டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நவம்பர் 22ஆம் தேதி முதல் அசாமில் வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணி தொடக்கம்; ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட ஏனைய மாநிலங்களில் நடத்தப்படுவது போல சிறப்பு தீவிரத் திருத்தம் நடைபெறாதாம்.
* பீகாரின் முதலமைச்சராக 10ஆவது முறையாக நவ.20ஆம் தேதி நிதிஷ்குமார் பதவி ஏற்கிறார்!!
* சட்டமன்றத்தில் ஆர்.ஜே.டி.கட்சியின் தலைவராக தேஜஸ்வி தேர்வு.
தி இந்து:
* உயர்நீதிமன்ற உத்தரவால் 14 துணைவேந்தர்களை நியமிக்க முடியவில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம். இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 2ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தகவல் ஆணையர் காலியிடங்கள் தகவல் அறியும் சட்டத்தை (ஆர்.டி.அய்.) பாதிக்கிறது: உச்சநீதிமன்றம். வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷண் கூறியதாவது: இரண்டு மாதங்களாக மத்திய தகவல் ஆணையத்திற்கு தலைமை ஆணையர் இல்லாத நிலையிலும், பத்து தகவல் ஆணையர் பதவிகளில் எட்டு காலியாக உள்ளன.
* குவெம்பு பல்கலைக்கழகத்தில் பகவத் கீதை கருத்தரங்குக்கு கருநாடக தலித் சங்கர்ஷ சமிதி எதிர்ப்பு: துணைவேந்தர் இந்த நிகழ்வைத் தலைமைத்துவம் செய்கிறார் என்பது, “குவெம்புவின் சர்வ மனிதநேய மதிப்புகளுக்கு அவமதிப்பு” என குழு தெரிவித்துள்ளது. வரலாற்றில் பகவத்கீதை ‘சதுர்வர்ண’ அமைப்பையும் ஜாதி ஒழுங்கையும் நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டதாகவும், இந்நிகழ்வு ஒடுக்குமுறையை மகிழ்வித்துக் கொண்டாடும் செயலாகவும் தேசியக் கவிஞர் குவெம்புவின் கோட்பாடுகளுக்கும், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பின் விதிகளுக்கும் விரோதமானது என கண்டனம்.
தி டெலிகிராப்:
* “போலி அதிகாரிகள், திறமையற்றவர்கள் தான் சிபிஅய்யில் இருக்கின்றனர்..” உச்சநீதிமன்றம் கடும் சாடல்! எச்பிபிசிஎல் அதிகாரி தேஷ்ராஜ் வழக்கில், சிபிஅய்யில் உள்ள அதிகாரிகள் போலி அதிகாரிகள் என்றும் பணியில் இருக்க தகுதியற்றவர்கள் என்றும் நீதிபதிகள் விமர்சித்தனர். உறுதியாக எதுவும் தெரியாமல் ஊகத்தின் அடிப்படையிலேயே சிபிஅய் செயல்படுவதாகவும் நீதிபதிகள் கடுமையாக சாடினர்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* 2024 ஆம் ஆண்டு மாணவர் மீதான வன்முறைக்காக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சிறப்பு தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்தது. தண்டனை விதிக்கப்பட்ட உடனேயே, தற்போது இந்தியாவில் தங்கியுள்ள ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என டாக்கா வலியுறுத்தியுள்ளது.
– குடந்தை கருணா
