மதுரை, நவ.17- மதுரை உயர்நீதிமன்ற கிளையின், மதுரை வழக்குரைஞர்கள் சங்கம்(எம்பிஏ) சார்பில், நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட நீதித்துறை தொடர்பான தேர்வு எழுத விரும்பும் இளம் வழக்குரைஞர்களுக்கான வார இறுதி நாள் பயிற்சி வகுப்புகளின் தொடக்க விழா நேற்று முன்தினம் (15.11.2025) நடந்தது. இதில் பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், ‘‘புதிய பிஎன்எஸ்எஸ் சட்டப்படி, இனி வரும் காலங்களில் மாவட்ட நீதிமன்றங்களில், மாஜிஸ்திரேட் மற்றும் மாவட்ட நீதிபதி என இரண்டு நிலைதான் இருக்கும். உதவி அமர்வு நீதிமன்றம் என்ற நிலை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நீதிபதிகளுக்கான காலிப்பணியிடம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இளம் வழக்குரைஞர்கள் தற்போதே, பயிற்சியை மேற்கொள்வது நல்ல வாய்ப்பாக அமையும்’’ என்றார்.
நீதிபதி அனிதா சுமந்த், ‘‘இது ஒரு நல்ல முயற்சி, நன்கு பயிற்சி பெற்ற வழக்குரைஞர்கள், நீதிபதியாவது தரமான நீதி வழங்குவதற்கு உதவியாக இருக்கும்’’ என்றார்.
இதைதொடர்ந்து பேசிய, உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘‘தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏனெனில், தேர்வுகளில் அதிகமான பெண்கள் தேர்ச்சி பெற்று வருகின்றனர். வருங்காலங்களில் அதிகளவில் பெண் நீதிபதிகள் தேர்வாக வாய்ப்பு உள்ளது’’ என்றார்.
இதில், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேல்முருகன், அப்துல் குத்தூஸ், சிறீமதி, குமரேஷ் பாபு, வடமலை, குமரப்பன், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் வீரா கதிரவன், பாஸ்கரன், சங்கத் தலைவர் சுரேஷ், செயலாளர் வெங்கடேசன் மற்றும் அரசு வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருநாடகாவில்
பெண் குழந்தைகளைத்
தத்தெடுப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
தத்தெடுப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
பெங்களூரு, நவ. 17–- பெங்களூருவில் கடந்த அய்ந்து ஆண்டுகளில் குழந்தைகளைத் தத்தெடுப்பவர்களின் எண்ணிக்கை 72 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், தத்துக் கொடுக்கக் குழந்தைகள் பற்றாக்குறை நிலவுவதால், ஆயிரக்கணக்கான இணையர்கள் குழந்தைகளுக்காகக் காத்திருக்கின்றனர். இது குறித்து, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் அளித்த தகவல்கள்:
கருநாடகாவில் அரசு சார்ந்த 21 குழந்தை சிறப்புத் தத்து மய்யங்களும், தனியாருக்குச் சொந்தமான 24 குழந்தை தத்து மய்யங்களும் செயல்படுகின்றன. இந்தக் மய்யங்கள் மூலமாகத் இணையர் குழந்தைகளைத் தத்தெடுக்கலாம். தற்போது கிடைத்த தகவலின்படி, மாநிலத்தில் 2,279 இணையர் குழந்தைக்காகக் காத்திருக்கின்றனர். ஆனால், மாற்றுத்திறனாளி குழந்தைகள் உட்பட மொத்தமாக 55 குழந்தைகள் மட்டுமே தத்துக் கொடுக்கக் கிடைத்துள்ளனர். தத்துக் கேட்போரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.
பெரும்பாலான இணையர், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தத்தெடுக்கவே விரும்புகின்றனர். பச்சிளம் குழந்தைகளாக இருந்தால், பாசப் பிணைப்பு (Bonding) அதிகமாக இருக்கும் என அவர்கள் நினைக்கின்றனர். சமீபத்திய ஆண்டுகளில் பெண் குழந்தைகளைத் தத்தெடுப்பது அதிகரித்துள்ளது.
வணிக நோக்கில் பயன்படுத்தியதால்
ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்கிய 3.12 ஏக்கர் நிலம் மீட்பு
சென்னை, நவ.17- சென்னையில் ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்கப்பட்ட நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தியதால், 3.12 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சமூக சேவைக்கான நிபந்தனைகளின் அடிப்படையில் அம்பத்தூர், ஒரகடம் பகுதியில் உள்ள அன்னை ஆதரவற்றோர் இல்லத்துக்கு 3.12 ஏக்கர் நிலம் அரசு சார்பில் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சமூக சேவைக்காக வழங்கப்பட்ட நிலத்தை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்திய காரணத்தால் அன்னை ஆதரவற்றோர் இல்லத்துக்கு ஒப்படைப்பட்ட 3.12 ஏக்கர் நிலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே முன்னிலையில், மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அந்நிலத்தை கடந்த 14.11.2025ஆம் தேதி மீட்டெடுத்துள்ளது.
வருவாய் வாரியத்தின் நிலை ஆணைகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, மீட்கப்பட்ட நிலம் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டுத் தேர்வுகள் டிச.10ஆம் தேதி தொடக்கம்
சென்னை, நவ.17- பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிச.10ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு விவரம்: தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிச.10 முதல் 23ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு டிச.10ஆம் தேதியும், 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு டிச.15ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்கும். இதற்குரிய பாடவாரியான கால அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான தேர்வு டிச.15இல் தொடங்கி 23ஆம் தேதி வரை முடிவடையும். தேர்வுகள் காலை, மதியம் என வேளைகளில் நடத்தப்பட உள்ளன. தொடர்ந்து அனைத்து வகுப்புகளுக்கும் டிச.24 முதல் ஜன. 4ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படும். இந்த விடுப்பு முடிந்து மீண்டும் ஜன.5இல் பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
