சென்னை, நவ. 17- தமிழ்நாட்டில் தொற்றா நோய்களைக் கண்டறிந்து, சிகிச்சையளிப்பதில் புரட்சியை ஏற்படுத்திய ‘மக்களைத் தேடி மருத்துவம்’ (Makkalai Thedi Maruthuvam) திட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை சுமார் 2.92 லட்சம் பேருக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்திற்காகத் தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறைக்கு 2024ஆம் ஆண்டிற்கான அய்.நா. சபையின் முகமைகளுக்கு இடையேயான பணிக்குழு விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ உதவி
இத்திட்டம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. பெருகிவரும் தொற்றா நோய்களிலிருந்து (NonCommunicable Diseases) மக்களைப் பாதுகாப்பது மற்றும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று மருத்துவ உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள 8,713 சுகாதாரத் துணை மய்யங்கள், 385 கிராமப்புறத் தொகுதிகள், 450 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 21 மாநகராட்சிப் பகுதிகள் உட்பட தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
சுகாதாரப் பணியாளர்கள், குறிப்பாக மகளிர் சுகாதாரத் தன்னார்வலர்கள், மருத்துவ பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று கீழ்க்கண்ட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்குகின்றனர்: 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு (சர்க்கரை நோய்), இருதய நோய்கள் போன்றவற்றுக்கான பரிசோதனைகள்.
கண்டறியப்பட்ட மருத்துவ பயனாளிகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மாத்திரைகள் அவர்களின் வீட்டிலேயே வழங்கப்படுகிறது.
புற்றுநோய் பரிசோதனை: குறிப்பிட்ட வயதினருக்குப் புற்றுநோய் கண்டறிவதற்கான பரிசோதனைகள்.
சிறப்புச் சிகிச்சைகள்: இயன்முறை மருத்துவம், வலி மற்றும் நோய் ஆதரவுச் சிகிச்சை வீட்டிலேயே டயாலிசிஸ் சேவை போன்ற சிறப்புச் சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.
விழுப்புரம் மாவட்டம் சாதனை
விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டம் அடைந்துள்ள முக்கிய சாதனைகள்: மொத்த பரிசோதனைகள்: 2,91,905 பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோய் கண்டறியப்பட்டோர்: இதில் 14,506 பேருக்கு நோய் தாக்கம் கண்டறியப்பட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் பரிசோதனை: 44,212 பேருக்குப் பரிசோதனை செய்ததில், 32 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இயன்முறை மருத்துவம் (Physiotherapy): 385 பேர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். வலி மற்றும் நோய் ஆதரவுச் சிகிச்சை: 278 பேர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டில் டயாலிசிஸ் சேவை: 12 பேர் வீட்டிலேயே டயாலிசிஸ் சேவையைப் பெற்று வருகின்றனர்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், தமிழ்நாட்டின் பொதுச் சுகாதாரத் துறையில் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுவதுடன், கிராமப்புற மக்கள் உட்பட அனைவருக்கும் சமமான மருத்துவச் சேவையை உறுதி செய்வதில் ஒரு முன்னோடித் திட்டமாக விளங்குகிறது.
