பெரம்பலூர்,மே10 – அரியலூர் மாவட்டம், வெள்ளூர் கிராமத் தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து வெளி நாட்டுக்கு கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை மீட்கப்பட்டு, நேற்று (9.5.2023) மீண்டும் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம், வெள்ளூர் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்த ஆஞ்சநேயர் சிலை, 2012இல் காணாமல் போனது.
தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினர், அந்த சிலை, அமெரிக்கா மியூசியத்தில் இருந்து, ஆஸ்திரேலியா நாட்டிற்கு விற்கப் பட்டதை கண்டுபிடித்தனர். கடந்த மாதம், ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட அந்த சிலை, நேற்று, வெள்ளூர் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் ஒப்படைக்கப் பட்டது.
ஆஞ்சநேயர் சிலையை, கோவிலில் ஒப்படைத்த பின், சிலை திருட்டு தடுப்புப் பிரிவு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேஷ்குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது.
பொதுமக்கள் முன்னிலையில் கோவிலில் ஒப்படைக்கப்பட்ட அந்த சிலை, கோவிலில் வழிபாட்டுக்கு வைக்கப்படும். இந்த சிலையுடன் கடத்தப்பட்ட மூன்று சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுவரை, தமிழ்நாட்டிலிருந்து இருந்து வெளி நாடுகளுக்கு கடத்தப் பட்ட 23 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 64 சிலைகளை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.