சென்னை, நவ.17- உலகம் முழுவதும் வேலையின்மை பிரச்சினை பூதாகரமாக வெடித்திருக்கிறது. கொத்து கொத்தாக எந்த காரணமும் அறிவிக்கப்படாமல் டெக் ஊழியர்கள் வேலையை விட்டு தூக்கப்படுகிறார்கள்.
இந்தியாவிலும் ஆயிரக்கணக்கான டெக் ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், வேலையின்மையின் அடுத்த அலை தாக்கும் என்றும், இதனால் நாடு முழுவதும் சுமார் 2 கோடி பேர் வேலையை இழப்பார்கள் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த முறை டெக் ஊழியர்கள், அலுவலக ஊழியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். மாறாக, ஸ்விக்கி, ஸொமாட்டோ போன்ற நிறுவனங்களில் டெலிவரி வேலை செய்யும் கிக் (gig) தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
5,400 கி.மீ வரை பயணிக்கும் கிக் தொழிலாளர்கள்
உணவு, மளிகைப் பொருள்கள், மருந்துகள் ஆகியவற்றை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்ப்பதுதான் இவர்களின் வேலை. 10 நிமிடத்தில் டெலிவரி, 5 நிமிடத்தில் டெலிவரி என பரபரப்பான நகர சாலைகளில் சிட்டாய் இந்த ஊழியர்கள் பறந்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 12-15 மணி நேரம் என வாரத்திற்கு 6 நாட்கள் வேலை செய்கிறார்கள். ஒரு மாதத்திற்கு தோராயமாக 3,000 – 5,400 கி.மீ வரை பயணிக்கிறார்கள்.
வேலையை காலி செய்யும் ‘ஆட்டோமேஷன்’
முதல் ஒரு கி.மீ ரூ.15 எனவும், அடுத்தடுத்து ஒவ்வொரு கி.மீக்கும் ரூ.10-14 வரையும் இவர்களுக்கு கிடைக்கிறது. எப்படி பார்த்தாலும் ஒரு மாதத்திற்கு ரூ.30,000-32,000 வரைதான் இந்த தொழிலாளர்களால் சம்பாதிக்க முடியும்.
கோவிட் காலத்தில் 1 கி.மீக்கு ரூ.20 என கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது இந்த தொகையை நிறுவனங்கள் ரூ.15 ஆக குறைத்திருக்கின்றன. இந்த நெருக்கடி ஒருபுறம் எனில், மறுபுறம் ‘ஆட்டோமேஷன்’ இவர்களின் வேலையை காலி செய்ய ரெடியாக இருக்கிறது.
களத்தில் இறக்கப்படும் ட்ரோன்கள்
அதாவது, ட்ரோன்களை பயன்படுத்தி டெலிவரி செய்வதைத் தான் ‘ஆட்டோமேஷன்’ என்று சொல்லப்படுகிறது. டில்லி போன்ற நகரங்களில் வெறும் 4 ரூபாய்க்கு இந்த ட்ரோன்கள் 1 கி.மீ தொலைவுக்கு மருந்துகளை டெலிவரி செய்து வருகின்றன.
ட்ரோன்களை பயன்படுத்து வதால் நேரமும் மிச்சமாகிறது. ஒரு பொருளை 5-8 கி.மீ தொலைவுக்கு எடுத்து செல்ல வேண்டும் எனில், டெலிவரி ஊழியர்கள் எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட, ட்ரோன்கள் மிக குறைவான நேரத்தையே எடுத்துக்கொள்கின்றன.
டெலிவரி துறையின் வர்த்தக சந்தை மதிப்பு
எல்லாம் சரிதான், என்ன இருந்தாலும் ட்ரோன்களின் விலை அதிகம். டெலிவரி நிறுவனங்களால் எத்தனை ட்ரோன்களை வாங்க முடியும்? என்று கேள்வி எழலாம். இந்த இடத்தில்தான் கடைசியாக போடப்பட்ட பட்ஜெட்டை நீங்கள் கவனிக்க வேண்டும். பட்ஜெட்டில் ட்ரோன்களுக்கான ஜிஎஸ்டி வரி 18-28 சதவிகிதத்திலிருந்து 5 சதவீதமாக ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. எனவே டெலிவரி நிறுவனங்கள் ட்ரோன்களை வாங்கி குவிக்க வாய்ப்புகள் உள்ளன. டெலிவரி துறையின் வர்த்தக சந்தை மதிப்பு 2030இல் ரூ.4,042 கோடியை எட்ட இருக்கிறது. அதாவது இந்த துறை வளரும், ஆனால் தொழிலாளர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது.
கிக் தொழிலாளர்களுக்கான உரிமைகள்
தற்போது டெலிவரி பணியாற்று பவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமோ, காப்பீடோ, விடுப்போ கிடைப்பதில்லை. அவ்வளவு ஏன்? அவர்கள் ‘ஊழியர்களாக கூட கருதப்படுவதில்லை. ஒன்றிய அரசு இவர்களை e-Shram போர்ட்டலில் பதிவு செய்ய சொல்கிறது. கிக் தொழிலாளர்களுக்கு என இருக்கும் உரிமைகள், சலுகைகள், வாய்ப்பு குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. திடீரென நிறுவனம் அவர்களை வேலையை விட்டு தூக்கிவிட்டால் கூட, இவர்களால் இழப்பீடு கோர முடியாது.
தற்போது நாடு முழுவதும் 1.2 கிக் தொழிலாளர்கள் இருப்பதாக நிதி ஆயோக் கூறுகிறது. இது அடுத்த 5 ஆண்டுகளில் 2.35 கோடியாக அதிகரிக்கக்கூடும். இந்தியாவில் வேலையின்மையின் விகிதம் அதிகமாக இருப்பதால், ஏராளமான இளைஞர்கள் கிக் வேலை நோக்கி இழுக்கப்படுகிறார்கள். இப்படி இருக்கையில் டெலிவரி துறை, ‘ஆட்டோமேஷன்’ என்கிற அமைப்புக்குள் சென்றால், நாட்டின் வளர்ச்சியில் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
