தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு! கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு! வளர்ச்சியைப் பரவலாக்கும் தமிழ்நாட்டின் ‘திராவிட மாடலு’க்கு முட்டுக்கட்டை போடும் பா.ஜ.க!

3 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு  – வளர்ச்சியைப் பரவலாக்கும் தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ அரசுக்கு முட்டுக்கட்டை போடும் பா.ஜ.க! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

கோவை, மதுரை ஆகிய நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இரு மாநகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது!

கோவை மாநகரத்தில் ரூ.10,740 கோடியில் 34.8 கிமீ தொலைவுக்கும், மதுரையில் ரூ.11,368 கோடியில் 32 கிமீ தொலைவுக்கும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவதற்கான திட்ட அறிக்கையைத் தயார் செய்து, தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி இருக்கிறது. இந்தத் திட்ட அறிக்கை நீண்ட காலமாக (20 மாதங்களுக்கும் மேலாக) நிலுவையில் இருந்த நிலையில், தற்போது இரு மாநகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில் பா.ஜ.க. செய்துள்ள அப்பட்டமான வெறுப்பு நடவடிக்கை ஆகும். சென்னையின் வளர்ச்சிக்குப் பொதுப் போக்குவரத்து பெருமளவில் உதவியுள்ளதைப் போல, பிற முக்கிய நகரங்களையும், அதற்கிணையாக வளர்ப்பதன் மூலம் வளர்ச்சியைப் பரவலாக்குவது தான் தமிழ்நாடு அரசின் நீண்டகாலத் திட்டம். தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சிக்கு இத்தகைய முன்னெடுப்புகளே காரணமாகும்.

அந்த வகையில் தான், கோவை, மதுரை ஆகிய மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. ஆனால், அவை 20 லட்சம் மக்களுக்குக் குறைவானவர்கள் வசிக்கும் நகரங்கள் என்று சொல்லி, அதற்கான அனுமதியை ஒன்றிய அரசு மறுத்துள்ளது.

குறைந்த அளவு மக்கள் தொகை கொண்ட வட மாநிலங்களுக்கு ஒப்புதல்!

அதேசமயம் இதே அளவிலான மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா, மீரட், கான்பூர், மகாராட்டிராவில் நாக்பூர், புனே, மத்தியப் பிரதேசத்தில் இந்தூர், குஜராத்தில் சூரத், ஒடிசாவின் புவனேஸ்வர், அரியானா மாநிலத்தின் குருகிராம் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது (பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் இவை).

கெடு நோக்கம் கொண்டு செயல்படும்
ஒன்றிய பா.ஜ.க. அரசு!

ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு என்னும் போக்குத்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளில் வெளிப்படையாகத் தெரி கிறது. தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியைக் கெடுக்கத் திட்டம்; தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுக்கத் திட்டம்; தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பைச் சிதைக்கத் திட்டம் என்று, தமிழ்நாட்டுக்கு எது என்றாலும் கெடு நோக்கம் கொண்டு செயல்படும் அரசாகவே ஒன்றிய பா.ஜ.க. அரசு நடந்துகொள்கிறது.

நிதி நெருக்கடிகளைச் சந்தித்து, திட்டத்தின் பணிகளை வேகமாக முடித்துக் கொண்டு வருகிறது!

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கும் நிதி ஒதுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த ஒன்றிய அரசு, கடந்த ஆண்டு கடும் கண்டனங்கள் எழுந்த பின், இதுவரை மொத்தம், வெறும் சுமார் 8,000  கோடி ரூபாய் என்ற அளவில் தான் நிதியை ஒதுக்கியுள்ளது. 63,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தில் சரிபாதி தொகையைப் பங்காகவும் கடனாகவும் ஏற்பாடு செய்ய வேண்டிய ஒன்றிய அரசு உரிய பங்கை இன்னும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசு, இந்த நிதி நெருக்கடிகளைச் சந்தித்து, திட்டத்தின் பணிகளை வேகமாக முடித்துக் கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டைக் கபளீகரம் செய்ய முயலும்
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வால் அதன் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அதன் கூட்டணி யில் இருக்கும் கட்சிகளும், இத்தகைய பிரச்சினையில் வாய் மூடி மவுனிகளாகவே இருக்கின்றன.

தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் கற்பிப்பது உறுதி!

தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்யும் பா.ஜ.க.வுக்கும், துரோகம் செய்யும் அ.தி.மு.க.வுக்கும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள் என்பது உறுதி!

ஓரவஞ்சனை ஒன்றிய பா.ஜ.க. அரசால் அனுமதி மறுக்கப்பட்டுள்ள மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு உரிய அனுமதியை சட்டப்படி பெற்று, அந்த நகரங்களுக்கும் அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசு கொண்டு வரும் என்பதும் உறுதி! அதற்கு எந்நாளும் தமிழ்நாட்டு மக்கள் துணையிருப்பார்கள் என்பதும் உறுதி! உறுதி!

தமிழ்நாட்டு வாக்காளர்களே, 2026 இல் இதற்குத் தக்க பதிலடி கொடுத்து, பா.ஜ.க. தோற்கடிக்கப்பட
வேண்டும்.

கி.வீரமணி
தலைவர்,   
திராவிடர் கழகம்

சென்னை  
19.11.2025 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *