் கைக்கு மாறியது. மன்னன் ராஜாவானான்; அமைச்சர் மந்திரியானான். இருவருக்கு மேலே ‘பிராமண ராஜகுரு’ அல்லது ‘புரோகிதன்’ அமர்ந்தான். இராஜாவின் ஒவ்வொரு நடவடிக்கைகளும், அரச ஆணைகளும் புரோகிதனின் அறிவுரைப்படியே அமைய, மொத்த நாட்டையும் ஆரியம் சுபளீகரம் செய்தது. மன்னன் ஆரியர்களின் அடிமையானான். மனுதர்மம் நிலைநாட்டப்பட்டது. ஜாதிக்கு ஒரு நீதியானது பிராமணனைக் காப்பதும் பிராமண தர்மத்தை நிலை நிறுத்துவதுமே அரச தர்மமாயிற்று. மக்கள் துயரத்துக்குள் தள்ளப்பட்டனர்.

பிராமணர்களுடையதும். பிராமண மயமாக்கப் பட்டதுமான அரசியல், சமுதாய ஆதிக்கத்தில் சென்னை மாகாணத்தில் மக்கள் தொகையில் ஒரு சில விகிதாச்சாரமே இருந்த பிராமண சமுதாயம், பொது ஊழியங்களையும், அரசின் அதிகாரப் பதவிகளையும் ஏகபோகமாக அனுபவித்து வந்தது. இந்த நிலைமை, பெரும்பான்மையினர் மீது சிறுபான்மையினர் செலுத்திய கொடுங்கோன்மையாகும்.

இந்நிலையில் பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களின் நலன்களை எல்லா வகையிலும் காப்பதற்குத் திட்டவட்டமான ஒரு வழி காண வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் சி. நடேசன் ஆகியோர் இணைந்து 1916, நவம்பர் 20ஆம் நாள், சென்னை வேப்பேரி எத்திராஜுலு முதலியார் இல்லத்தில் ஒன்று கூடி “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” (South Indian Liberal Federation) என்ற பெயரில் செயல்படுவது என்ன தீர்மானித்தனர்.

பிராமணரல்லாதார் கொள்கை அறிக்கை

சென்னை விக்டோரியா பொது மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் (துவக்க விழாவில்) கட்சியின் தலைவர் சர்.பிட்டி. தியாகராயர், “பிராமணரல்லாதார் கொள்கை அறிக்கை” (Non Brahmin Manifesto) என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரகடனத்தை வெளியிட்டார்.

பிராமணல்லாதாருக்குச் சமுதாயப் பொருளாதார நீதி, சம உரிமை, சம வாய்ப்புகள் ஆகியவற்றை கிடைக்கச் செய்வதுதான் பிராமணரல்லாதார் இயக்கத்தின் முக்கிய நோக்கம் என அறிவித்தார்.

பன்னெடுங்காலமாக ஆரியர்களுக்கு அடிபணிந்து கிடந்த ஒரு சமூகம் விழித்தெழுந்த நிலையைப் பார்த்து பார்ப்பனர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

அறிக்கை வெளியான அடுத்த நாள், ‘இந்து’ பத்திரிகை தனது தலையங்கத்தில்,

“அந்த அறிக்கை தேசிய நலனுக்கு ஆபத்து விளைவிக்கும் என்றும் இதன் காரணமாக தேசிய முன்னேற்றத்துடன் எதிரிகளுக்கு துணை போகும் நிலை உருவாகும் என்றும் எழுதியது.”

‘நியூ இந்தியா’ பத்திரிகையோ இந்த இயக்கத்தை ‘ஒரு விஷமத்தனமான இயக்கம்’ (A Mischievous Movement) என்று விவரித்ததோடு, அந்த அறிக்கையை வெளியிட்ட சர்.பிட்டி. தியாகராயரை, “இந்த தேசத்தின் நண்பராகக் கருத முடியாது” என்றும் குற்றம் சாட்டியது. எடுத்த எடுப்பிலேயே “நீதிக்கட்சியை தொடங்கிய தலைவருக்கு சூட்டப்பட்ட பட்டம்” தேசத்துரோகி என்பதுதான். நீதிக்கட்சியின் நோக்கம் பார்ப்பனரல்லாத மக்களைப் பல வழிகளிலும் மேம்படுத்தச் செய்வதே அல்லாமல் பார்ப்பனர்களை வீழ்த்த வேண்டும் என்பதல்ல. நீதிக்கட்சி இந்தியாவுக்கு தன்னாட்சி உரிமை வேண்டும் என்பதை வலியுறுத்தியது. ஆனால் அதே நேரத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு முழு உரிமையும் பாதுகாப்பும் அளிக்கக்கூடிய தன்னாட்சி உரிமை வேண்டும் என்பதை பிரிட்டிசாரிடம் வலியுறுத்தியது.

முதல் உலகப்போர் முடிவுக்கு வந்த பிறகு (1914-1918) பிரிட்டீசு அரசு, இந்தியாவுக்கு கூடுதல் அரசியல் உரிமைகளையும், அரசியல் அதிகாரங்களையும் அளிக்க முடிவுசெய்து ஒரு அறிக்கையை வெளியிட்டது.

இந்தியாவின் செயலாளராக இங்கிலாந்தில் பணியாற்றி வரும் மாண்டேகு அவர்களும், இந்திய வைஸ்ராயாக இருந்த செம்ஸ்போர்டும் இணைந்து உருவாக்கப்படும் புதிய பொறுப்பாட்சியில் “வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை” சட்டமன்றப் பதவிகளிலும் அரசுப் பணிகளிலும் ஏற்பட வேண்டும் என்பதை நீதிக்கட்சி வலியுறுத்தியது.

1870-1871ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 164 பேர் பட்டம் பெற்றனர். அவர்களில் 110 பேர் பார்ப்பனர். அதேபோன்று 1901 முதல் 1911 வரை பட்டம் பெற்றவர்கள் 5709 பேர். அதில் 4074 பேர் பார்ப்பனர். இதன் விளைவாகவே அரசு உத்தியோகம் முழுவதும் அவர்களின் ஏகபோக உரிமையாயிற்று.

பார்ப்பனரல்லாத மக்களை முன்னேற்றுவதற்குக் கல்வி ஒன்றே தடையாக இருப்பதை உணர்ந்த நீதிக்ககட்சித் தலைவர்கள் அம்மக்கள் கல்வி கற்பதற்கு உள்ள தடைகளை முதலில் அகற்றுவது என முடிவெடுத்துச் செயல்பட்டனர். அடுத்து கல்வி கற்ற பார்ப்பனரல்லாத மக்கள் அரசு வேலைவாய்ப்பில் நுழைவதற்கு உரிய வழிவகைகளைச் செய்தனர்.

1917 ஆகத்து 19, 20 ஆகிய நாட்களில் நீதிக்கட்சியின் முதல் மாநில மாநாடு கோவை ஒப்பனக்காரத் தெருவில் அமைந்துள்ள நாடக அரங்கில் நடைபெற்றது. இம்மாநாடே திராவிட இயக்க வரலாற்றில் முதல் மாநாடாகும். பனகல் அரசர் இராமராய நிங்கார் தலைமை தாங்கினார். ஊத்துக்குளி ஜமீன்தார் எம்.ஆர். காளிங்கராயர், இராவ்பகதூர் ஏ.டி. திருவேங்கடசாமி, கான்சாகிப் சையத் திவான் அப்துல் ரசாக், பி.கே. ஈப்பன். டாக்டர் டி.எம். நாயர், சர்.பிட்டி. தியாகராயர், பேரா. கே. இராமமூர்த்தி, ஏ.சி. பார்த்தசாரதி. எம்.ஜி. ஆரோக்கியசாமி, டாக்டர் சி. நடேசனார் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பனகல் அரசர் தனது தலைமை உரையில்,

“எல்லாச் சமூகங்களும் சம அந்தஸ்தும் சர்ந்தர்ப்பங் களும் பெற வேண்டும். நீதிக்கட்சி இந்த இலட்சியத்தை முன்னிறுத்தியே தோற்றுவிக்கப்பட்டது. இந்த இலட்சியம் நிறைவேற வேண்டுமானால், நாம் புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுதலை அடைய வேண்டும்” – என்று கூறினார்.

சென்னை மாகாண நீதிக்கட்சியின் மாநாடு. 1917 திசம்பர் 28, 29 ஆகிய நாட்களில் சென்னை மவுண்ட்ரோடு (அண்ணாசாலை) வெல்லிங்டன் திரை அரங்கில் நடைபெற்றது. மாநாட்டில் டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் சி. நடேசனார், பனகல் அரசர் இராமராய நிங்கார், புதுக்கோட்டை அரசர். இராமநாதபுரம் அரசர், செல்லப்பிள்ளை குமாரசாமி. திவான் பகதூர் இராசரத்தின முதலியார், திவான் பகதூர் ஏ. சுப்பராயலு ரெட்டியார் மற்றும் பல ஜமீன்தார்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாண்டேகு செம்ஸ்போர்டு தலைமையில் ஒரு குழு இந்தியா வந்தது. இந்தியாவுக்கு அதிகப்படியான உரிமைகளையும், அதிகாரங்களையும் வழங்க ஆங்கிலேய அரசு முன் வந்துள்ளதாக அறிவித்தது.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துடன் கூடிய அரசியல் சீரமைப்பே தேவையென நீதிக்கட்சி வலியுறுத்தியது. ஆனால் அவர்களின் இறுதி அறிக்கையில் நீதிக்கட்சியின் கோரிக்கை புறம் தள்ளப்பட்டது.

