சென்னை, நவ.19- சென்னை அடுத்த கோவளத்தில் ரூ.471 கோடியில் புதிதாக அமைக்கப்பட உள்ள 6ஆவது நீர்த்தேக்க திட்டத்தின் முதல் கட்டப்பணிக்கு நீர்வளத் துறை ஒப்பந்தம் கோரி உள்ளது.
புதிய நீர்த்தேக்கம்
சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு குடிநீர் தேவைக்காக செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க முடிவு செய்யப்பட் டது.
அதன்படி 1.6 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட ஒரு புதிய நீர்த்தேக்கம் கட்டப்பட உள்ளது. சுமார் ரூ.471 கோடி மதிப்பில் இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட உள்ளது. பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைக்கு இடையே திருப்போரூர் அருகே அரசு நிலத்தில் இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது.
ஒப்பந்த அறிவிப்பு
நீர்த்தேக்கம் அமைக்கும் பணியில் தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கோவளம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசின் உப்பு கழக நிறுவனத்திற்கு சொந்தமான 4 ஆயிரத்து 375 ஏக்கர் நிலத்தில் நீர்த்தேக்கம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்க, தமிழ்நாடு நீர்வளத் துறை ரூ.32 கோடிக்கு ஒப்பந்தம் கோரி உள்ளது.
இது தொடர்பாக கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது. விரைவில் இதற் கான பணிகள் தொடங்கப்பட்டு, அடுத்த 3 ஆண்டுகளில் இந்த பணிகள் நிறைவடையும். வீராணம் ஏரியை தவிர்த்து சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் இது 6ஆவது நீர்த்தேக்கமாகும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.
