பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
தேநீர்க் கடைகளில்கூட, ‘இங்கு அரசியல் பேசாதீர் கள்!’ என்னும் அறிவிப்புப் பலகை இருப்பதைப் பார்த்திருக்கிறோம். ‘பொது இடங்களிலும், வீடுகளி லும் அரசியல் பேசினால், அது கலவரத்தில் முடிந்து விடுமோ’ என்னும் அச்சமே இதற்குக் காரணம்!
ஆனால், திராவிட இயக்கமோ, ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் தன் அரசியலைத் தொடங் கிற்று என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மற்ற இயக்கங்களுக்கும் திராவிட இயக்கத்துக்குமான ஓர் அடிப்படை வேறு பாடு இது என்று கூடச் சொல்லலாம். மற்ற இயக்கங்கள், கட்சிகள் எல்லாம் குடும்பம் வேறு, அரசியல் வேறு என்று இருந்த நிலையில், திராவிட இயக்கம் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் தன் அரசியல் கொள்கை, கோட்பாட்டைத் தொடங்கியது! அதுவே அதன் பெரும் வெற்றிக்கும் ஒரு காரணம் ஆயிற்று!
குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்டுதல் என்பதில் தொடங்கி, இறந்த பிறகு நீத்தார் நினைவு, திதி போன்ற சடங்குகளை மாற்றி, நினை வேந்தல், படத்திறப்பு நிகழ்வாக ஆக்கியது வரையில் குடும்பங்களின் ஒவ்வொரு அசைவிலும், ஜாதி, மதச் சடங்குகளைப் புறக்கணித்து, புதிய பண்பாட்டை உருவாக்க முயன்றது திராவிட இயக்கத்தின் பெரும் பணிகளில் ஒன்றாக இருந் தது. அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்கது சுயமரியாதைத் திருமணம்!
திருமணம் அல்ல… புரட்சி!
அய்யா பெரியார் அவர்களால் அறிமுகப்படுத்தப் பட்ட இந்தச் சுயமரியாதைத் திருமணம், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள ‘சுக்கிலநத்தம்’ என்னும் கிராமத்தில் முதன்முதலாக நடைபெற்றது. பிறகு பல்வேறு சுயமரியாதைக் குடும்பங்களிலும் அத்தகைய திரு மணம் நடைபெறத் தொடங்கியது. அது வெறும் திருமணமாக இல்லாமல், சமூகத்தில் உருவாக்கப்பட்ட ஒரு புரட்சியாகவே அமைந்தது! பல வீடுகளில், மூத்த தலைமுறையினர் இந்தத் திருமண முறையை ஏற்கவில்லை. இளைஞர்கள் போராடித்தான் அந்த உரிமையைப் பெற வேண்டி இருந்தது!
திராவிட இயக்கக் கோட்பாடுகளிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகிய, சுயமரியாதைத் திருமணம் பற்றி நாம் விரிவாக அறிந்து கொள்வதற்கு திராவிடர் கழகத்தின் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் எழுதியிருக்கும் ஒரு நூல் பெரிதும் உதவும். ‘சுயமரியாதைத் திருமணம் – தத்துவமும் வரலாறும்’ என்பது அந்த நூலின் பெயர். 1993-ஆம் ஆண்டில் அந்த நூலின் முதல் பதிப்பு வெளிவந்தது. மேலும் விரிவாக்கப்பட்ட ஏழாவது பதிப்பு அண்மை யில் வெளிவந்துள்ளது!
சுயமரியாதைத் திருமண தீரர்கள்!
1928-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி சுக்கிலநத்தம் என்னும் ஊரில் தொடங்கிய முதல் சுயமரியாதைத் திருமணம் உள்பட, தமிழ்நாட்டில் நடைபெற்ற பல் வேறு திருமணங்களைப் பற்றிய செய்திகளையும் இந்த நூல் தருகிறது. இத்திருமண முறை வெறும் பார்ப்பன எதிர்ப்பு மட்டுமன்று. ஒட்டுமொத்தமாகச் ஜாதி, மதச் சடங்குகளை மறுத்தல், பாலின சமத்துவத்தை முன் னிறுத்துதல், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பகுத்த றிவை வளர்த்தல் போன்று பல நோக்கங்களையும் உட்கொண்டதாக இருக்கிறது. இப்படிச் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட புகழ்பெற்றவர்களின் பெயர்கள், மற்றும் குறிப்புகள் மட்டுமின்றி, இத்திரு மணங்கள் சந்தித்த பல்வேறு போராட்டங்களையும் ஆசிரியர் வீரமணி அவர்கள் நூலில் விளக்கி உள்ளார்.
