ஸநாதன தர்மம் வாரியம் உருவாக்கப்பட வேண்டுமாம்!

3 Min Read

ஸநாதன தர்மத்தின் ஆன்மிக மற்றும் கலாச்சார அம்சங்களைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கில் ‘ஸநாதன தர்ம வாரியம்’ ஒன்றை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று ஆந்திரப் பிரதேசத் துணை முதலமைச்சரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் ‘குளறுபடிகள்’ மற்றும் ‘புனித இழப்பை’ச் சுட்டிக்காட்டி, அதை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகள் ஆந்திராவின் மேனாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் தலைமையிலான ஆட்சியில், திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், குறிப்பாக அங்கு வழங்கப்படும் பிரசாதமான லட்டில் மாட்டுக் கொழுப்பு இருந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இது நாடு முழுவதும் உள்ள இந்துப் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தச் சூழலைச் சுட்டிக்காட்டிய பவன் கல்யாண், திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கு வெறும் ஒரு ஆன்மிகத் தலம் மட்டுமல்ல, அது ஒரு ‘புனித’மான தலம் என்றும் குறிப்பிட்டார். பவன் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக விரிவான பதிவுகளை வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்:

“பன்னாட்டளவில் இருக்கும் இந்துக்களுக்குத் திருமலை வெறும் யாத்திரைத் தலம் மட்டும் அல்ல, ஒரு ‘புனித’மான ஆன்மிகத் தலம். திருமலை லட்டு வெறும் இனிப்பு மட்டும் அல்ல; அது நமது நம்பிக்கையைக் குறிக்கும் ஒரு பகிரப்பட்ட உணர்வு.”

“ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 2.5 கோடி பக்தர்கள் திருமலைக்கு வருகிறார்கள். ஸநாதனத்தைப் பின்பற்றும் மக்களின் உணர்வுகளும் நம்பிக்கைகளும் கேலிக்குள்ளாக்கப்படும்போது, அது கோடிக்கணக்கான மக்களின் பக்தியையும் சிதைக்கிறது.”

“மதச்சார்பின்மை எப்போதும் இருவழிப் பாதையாக இருக்க வேண்டும். நமது நம்பிக்கைக்குப் பாதுகாப்பும் மரியாதையும் அவசியம். அதைச் சமரசம் செய்ய முடியாது.” என்று புலம்புகிறார் ஆந்திர மாநில துணை முதலமைச்சர்.

நிர்வாகத்தின் செயல்பாடுகள் திருமலையின் ‘புனித’த் தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாகக் குற்றம் சாட்டிய பவன் கல்யாண், தற்போதைய தேவஸ்தான வாரியம் இதனை ஒரு பெரிய பாடமாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

திருப்பதி தேவஸ்தான வாரியம் தொடங்கி ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் என அனைவரும், இதை ஒரு வேலையாகப் பார்க்காமல், “லட்சக்கணக்கான ஸநாதன இந்துக்களுக்குத் தெய்வீகச் சேவை செய்யும் ஒரு ‘புனித’மான வாய்ப்பாகப்” பார்க்க வேண்டும்.

இனி நிதி, தரக் கட்டுப்பாடு, தணிக்கைகள், நன்கொடைகள் என அனைத்துச் செயல்பாடுகளிலும் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலைப் பற்றி, ஆந்திர மாநிலத் துணை முதலமைச்சர் கூறுவதைப் பார்க்கும்போது, ்அங்கு ஏராளமான குளறுபடிகளும், மோசடிகளும் கொடி கட்டிப் பறப்பதை அறிய முடிகிறது. இது இன்று நேற்று நடப்பதல்ல!

ஏழுமலையானோ ஒரு நாமக் கடவுள்! அந்தக் கோயிலுக்குள் உள்ளவர்களோ ஏழுமலையானுக்கே நாமம் சாத்துகின்றனர்.

பக்தர்கள் மொட்டைப் போடுவதற்கும் காணிக்கை யுண்டு; ஆனாலும் ஏழுமலையானுக்கே (!) அங்குள்ள வர்கள் மொட்டை அடிக்கிறார்கள்.

26.8.2009 நாளிட்ட ‘மாலை முரசு’ நாளேட்டின் தலைப்புச் செய்தி என்ன தெரியுமா?

‘‘ஏழுமலையானுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான நகைகள் மோசடி! தங்க முலாம் பூசப்பட்ட செப்பு நகைகளை வைத்து விட்டு,  ஒரிஜினல் நகைகளைக் களவாடி விட்டனர்’’ என்பதுதான் அந்தத் தலைப்புச் செய்தி.

ஏழுமலையான் படம் பொறித்த டாலர்களை விற்பனை செய்வதில் பெரும் மோசடி நடத்திருப்பதாக விலாவாரியான கட்டுரை எழுதியது ‘விடுதலை’யல்ல – அவாளின் ஜூனியர் விகடன் தான்! (17.8.2009).

இது ஒரு பக்கம் என்றால், திருப்பதியில் விபச்சாரிகள் எண்ணிக்கை அதிகம் – அதனால் எய்ட்ஸ் நோய் அதிகம் பரவுகிறது என்று சொன்னவரும் ஆந்திர மாநில எய்ட்ஸ் தடுப்பு இயக்குநரான ஆர்.வி. சந்திரவதன் (‘தினத்தந்தி’ 27.6.2008 பக்கம் 17).

‘ஏழுமலையான் சக்தியோ சக்தி– தீராத வினை எல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தம்’ என்று விளம்பரம் செய்வதில் மட்டும் குறைச்சல் இல்லை. ஆனால் அங்கு நடப்பது எல்லாம் – இதற்கு நேர் மாறானதுதான்!

‘பக்திக்கும் ஒழுக்கத்திற்கும் சம்பந்தமில்லை’’ என்று கிருபானந்தவாரியார் கூறுவதற்கு என்ன பதில்? (ஆனந்த விகடன்’ 22.12.1991).

பக்தி ஒரு ஃபேஷனாகவும் வணிக மயமாகவும் ஆகி விட்டது என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஒப்புக் கொண்டதையும் திருப்பதி சம்பவத்தோடு பொருத்திப் பார்க்கலாமே!

ஏழுமலையானால் இவற்றை எல்லாம் ஏன் தடுக்க முடியவில்லை? என்று பக்தர்கள் சிந்திக்க வேண்டாமா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *