அன்புத் தோழர்களே, அனை வருக்கும் வணக்கம்.
வருகிற நவம்பர் 26ஆம் தேதி லால்குடியில் (திருச்சி அருகில்) கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.
சுமார் 68 ஆண்டுகளுக்கு முன்னால் நவம்பர் 1957இல் தஞ்சை மாநகரில் அரண்மனையில் பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி நாணயங்கள் (வெள்ளி தோட்டாக்கள் வழங்கப்படுவதாக முடிவு எடுத்து வழி நடத்தப்பட்டது. பெரியார் அவர்கள் ஊர்வலமாக வருகிறார். புகை வண்டி நிலையத்தில் நடிகவேள் எம்.ஆர்.இராதா ஊர்வலத்தின் முன்னே கழகக் கொடியை பிடித்து வெண் குதிரையில் அமர்ந்து வர ஊர்வலம் முக்கிய வீதிக ளின் வழியாக அரண்மனை திடலை வந்து அடைந்தது.
அனைவரும் பேசிய பின்பு இறுதியாக பெரியார் பேசுகிறார். அப்பொழுது நவம்பர் 26ஆம் தேதி ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தின் ஒரு பகுதியை எரிக்கும் போராட்டம் நடத்தவுள்ளது என்றும், எரிக்க விருப்பம் உள்ளவர் தங்களுடைய பெயரை உடனடியாக விடுதலைக்கும், மாவட்டத் தலைவருக்கும் தெரிவிக்க வேண்டுகின்றேன்.
எந்தப் போராட்டம் நடத்தினாலும் காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். எத்தனை மணி, எவ்வளவு பேர் என்றும் தெரிவிக்க வேண்டும். அத்துடன் கையில் வாளியில் தண்ணீரும், மணலும் கொண்டு செல்ல வேண்டும். ஏன் என்றால் பொதுச் சொத்துக்கு நாசம் ஏற்படக் கூடாது என்பது பெரியார் கருத்து.
அப்பொழுது அந்த போராட்டத் திற்கு முன் அரசுக்கு 20 நாள் கெடு கொடுக்கிறார்கள். அதற்குள் அரசு அந்த ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை நீக்க வேண்டும். இல்லையேல் போராட்டம் நடைபெறும் என்று அறி வித்தார் அய்யா.
அப்பொழுது நாம் பச்சைத் தமிழர் காமராசர் ஆட்சியை ஆதரிக்கிறோம். ஆட்சியாளர்கள் இதற்குத் தண்டனை வழங்க சட்டத்தில் இடமில்லை. இந்தப் போராட்டத்தின் காரணமாக உடனடியாக அமைச்சரவையை கூட்டி 3 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க முடிவு எடுத்தார்கள்.
இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் பெரியார் போராட்டத்தை நடத்த ஆணையிட்டார். ‘விடுதலை’ நாளிதழில் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. தோழர்கள் நவம்பர் 26ஆம் தேதி சட்ட நகலை எரித்து கைது செய்யப்பட்டனர்.
சுமார் பத்தாயிரம் பேர் சட்ட நகலை எரித்தார்கள். இந்தப் போராட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட பெண்களும் எரித்தார்கள். கர்ப்பிணி பெண்களும் கலந்து கொண்டார்கள்.
சிறையில் மாயவரத்தை சேர்ந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் பெயர் சிறைப்பறவை. எங்கள் ஊர் தாராசுரத்தில் எங்கள் சின்னம்மா சிறையில் பிறந்த குழந்தைக்குச் சிறைவாணி என்று பெயரிட்டார்கள்.
சிறையிலே பலர் இறந்து போனார் கள். அந்த உடல்களை கொடுக்க மாட் டேன் என்று சிறையிலே புதைத்து விட்டார்கள். அன்னை மணியம்மையார் முதலமைச்சரிடம் முறையிட்டு, உடல்களை வாங்கி வந்து திருசசியில் ஊர்வலமாக எடுத்துச் சென்று புதைத்தார்கள். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் இப்பொழுது குறைந்த நபர்கள் மட்டுமே உயிரோடு இருப்பார்கள். அவர்கட்கு மரியாதை செய்வதோடு மறைந்தவர்கட்கு நமது வீரவணக்கத்தை தெரிவிக்க அனை வரும் திருச்சி நோக்கி வாருங்கள்.
இந்த விழாவை 63ஆவது ஆண்டு விழாவாக கருதுவோம்.
வாரீர்! வாரீர்!!
– பெரியார் பெருந்தொண்டர் தாராசுரம் வை.இளங்கோவன்