1918 சூலைத் திங்களில் நீதிக்கட்சியின் சார்பில் ஒரு குழு இலண்டன் செல்ல முடிவு செய்தது. ஆனால் அரசு அனுமதிக்காததால், டி.எம். நாயர் மட்டும் தனியாக இலண்டன் போய்ச் சேர்ந்தார். இராணுவ அதிகாரி ஒருவர் தடை உத்தரவு ஒன்றை நாயரிடம் நீட்டினார். ‘நோய்க்கு மருத்துவம் செய்து கொள்ள இங்கிலாந்து வந்துள்ள நீங்கள். சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பும்வரை, இந்நாட்டில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது, அரசியல் பேசக்கூடாது’ என்று அந்தத் தடை உத்தரவில் குறிப்பிடப் பட்டிருந்தது.

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியால் நாயருக்குப் போடப்பட்டிருந்த தடை உத்தரவு நீக்கப்பட்டது. 1918 அக்டோபர் திங்கள் 2ஆம் நாள் டி.எம். நாயர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். நீதிக்கட்சியின் கொள்கை கோட்பாடுகளை எடுத்துரைத்தார். மாண்டேகு செமஸ்போர்டு அறிக்கையில் உள்ள குறைபாடுகளை எடுத்துச் சொன்னார். அந்த அறிக்கையை அமல்படுத்தினால் பார்ப்பனர்களின் ஆதிக்க வெறி அதிகரித்து நாட்டின் சொந்தக்காரர்களான திராவிடப் பெருங்குடி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான புள்ளி விவரங்களை எடுத்துக்கூறினார். அதன்பிறகே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துடன் கூடிய அரசியல் சீரமைப்பு தேவையென இங்கிலாந்து நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது.

1920 பிப்ரவரி திங்கள் 28ஆம் நாள் அரசால் நியமிக்கப்பட்ட மெஸ்டன் பிரபு சென்னை வந்தார். இரு சமுதாயத்தைச் சார்ந்த தலா ஆறு பிரதிநிதிகளைச் சாட்சியமளிக்க அவர் அழைத்தார்.

சர்.பிட்டி, தியாகராயர்,
இராமசாமி முதலியார்

பார்ப்பனரல்லாத சமூகத்தின் சார்பில் சர்.பிட்டி, தியாகராயர்,இராமசாமி முதலியார். எல்.கே. துளசிராம். கோவப்பிள்ளை, வார்டு கோவிந்ததாஸ், சக்கரைச் செட்டியார். ஆகியோரும் பார்ப்பனச் சமூகத்தில் சார்பில் சி.பி. இராமசாமி அய்யர், டி.ஆர் இராமச்சந்திர அய்யர், கே. இராம் அய்யங்கார். பி. நாராயணமூர்த்தி, எம். இராமசந்திரரவ், பி.வி. நரசிம்ம அய்யர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இறுதியாக மெஸ்டன் பிரபு தமது தீர்ப்பை வழங்கினார். சென்னை மாகாணத்தில் உள்ள 68 தொகுதிகளில் பார்ப்பனரல்லாதாருக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதோடு மற்ற பொதுத் தொகுதிகளிலும் பார்ப்பனரல்லாதார் போட்டியிடலாம் என்று கூறினார். இதன்மூலம் நீதிக்கட்சி பார்ப்பனர்களின் சட்டமன்ற ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்தியது.

மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் அடிப்படையில் சென்னை மாகாணத்தில் முதல் தேர்தல் 1920 நவம்பர் 30ஆம் நாள் நடைபெற்றது. சென்னை சட்டசபைக்கான 98 தொகுதிகளில் 63 தொகுதிகளில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது. ஆளுநரால் நியமிக்கப்பட்ட 18 உறுப்பினர்களும் நீதிக்கட்சியின் ஆதரவாளர்களாக இருந்தனர்.

நீதிக்கட்சியின் வெற்றி தென்னாட்டு மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. ஆளுநர் வெலிங்டன் பிரபு சர்.பிட்டி. தியாகராயரை ஆட்சி அமைக்க அழைத்தார். முதலமைச்சர் பதவி ஏற்க தியாகராயர் மறுத்துவிட்டார். ‘என்னைவிட அறிவிலும் ஆற்றலிலும் மிக்கவர்கள் கட்சியில் இருக்கிறார்கள்’ என்று ஆளுநரிடம் தியாகராயர் கூறினார். சிலரைச் சுட்டிக்காட்டினார்.

1920 திங்கள் 17ஆம் நாள் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை நீதிக்கட்சி ஏற்றுக் கொண்டது. 3 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.