குறிப்பாக, 1934-ஆம் ஆண்டு நடைபெற்ற சுய மரியாதைத் திருமணத்துக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், 1953- ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு பற்றிய விரிவான செய்திகளும் நூலில் அடங்கியுள்ளன. நீதிமன்றம், இத்திருமண முறையை ஏற்காத பிறகும் கூட, தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமணங்கள் நடந்து கொண்டேதான் இருந்தன.
1967 – ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆன பிறகுதான் சுயமரி யாதைத் திருமணங்கள் செல்லுபடி ஆகும் என்று ஆயிற்று.
சட்டமான சுயமரியாதைத் திருமணம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில், அறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது என்றாலும், அன்றைய தினம் அண்ணா அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன் அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற சில விவாதங்கள் சுவையானவை.
“இப்போது இதனைச் சட்டமாக்க வேண்டிய தேவை என்ன?” என்று கருத்திருமன் கேட்டார். “ஆம், ஏற்கெனவே இது சட்டமாக ஆக்கப்பட்டிருக்க வேண் டும். வழக்கத்தில் ஒன்று தொடர்ந்து இருக்குமானால், அது சட்டத்தின் ஏற்பைப் பெற்றுவிடும் என்பது தானே உண்மை” (CUSTOM BY USAGE GETS LEGAL SANCTION) என்றார் அண்ணா.
மேலும் “இப்படித் திருமண முறையை மாற்றி விட்டால், புரோகிதர்களின் நிலை என்ன ஆகும்?’ என்று தன் கவலையை வெளிப்படுத்தினார் கருத்திரு மன். அண்ணா சொன்னார், “அப்படியா.. இப்படித்தான் திருமணம் நடைபெற வேண்டும் என்று நாம் சட்டம் இயற்றவில்லை. இப்படியும் நடைபெறலாம் என்றுதான் கூறுகிறோம். எனவே, அவர்கள் குறித்து நீங்கள் மிகவும் கவலைப்படத் தேவையில்லை” என்றார் அண்ணா.
அண்ணா கொடுத்த நெல்லிக்கனி!
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது குறித்து அறிஞர் அண்ணா அவர்கள், ஒரு திருமண விழாவில் அய்யா பெரியார் அவர்களைச் சந்தித்த போது “உங் களுக்கு நான் ஒரு கனியைக் கொண்டு வந்திருக்கிறேன்” என்றார்.
அதியமானுக்கு அவ்வை கொடுத்த நெல்லிக்கனி போல, அய்யாவுக்கு அண்ணா கொடுத்த அரிய கனி இது!
எனினும் சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் 1996, 2015 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை வழக்குத் தொடுக்கப்பட்டது. இரண் டுமே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன!
2015-ஆம் ஆண்டு, வழக்கை விசாரித்த நீதிபதிகள், கவுல், சிவஞானம் ஆகியோர் அளித்த தீர்ப்பு வர லாற்றுச் சிறப்புமிக்கது. அசுவத்தாமன் என்பவர் கொடுத்த வழக்கில், ஆட்சியில் இருக்கும் கட்சி தன் கொள்கையை நிறைவேற்றுவதற்காக இச்சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டது.
ஒரு கட்சி ஆட்சிக்கு வருவதே தங்கள் கொள் கையை நிறைவேற்றுவதற்காகத் தானே என்று கேட்டார்கள் நீதிபதிகள். மேலும் இந்தச் சட்டத்தால், எந்தச் சிக்கலும் இல்லை. இதனை எதற்காக நீங்கள் விலக்கிக் கொள்ளச் சொல்கிறீர்கள் என்பதுதான் புரியவில்லை என்றும் நீதிபதிகள் கூறினார்கள்!
திராவிட இயக்கக் கொள்கைகளை ஏற்றுக் கொண் டவர்களின் வீடுகளில், புரோகிதத் திருமணங்கள் மறுக்கப்பட்டு, சுயமரியாதைத் திருமணங்கள் மட்டுமே நடைபெறும் என்னும் நிலையை ஏற்படுத்துவதுதான், அய்யாவுக்கும், அண்ணாவுக்கும், நாம் செய்கிற மதிப்பும், செலுத்துகிற நன்றிக் கடனுமாகும்!
நன்றி: ‘முரசொலி’, 9.5.2023