– வீ. குமரேசன்
முதல்நாள் நவம்பர் 1ஆம் நாள் காலை 8.00 மணியிலிருந்து மாநாட்டில் நேரடியாக வந்து பங்கேற்க விரும்பியவர்கள் (பெரிதும் மெல்போர்ன் நகரைச் சார்ந்தவர்கள்) தங்களைப் பதிவு செய்து கொண்டனர். கடந்த 4 மாதங்களாகவே பல நாடுகளிலிருந்து இணைய வழியாகப் பலர் பதிவு செய்திருந்தனர்.
நாட்டின் முன்னோடி மூத்தோருக்கு மரியாதை
ஆஸ்திரேலியாவில் எந்த ஒரு பொதுநிகழ்ச்சியிலும் அந்தக் கண்டத்திற்கு ஆங்கிலேயர்களின் குடியமர் வுக்கு முன்பாகவே வாழ்ந்து வந்தோருக்கு மரியாதை தெரிவித்து நிகழ்ச்சியினை தொடங்குவது அந்த நாட்டின் வழக்கம். அந்த வகையில் அந்த முன்னோடிக் குடிகளின் வரும் தலைமுறையினருக்கும் மரியாதை செய்து அவர்களையும் வரவேற்றனர். அடுத்து ஆஸ்திரேலியாவின் கீதம் இசைக்கப்பட்டது. அடுத்ததாக மொழி வாழ்த்து பாடப்பட்டது. அனைவரும் எழுந்திருந்து மரியாதை செலுத்தினர்.
முனைவர் அண்ணாமலை மகிழ்நன்
மாநாட்டில் பங்கேற்கும் பேராளர்கள், பார்வை யாளர்கள் மற்றும் பல நாட்டுத் தலைவர்கள், ஆஸ்தி ரேலிய நாட்டு மக்கள் பிரதிநிதிகள் அனைவரையும் ஆஸ்திரேலியா – பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர் முனைவர் அண்ணாமலை மகிழ்நன் வரவேற்று உரையாற்றினார்.

மாநாட்டில் ஆ.இராசா
தமிழ்நாடு முதலமைச்சரின் தொடக்கவுரை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெரியார் பன்னாட்டு மாநாட்டிற்கு வழங்கிய தொடக்க உரையினை பதிவு செய்து அனுப்பிய அந்த பதிவுக் காட்சி ஒளிபரப்பப்பட்டது. கடல் கடந்து பெரியாரின் மனிதநேய பன்னாட்டு மாநாடு ஆஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் நடைபெறுவது குறித்து தனது மகிழ்ச்சியினையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தியும் ஒளிபரப்பப்பட்டது.
ஆஸ்திரேலிய நாட்டு மாண்பமை செனட்டர்
மாநாட்டின் தொடக்க உரையினை ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் புதிய தெற்குவேல்ஸ் செனட்டர் டேவிட் ஸூபிரிட்ஜ் (David Shoebridge) வழங்கினார்.
தமிழர் தலைவரின் முதன்மை உரை
தொடக்க நிகழ்ச்சியின் முதன்மை உரையினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் காணொலி வழியாக வழங்கினார். ஆசிரியர் அவர்களது பேச்சின் ஒரு பகுதி:
சமூக நெருக்கத்திற்கும், ஒருங்கிணைப்பிற்கும் எங்கள் நாட்டில் மிகப்பெரிய தடைக்கல்லாக இருப்பதே ஜாதி அமைப்புதான். ஜாதிகள் எப்போதுமே எல்லோரையும் பிரித்துப் பார்ப்பவை. பாகுபாடற்ற நெருக்கம் மட்டுமே அனைவரையும் ஒருங்கிணைக்கும். ஜாதிப் பாகுபாடுதான் எங்கள் நாட்டில் அதைத் தடுத்து வந்துள்ளது; இன்றும் தடுத்து வருகிறது.