  1. ஏ. சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சர்
  2. பி.இராமராய நிங்கார் (பனகல் அரசர்)
  3. கே.வி. ரெட்டி நாயுடு

1921 சனவரி 8ஆம் நாள் சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு சட்டசபை கூடியது. உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

சனவரி 12ஆம் நாள் புதன்கிழமை காலை, சென்னை மாகாணத்து சட்டசபையை, இங்கிலாந்து இளவரசர் கன்னாட் கோமகன் (Duke of Connaught) துவக்கி வைத்தார்.

சுவர்னர் லார்ட் வெலிங்டன், தொடக்க விழாவை நடத்தித்தர கோமகனை (இளவரசனை) அழைத்தபோது,

“நீங்கள் துவக்கி வைக்கும் இந்த சட்டசபைதான் இந்தியாவில் முதல் முறையாக நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு ஆட்சியில் பங்கு தருகிறது. வரவிருக்கும் ஆண்டுகளில் உருவாக்கப்படவிருக்கும் அரசியல் சட்ட சுதந்திரத்திற்கு இது ஒரு அடிப்படை” என்றார்.

இரட்டை ஆட்சி முறையில் அமைச்சரவையிடம் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்கள் “வழங்கப்பட்ட அதிகாரங்கள்” (Transfered Power) என்றும், திருவாக ஆலோசனை அவையிலும் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்கள். “இருத்திக் கொள்ளப்பட்ட அதிகாரங்கள்” (Reserved Power) என்றும் அழைக்கப்பட்டன.

அமைச்சரவைக்கு வழங்கப்பட்ட துறைகள்

  • உள்ளாட்சித்துறை
  • கல்வித்துறை
  • தொழில் வளர்ச்சித்துறை
  • மக்கள் நல்வாழ்வுத்துறை
  • சமய அறநிலைய அறக்கட்டளைத்துறை

நிருவாக ஆலோசனை அவைக்கு
வழங்கப்பட்ட துறைகள்

  • வருவாய்த்துறை
  • உள்துறை
  • பொதுநிருவாகத்துறை
  • சட்டத்துறை
  • நிதித்துறை

அமைச்சரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேரும். நிருவாக ஆலோசனை அவைக்கு ஆளுநரால் நியமிக்கப்பட்ட மூன்று பேரும். சட்டமன்றத்தில் வீற்றிருந்து விவாதங்களில் கலந்துகொண்டு, சட்டமன்ற உறுப்பினர்களின் வினாக்களுக்கு உரிய விளக்கங்களைத் தந்து வந்தனர்.

அமைச்சரவை, நிருவாக ஆலோசனை அவை ஆகிய இரண்டுமே ஆளுநரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்தன. இரட்டை ஆட்சி முறையில் முக்கியத் துறைகள் அனைத்தும் ஆளுநரால் நியமிக்கப்பட்ட நிருவாக ஆலோசனை குழுவினருக்கு ஒதுக்கப்பட்டது. இருப்பினும் நீதிக்கட்சி ஆட்சி தங்களால் முடிந்த அளவிற்கு பார்ப்பனரல்லாத மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்தது.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக சென்னையைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள், அரசியல் ஆதிக்க வெறி கொண்டிருந்த பார்ப்பன சமூக மக்களை முறியடித்து, அரசியல் ஆதிக்கத்தைத் தங்கள் கைக்குள் கொண்டு வந்தனர். நீண்ட நெடுங்காலமாக நின்று நிலவிவந்த உயர் ஜாதி ஆதிக்கம். புதிய அரசியல் சீர்திருத்தத்தில் தவிடு பொடி ஆயிற்று.

17 ஆண்டுகள் நீதிக்கட்சியின் ஆட்சியே,,,

பார்ப்பனரல்லாதார் அடங்கிய அமைச்சரவை ஏற்பட்டுவிட்டதால், பார்ப்பனர்களை மனநிறைவு பெறச் செய்யவேண்டி, ஆளுநர் லார்டு வெல்லிங்டன். பி. இராசகோபாலாச்சாரி என்ற பார்ப்பனரை சட்டமன்ற அவைத்தலைவராக நியமித்தார்.

நீதிக்கட்சி அமைச்சரவைத் திட்டங்களை நிறைவேற்ற முயலும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுயராஜ்ய கட்சியினர், சுயேச்சைகள் மட்டும் எதிர்க்கவில்லை. ஆளுநரால் நியமிக்கப்பட்ட நிருவாக உறுப்பினர்களும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முட்டுக்கட்டையாய் இருந்தனர் என்பது வரலாறு.

1920 முதல் 1937 வரை சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை அமலில் இருந்தது. 17 ஆண்டுகள் நீதிக்கட்சியின் ஆட்சியே நடைபெற்றது.

நன்றி: ‘பாசறை முரசு’, நவ.-திச.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *