திருவனந்தபுரம், நவ.19- சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார். வழிபாடு முடிந்ததும், உடனே மலையில் இருந்து இறங்க காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக என்று கடந்த 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கோவிலில் கடந்த 3 நாள்களில் 2 லட்சத்து 34 ஆயிரம் பேர் சாமி வழிபாடு செய்துள்ளனராம். சபரிமலையில் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு சீசன் தொடக்கம் முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்டம் அதிகரித்து வருவதால் அடிப்படை வசதிகளை பக்தர்கள் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சபரிமலையில் வழக்கமாக மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்படும். ஆனால், நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மதியம் 2 மணிவரை வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்பு நடை அடைக்கப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்பட்டது.
கூட்ட நெரிசல் காரணமாக நேற்று (18.11.2025) 10 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். பம்பையிலும் கூட்டம் அதிகமாவதால் நேற்று (18.11.2025) மாலையில் நிலக்கல்லில் பக்தர்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர்.
இதனிடையே நேற்று கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். கேரள மாநிலம் கோழிக்கோடு எடக்குளம் பகுதியை சேர்ந்தவர் சதி (வயது 59). இவர் நேற்று (18.11.2025) காலை தனது கணவர் மற்றும் அய்யப்ப குழுவினருடன் சபரிமலைக்கு வந்தார். இந்த குழுவினர் பம்பையில் இருந்து கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது அப்பாச்சி மேடு பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி சதி திடீரென மயங்கி விழுந்தார். அவரை கணவர் மற்றும் சக பக்தர்கள் மீட்டு பம்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