அரங்கமூர்த்திக்குப் பாராட்டு
சமூக நெருக்கத்தின் அடிப்படையாக விளங்கக் கூடியது சுயமரியாதை. நாம் ஏன் அடிமைகளாக வாழவேண்டும் என்றும் பழமைவாத சிந்தனைகளை நாம் ஏன் ஏற்கவேண்டும் என்றும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வைக்கிறது நம் சுயமரியாதை. நீண்டகாலமாகவே ஒரு சிலர், பலரை அடிமைப்படுத்தி வாழும் அவலநிலை எங்களுக்குத் தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. இதன் விளைவாகவே தந்தை பெரியாரின் அயராத முயற்சிகளின் பலனாக 1925இல் சுயமரியாதை இயக்கம் துவங்கியது. அவருடைய உயர்ந்த கொள்கையை உளமாற வரவேற்றார் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் ஒருமித்த கருத்துடன் போராடி வாழ்ந்தவர்கள் அவர்கள் இருவரும்.
தந்தை பெரியார் – பாபா சாகேப்
அம்பேத்கர் படங்கள் திறப்பு
மாநாட்டுத் தொடக்க நிகழ்ச்சியில் மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கான மனிதநேய தத்துவத்தினை வழங்கிய சமூகப் புரட்சியாளர்கள் தந்தை பெரியார் – பாபா சாகேப் அம்பேத்கர் படங்கள் திறக்கப்பட்டன.
தந்தை பெரியாரின் ஒளிப்படத்தினையும், பாபாசாகேப் அம்பேத்கரின் ஒளிப்படத்தினையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் இந்திய ஒன்றிய மேனாள் அமைச்சர், இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் மாண்பமை ஆ. ராசா அவர்களும், திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் திறந்து வைத்தனர்.
பெரியார் சுயமரியாதை பிரச்சார
நிறுவனத்தின் நூல்கள் வெளியீடு
மாநாட்டில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் பதிப்பித்த நூல்கள் வெளியிடப்பட்டன.
- ‘ஆஸ்திரேலியாவில் பெரியார்’ – திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களும் 4-ஆம் பெரியார் பன்னாட்டு மாநாட்டின் முன்னேற்பாடு, ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு 2025, மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கு சென்றது பற்றியும், மெல்போர்ன், பிரிஸ்பேன், சிட்னி ஆகிய நகரங்களில் நடைபெற்ற கூட்டங்களில் பேசியவை ஆகியவற்றின் தொகுப்பு நூல் இது.
- ‘Death’ – பெரியார் மருத்துவ சேவை மய்யத்தின் இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன் அவர்கள், ‘மரணம் எதனால் ஏற்படுகிறது?’ என்பது பற்றி அவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘மருத்துவ அறிவியல் கட்டுரைகளின்’ தொகுப்பு நூல் இது.
இந்த இரண்டு நூல்களும் மாநாட்டு தொடக்க நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. மேலும் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதல் மூன்று சுயமரியாதை மாகாண மாநாடுகளில் (செங்கல்பட்டு, ஈரோடு, விருதுநகர்) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வழக்குரைஞர்
அ.அருள்மொழி அவர்கள் தமிழில் தொகுத்த ‘திராவிடப் பேராணை – சட்டங்களாகிய தீர்மானங்கள்’ மற்றும் ஆங்கிலத்தில் தொகுத்த ‘Dravidian Charter – Resolutions to Legislation’ புத்தகமும் வெளியிடப்பட்டன.
‘புதிய குரல்’ அமைப்பின் சார்பாக ஓவியா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ‘On Rationalism’ என்ற நூலும் வெளியிடப்பட்டது.
சமூகநீதி – அமர்வு
தேநீர் இடைவேளைக்குப் பின்னர் பேராளர்கள் அரங்கிற்குள் வந்து அமர்ந்தனர்.
திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு அரசு சமூகநீதி கண்காணிப்புக் குழுவின் தலைவருமான பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சமூகநீதி அமர்வின் தொடக்கவுரையினை ஆற்றினார். அடுத்து ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் பால்லாங், ‘இல்லச் சூழல், தொடக்கநிலை மற்றும் தனி மனித உருவாக்கத்தில் பண்பாட்டு நீதி (Cultural Justice in Home made, Amateur and Do it Yourself Creativitiy) என்ற தலைப்பில் உரையாற்றினார். பண்பாட்டில் நீதி என்பது சொந்த விருப்பு வெறுப்பு உள்ளிட்ட தளங்களையும், உள்ளடக்கும் என்ற பொருளில் சுருக்கமாகப் பேசினார்.
நவீன அடிமைத்தனம் (Modern Slavery) என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவின் மேனாள் செனட்டர் மாண்பமை லீ ரோகிஅன்னான் (Lee Rohiannon) உரையாற்றினார். ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்து, நடத்திய போராட்டத்தில் பங்கேற்று ஆட்சியினரால் கைது செய்யப்பட்டவர் அவர். அடுத்து “உலக முன்னேற்றத்திற்கு ஜாதி ஒரு தடை” (Caste as a Barrier to Global Progress) எனும் தலைப்பில் மெல்போர்ன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹரிபாபுஜி உரையாற்றினார். இந்தியாவிலிருந்து படித்து வெளியேறி பல நாடுகளில் சிறந்த பணிநிலையில் இருப்பவர்கள் இந்தியாவில் நிலவும் ஜாதிப் பாகுபாட்டை தாங்கள் செல்கின்ற நாட்டுச் சூழலிலும் கடைப்பிடித்து வருகின்ற அவலநிலையைச் சுட்டிக்காட்டினார். பாகுபாடு காட்டுவதற்கு எதிராகச் சட்டங்கள் சில நாடுகளில் நிலவி வந்தாலும் அதனையும் மீறி ஜாதிப் பாகுபாடு தலைதூக்கி வருகிறது. இந்த ஜாதிப் பாகுபாட்டினால் பல நாடுகளின் முன்னேற்றம் தடைப்படுகின்ற நிலைமைகள் நீடிக்கின்றன. ஜாதிப் பாகுபாடு உலகளாவிய அளவில் ஆபத்தினை விளைவிக்கவல்லது. இதனை எதிர்த்து அந்தந்த நாடுகள் கடுமையான சட்டத்தினை இயற்றி ஜாதிப் பாகுபாட்டினை ஒழிக்க முன்வரவேண்டும் என்ற எச்சரிக்கையினை தெரிவித்து உரையாற்றினார்.
நல்வாழ்வும் பகுத்தறிவும் -அமர்வு
அடுத்த அமர்வு நல்வாழ்வு மற்றும் பகுத்தறிவும் (Health and Rationalism) என்ற தலைப்பில் துவங்கியது. ஆஸ்திரேலிய நாட்டின் செனட்டர் மாண்பமை டாக்டர். மைக்கேல் ஆனந்தராஜா அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார். தமிழ் பூர்வீகத்துடன் ஆஸ்திரேலியாவில் செனட்டராக முதன்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர் அவர். அடுத்து முதன்மை உரையினை ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் துணைத் தலைவர் டாக்டர். முகம்மது ஹாரூண் காசிம் அவர்கள் வழங்கினார். மாநாட்டு ஏற்பாட்டுப் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டவர் அவர்.
அடுத்ததாக மனிதநேயமும், மருத்துவ நெறியும் (Humanism and Medical Ethics) என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவின் டாக்டர் கார்த்திக் தங்கராஜ் உரையாற்றினார். தனது உரையின் ஊடாக ‘மனிதநேயம் என்பது பகுத்தறிவும், ஒத்தறிவும் சேர்ந்த இயல்பு’ (Humanism is the combination of rationalism and empathicism) என வெகுநேர்த்தியாக மாநாட்டு நோக்கத்தினை வெளிப்படுத்தினார். பின்னர் பெரியார் மருத்துவ சேவை மய்யம் (Periyar Medical Mission) அமைப்பின் இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன் ‘பகுத்தறிவும் மருந்துப் பொருள்களும்’ (Rationalism and Medicines) என்ற தலைப்பில் உரையாற்றினார். தந்தை பெரியாருக்கு மருத்துவ சேவையாற்றிய மருத்துவர்கள் கூறியதை நினைவுகூர்ந்து பேசினார். தஞ்சையில் ஒருமுறை மருத்துவர்கள் மாநாட்டில் உரையாற்றிட பெரியாரை அழைத்திருந்தனர். தனது உரையின் பொழுது, ’மனிதருக்கு ஏற்படும் நோய்கள் என்பவை கடவுள் கொடுத்த தண்டனை என்ற உண்மை மக்களிடம் பரவலாக நிலவுகிறது. நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து அவர்களைக் குணப்படுத்துவதால் மருத்துவர்கள் கடவுள் விதித்த தண்டனைக்கு எதிராக நடப்பவர்கள் என்று கருதப்படலாம். நானும், எனது இயக்கமும் ‘கடவுளின் செயலுக்கு’ எதிராக செயல்படுபவர்கள் என்பதாக அறியப்படுகிறோம். எனவே அந்த வகையில் நாங்களும், மருத்துவர்களும் ‘கடவுளுக்கு எதிரானவர்கள்’ என்று உரையாற்றி நகைச்சுவையுடன் பகுத்தறிவு கருத்தாழமிக்க பேச்சை வழங்கினார்.
மெல்போர்ன் மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் இரா.கவுதமன் அவர்கள், இன்றைக்கும் மனிதருக்கு அம்மை நோய் வந்துவிட்டால், ‘மாரியாத்தாள் (தண்டனை) வந்து விட்டாள்’ என்று நம்பி உரிய மருத்துவ சிகிச்சையினை மறுக்கும் மக்களும் உள்ளனர் என்று நடைமுறையில் உள்ளதை எடுத்துக் கூறினார். மருத்துவச் சேவையும், மருந்துப் பொருள்களும் பகுத்தறிவு சார்ந்த பயன்பாட்டிற்கு உரியவை என்பதை சுட்டிக் காட்டினார். அடுத்ததாக ‘இடையூறு காலங்களில் மருத்துவச் சேவைகளின் பங்கு’ (Role of Doctors during Distruptive Times) எனும் தலைப்பில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற டாக்டர் ஆர்.கோகுல் கிருபா சங்கர் உரையாற்றினார். இடையூறு ஏற்படும் காலங்களில் மனிதர்களின் செயல்பாடுகளில் பகுத்தறிவு அணுகுமுறை மங்கி விடுகிறது. அந்த நிலையிலிருந்து மனிதர்களை பகுத்தறிவு சார்ந்த மருத்துவ சேவையினால் அவர்களை மீட்டெடுக்கும் பணியில் மருத்துவர்கள் மகத்தான பங்கினை ஆற்றி வருகின்றனர். நண்பகல் உணவு இடைவேளைக்குப் பின்னர் அடுத்த அமர்வு தொடங்கியது.
மனித நேயமும், சட்டமும் – அமர்வு
‘புதிய குரல்’ அமைப்பின் தலைவர் ஓவியா அவர்கள் அமர்வின் தொடக்க உரையினை ஆற்றினார். அமர்வின் முக்கிய உரையினை கருநாடக மாநில அரசின் மேனாள் தலைமை வழக்குரைஞரும், சமூகநீதி செயற்பாட்டாளருமான வழக்குரைஞர் முனைவர் பேராசிரியர் ரவிவர்மகுமார் அவர்கள் வழங்கினார். தனது உரையின் பொழுது இனப் பாகுபாடும் (racial discrimination), ஜாதிப் பாகுபாடும் (caste discrimination) ஒழிக்கப்பட வேண்டியவையே எனக் குறிப்பிட்டு விட்டு அமர்ந்திருந்த பேராளர்களை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்டார். இனப்பாகுபாட்டைவிட ஜாதிப் பாகுபாடு எந்த வகையில் மோசமானது எனக் கேட்டார். பேராளர்கள் பக்கமிருந்து எவரும் பதிலளிக்க முன்வராத நிலையில், பேராளராகப் பங்கேற்ற திராவிடர் கழக மகளிர் அணியின் மாநிலச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அவர்கள் எழுந்து நின்று பதிலளித்தார்.
“ஒடுக்கப்பட்ட மக்களை இழிநிலைப்படுத்திடும் போக்கு இனப்பாகுபாட்டில் கிடையாது. ஜாதிப் பாகுபாட்டின் தனித்தன்மையே ஒடுக்கப்பட்டோரை இழிநிலைக்கு ஆளாக்கும் போக்கு இருப்பதுதான். இனப் பாகுபாட்டைவிட மோசமானது ஜாதிப்பாகு பாட்டில் சுமத்தப்படும் இழிநிலையே” என்றார் அவர்.
தகடூர் தமிழ்ச் செல்வியின் பதிலைக் கேட்டு வழக்குரைஞர் ரவிவர்மகுமார், ‘மிகவும் சரி’ எனக் கூறி பாராட்டு தெரிவித்தார். பெரியார் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் கொள்கைத் தெளிவில் மிகவும் சரியாக உள்ளனர் என்பதைப் பறைசாற்றுவதாக தகடூர் தமிழ்ச்செல்வியின் பதில் இருந்தது.
அடுத்து உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராக வாதிடும் முனைவர் ஆதித்ய சொந்தி அவர்கள் ‘இந்திய உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் அம்பேத்கர் – ஓர் அதிகாரப்பூர்வமான ஆய்வு’ (Ambedkar in Judgments of the Supreme Court of India : An Authenticity Audit) எனும் தலைப்பில் உரையாற்றினார். சமூகநீதி மற்றும் சமூகசீர்திருத்தம் குறித்த வழக்குகளில் அம்பேத்கரின் கூற்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது குறித்து விரிவாகப் பேசினார்.
அடுத்து ஆஸ்திரேலியாவின் தினகரன் செல்லையா ‘ஸநாதன கோட்பாடுகளில் ஜாதிப்பாகுபாட்டின் வேர்கள்’ (Roots of Caste Discrimination in Sanadan Laws) என்ற தலைப்பில் உரையாற்றினார். ‘இந்திய சமூகத்தில் ஜாதிப் பாகுபாடு நிலைத்து விட்டதற்கு நிரந்தரமானது’ என்று பொருள்படும் ஸநாதனம் தான் அடிப்படைக் காரணம் என்றும், அதுவே பல நூற்றாண்டுகளாக ஜாதியப் பாகுபாடு இந்திய மண்ணில் நிலைத்துவிட்டதற்கு மூல காரணம் எனவும் எடுத்துரைத்தார்.
அடுத்ததாக, இங்கிலாந்து – ஆக்ஸ்போர்டு புரூக்ஸ் பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்வி மாணவி இனியா பிரபு வசுமதி ‘இந்திய சமூக அரசியல் தளத்தில் ஒரு விசாரணை’ (An Enquiry into India’s Socio-Political Landscape) எனும் தலைப்பில் உரையாற்றினார். இதே தலைப்பில் இவர் எழுதிய ஆங்கிலப் புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கி அண்மையில் சென்னை – அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் அந்தப் புத்தகத்தினை வெளியிட்டு வாழ்த்தியவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமர்வின் இறுதி உரையாக ‘ஆதிக்க தலைமைப் பண்பு மிக்க ஆண்களின் மனித உரிமை மீறல்கள்’ (Human right violations, Alpha Males) எனும் தலைப்பில் ஜப்பான் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த ஆர்.செந்தில்குமார் பேசினார். ஆல்பா ஆண்கள் என்பவர்கள் தலைமைப்பண்பு மிக்கவர்களாகவும். ஒத்தறிவு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அதே சமயம் ஆதிக்க மனப்பான்மையுடன் சரியாக நடந்து கொள்கிறோம் என்ற பெயரில் மனித உரிமை மீறல்களில் தெரிந்தோ, தெரியாமலோ ஈடுபட்டு விடுவார்கள். எனவே, தன்னளவில் நியாயம் என்பதை எவ்வளவு சரியாகக் கணித்தாலும், உரியவரின் வெளிப்படுத்தலின் அடிப்படையில் செயல்படுதல் ஆகச் சிறந்தது என்பதே அவருடைய உரையின் கருப்பொருள் ஆக இருந்தது.
மனித நேயமும் ஊடகங்களும் – அமர்வு
தேநீர் இடைவேளைக்குப் பின்னர், ‘மனிதநேயமும் ஊடகங்களும்’ (Humanism and Media) எனும் தலைப்பில் அமர்வு நிகழ்வுகள் நடந்தன. அமர்வின் முதன்மை உரையினை இந்திய நாடாளுமன்ற – மாநிலங்களவை மாண்பமை உறுப்பினர் கவிஞர் ராஜாத்தி சல்மா வழங்கினார். அடுத்து ‘மனித நேயமும் இலக்கியங்களில் பகுத்தறிவும்’ (Humanism and Rationalism in Literature) எனும் தலைப்பில் சிங்கப்பூர் தமிழ்க் கவிஞர் மா. அன்பழகன் பேசினார். தனது பேச்சில், கோவாவின் விடுதலைக்காகப் போராடி போர்ச்சுகல் நாட்டு சிறையில் அல்லல்பட்ட ராணடே, விடுதலைக்குப் பின்னர், தனது விடுதலைக்கு வித்திடும் வகையில், போப்பாண்டவரை அறிஞர் அண்ணா வாடிகன் நகரில் சந்தித்தபொழுது, வைத்த வேண்டுகோளை நன்றி பெருக்குடன் வெளிப்படுத்தி, சென்னைக்கு வந்து அறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தியதை தனது (மா.அன்பழகன்) திரைப்படத்துறை சார்ந்த பன்முக ஆற்றலுடன் அனைவரும் ஆர்வமுடன் கேட்கும் வகையில் உணர்ச்சிகரமாக எடுத்துரைத்த பாங்கு பாராட்டுதலைப் பெற்றது.
அடுத்து, கத்தார் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த மோகித் பலகிரி அவர்கள் ‘பெரியார் சிந்தனையின் பல்வகைப் பரிமாணங்கள்’ (Periyar Intersectionality) எனும் தலைப்பில் உரையாற்றினார். பெரியார் சிந்தனைகளின் பல்வகைப் பரிமாணங்களின் மய்ய ஓட்டம் என்பது மனிதநேயமும், மனித சமத்துவமுமே என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.
‘ஆஸ்திரேலியாவில் ஜாதியத்தை தடுத்தல்: ஒரு விவரணம்’ (Documentary : Resisting Casteism in Australia) எனும் தலைப்பில் சீன நாட்டு நெய்போ – நாட்டிங்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் விக்ரந்த் கிஷோர் விவரணப் படத்துடன் விளக்கமும் தந்து உரையாற்றினார்.
முதல்நாள் மாநாட்டின் நிறைவுக் குறிப்பினை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவர் அரங்கமூர்த்தி அவர்கள் வழங்கினார். மாநாட்டின் முதல் நாள் நிகழ்வு நிறைவடைந்தது.
– தொடரும்
