ராஜஸ்தானில் நடக்கும் எஸ்.அய்.ஆர் முகாமில் பல இஸ்லாமியர்கள் ‘தங்களிடம் இன்னும் விண்ணப்பப் படிவம் கொடுக்கவில்லை’ என்று புகார் கூறவந்த போது, பெண் அதிகாரி கேள்வி கேட்டால் ‘‘உங்கள் அத்தனைப் பெயரையும் பட்டியலில் இருந்து நீக்கி விடுவோம்’’ என்று கூறும் காணொலி பரவி வருகிறது
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், ஜோட்வாரா பகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கிவிடுவதாக தேர்தல் அதிகாரிகள் மிரட்டுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்
ஆசிஃப் மக்பூல் என்ற வாக்காளர், ரகுநாத்புரி, ஜோட்வாரா, வார்டு எண் 33இல் தங்களுக்கு படிவம் வரவில்லை என்றும், தேர்தல் அதிகாரியான. மிதிலேஷ் சவிதாவிடம், “என்னுடைய பெயர் – எனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏன் நீக்கப்பட்டன?” என்றும் கேள்வி எழுப்பினார்.
ஆரம்பத்தில் பதிலளிக்க மறுத்த அந்தப் பெண் அதிகாரி பின்னர், பெயர் நீக்கத்திற்கான காரணமாக, “யார் யார் என் வீட்டிற்கு வந்து படிவங்களை வாங்கவில்லையோ, அவர்களின் பெயர்களை நீக்கிவிடுவேன்” என்று கூறியிருக்கிறார்.
தேர்தல் ஆணைய விதிகளின்படி, ஒவ்வொரு பூத் நிலை அலுவலரின் முதன்மையான கடமை, வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது அல்லது பெயர் சேர்ப்பது தேவையான படிவங்களை வழங்குவதும், தகவல்களைச் சேகரிப்பதும்தான். வாக்காளர்களைத் தங்கள் வீட்டிற்கு வந்து படிவங்களைப் பெற்றுச் செல்லுமாறு கட்டாயப்படுத்துவது – அதிகார வரம்பை மீறிய செயல் என்றும், இது தேர்தல் ஆணையத்தின் வழி காட்டுதல்களுக்கு முரணானது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
‘வாக்காளரின் பெயர் நீக்கப்பட்டதற்கான சரியான காரணத்தைக் கூறாமல், முரணான பதிலைக் கூறிய அதிகாரிமீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
எஸ்.அய்.ஆர். திட்டம் வந்த அந்தத் தருணம் முதலே பிரச்சினை வெடித்துக் கிளம்பியது. ஏதோ ஒரு பின்னணியுடன் இது கொண்டுவரப்படுகிறது என்ற விமர்சனம் எழுந்தது.
தமிழ்நாட்டிலிருந்து அழுத்தமாகவே குரல் எழுப்பப்பட்டது.
‘அந்தப் படிவத்தைப் பார்த்தபோது, ‘எனக்கே தலைச் சுற்றியது!’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே, சொல்லும் அளவுக்கு – அந்தப் படிவத்தில் தேவையற்ற – குழப்பத்தை ஏற்படுத்தும் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.
வாக்காளரின் தாய், தந்தையர் வாக்களித்ததுபற்றி எல்லாம் எத்தனைப் பேருக்குத் தெரியும்? உறவினர் என்று கேட்கப்பட்டுள்ளது; அதில் தெளிவில்லை. ஒருவருக்கு எத்தனையோ பேர் உறவினர்கள் இருக்கலாம்; எந்த உறவினரைக் குறிப்பிடுவது என்பதிலே குழப்பம் ஏற்படுகிறது.
வீட்டுக் கதவு எண்களோ சரியானவைகளாக இல்லை; வீட்டுத் தலைவருக்கு ஒரு வீட்டு எண் – அவரது மனைவிக்கு வேறு ஒரு வீட்டு எண் என்பதெல்லாம் எதைக் காட்டுகிறது?
கடந்த தேர்தலில் ஒரே வீட்டு எண்ணில் குடியிருந்த கணவனும், மனைவியும், இப்பொழுது வேறு வேறு இடங்களில் இருப்பதாகத் தேடிப் பிடிக்கும் நிலைதான் இருக்கிறது.
வட மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கான வாக்குரிமை குறி வைக்கப்படுகிறது என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.
அசாமில் வாக்காளர்ப் பட்டியல் சேகரிப்பு
எஸ்.அய்.ஆர். முறையில் அமையாது என்பது இந்த அய்யப்பாட்டை மேலும் அழுத்தமாக எழுப்புகிறது.
வாக்குரிமை என்பது ஓர் அடிப்படை உரிமை! அதில் குளறுபடிகளைச் செய்வது என்பது ஜனநாயகத்தின் ஆணி வேரையே வெட்டி வீழ்ந்துவதாகும்! இந்தத் தான்தோன்றித்தனத்திற்கெல்லாம் ஒரே தீர்வு – மக்களின் விழிப்புணர்வே!
