சென்னையில் அனைத்து வாக்குச்சாவடி மய்யங்களிலும் வாக்காளர் உதவி மய்யங்கள் இன்று முதல் செயல்படும் என அறிவிப்பு!

4 Min Read

சென்னை, நவ.18- சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து (947) வாக்குச்சாவடி மய்யங்களிலும் வாக்காளர் உதவி மய்யங்கள் (Electors Help Desk) 18.11.2025 முதல் 25.11.2025 வரை செயல்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, பொதுத் தேர்தல்களுக்கான சிறப்பு தீவிரத் திருத்தம் – 2026 பணிகள் சென்னை மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில் 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officers-BLOs) வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவங்களை (Enumeration Forms) வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று வருகின்றனர்.

இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2005ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களை கண்டறியவும், வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும், 18.11.2025 முதல் 25.11.2025 வரை எட்டு நாட்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து (947) வாக்குச்சாவடி மய்யங்களிலும், வாக்காளர் உதவி மய்யங்கள் செயல்பட உள்ளது.

சம்பா நெற்பயிர்
காப்பீட்டிற்கான காலவரம்பு

நவ. 30ஆம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை, நவ.18– வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சம்பா நெற்பயிர் காப்பீடு

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது, விவசாயிகள் சம்பா நெற்பயிரை முழு வீச்சில் சாகுபடி செய்து வருகின்றனர். இதுவரை 26.25 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்நாள் வரை, 6.27 லட்சம் விவசாயிகளால் 15 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பில் 57 சதவீதமாகும். இதே நாளில் கடந்த வருடம் 10 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டது.

காலவரம்பு நீட்டிப்பு

பல மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக குறுவை நெல் அறுவடை மற்றும் சம்பா நெல் நடவு பணிகள் தாமதமானதாலும், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதால் அடங்கல் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாலும், சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க, விடுபட்ட அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கிணங்க சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை 2025 நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

முதலமைச்சரின் துரித நடவடிக்கையின் பேரில் சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர் செய்யும் விவசாயிகளின் நன்மையை கருதி பயிர் காப்பீடு செய்யும் காலக்கெடுவானது நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே வேளாண்மைத் துறை அலுவலர்கள் தத்தம் பகுதிகளில் உள்ள விவசாயிகளை அணுகி பயிர் காப்பீடு செய்திடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எனவே, அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடு துறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பொது சேவை மய்யங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நவம்பர் 30ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயனடையுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

கொடிக்கம்பங்களை அகற்றும் பிரச்சினை

சி.பி.எம். கட்சி மனு:
உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு

புதுடில்லி, நவ.18– தமிழ்நாட்டில் பொது இடங்களில் வைக்கப்பட்டு அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்றும்படி ஒரு வழக்கில், மதுரை உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் சார்பில் வழக்குரைஞர் எஸ்.பிரசன்னா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த ஆகஸ்டு மாதம் 25ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தற்போதுள்ள நிலையேதொடர வேண்டும் என்றும், 4 வாரங்களுக்குள் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. இதற்கிடையே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா சார்பிலும் இது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை நேற்று (17.11.2025) விசாரித்தது. அப்போது, இந்தமனுவை சண்முகம் தாக்கல் செய்த மனுவுடன் இணைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *