சென்னை, நவ.19 மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ‘சாமி’ கும்பிட்டுக் கொண்டிருந்த மருத்துவக் கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசுத் துறை ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை பகுதி யில் உள்ள தனியார் ஆயுர்வேத கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வரும் 21 வயது மருத்துவ மாணவி ஒருவர், கடந்த 16 ஆம் தேதி மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு வந்தார்.
அவரை 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் பின்தொடர்ந்தார். பின்னர், அந்தப் பெண் ‘சாமி’ வழிபாடு செய்து கொண்டிருந்தபோது, பின்தொடர்ந்து வந்த அந்த நபர் தவறான நோக்கத்துடன் உரசி பாலியல் தொல்லை கொடுத்தார்.
அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, சம்பந்தப்பட்ட நபரைக் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த நபர், “இப்ப டித்தான் செய்வேன். உன்னால் முடிந்ததை செய்” எனக் கூறியவாறு அங்கிருந்து தப்பிச் சென்றார். வேதனையடைந்த அந்த மாணவி, இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதன்படி, காவல்துறையினர் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (பிஎன்எஸ்) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, மாணவியிடம் பாலி யல் அத்துமீறலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை கார் ஓட்டுநரான திருவல்லிக்கேணியைச் சேர்ந்த விஜயகுமாரை (வயது 48) கைது செய்தனர்.
