இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளின் நலத்திட்டங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் நியாயமான தேர்தலை உறுதி செய்ய வேண்டும் என்று மாடல் நடத்தை விதிமுறைகள் வலியுறுத்துகின்றன.
ஆனால், சமீபத்திய பீகார் தேர்தல் மற்றும் தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில், ஆணையத்தின் செயல்பாடுகளில் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளது. இது தொடர்பாக, திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் – பா.ஜ.க.வுக்கு ஆதரவான பாரபட்சத் தன்மையை குற்றம் சாட்டியுள்ளன.
பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் அரசு, ‘முக்யமந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா’ திட்டத்தின் கீழ், 75 லட்சம் மகளிருக்கு ரூ.10,000 நிதி உதவி வழங்கியது. இது சிறு தொழில்கள் தொடங்க உதவும் விதமாக, செப்டம்பர் 26, 2025 அன்று நரேந்திர மோடி மூலம் தொடங்கப்பட்டது.
அக்டோபர் 6 அன்று பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன (நவம்பர் 6 மற்றும் 11). ஆனால், தேர்தல் பணிகள் தொடங்கிய பிறகும் (அக்டோபர் 6 முதல் அக்டோபர் 17, 24, 31 ஆகிய தேதிகளில்) 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிருக்கு ரூ.10,000 அனுப்பப்பட்டது. கூடுதலாக, நவம்பர் 7 அன்று (முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னும் தொடர்ந்து ரூ.10,000 அனுப்பினார்கள் – தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை: ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இதை விதி மீறல் என்று புகார் செய்தன, ஆனால் தேர்தல் ஆணையம் அமைதியாக இருந்தது. இது பெண் வாக்காளர்களின் 71.6% என அதிகமான வாக்குப்பதிவுக்கு காரணமாக அமைந்தது.
தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் எப்படி நடந்து கொண்டது? தேர்தல் காலத்தில் நலத்திட்டங்களை கடுமையாக முடக்கியது.
விவசாயிகளுக்கான ரூ.5,000 நிதி உதவி திட்டம் தேர்தல் அறிவிப்புக்குப் பின் நிறுத்தப்பட்டது.
– 2011: திமுக அரசின் இலவச கலர் டிவி திட்டம் தேர்தல் அறிவிப்புக்குப் பின் (மார்ச் 2011) மாவட்ட ஆட்சியர்களுக்கு நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
– 2021: தேர்தல் அறிவிப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன், தங்கக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன, ஆனால் தேர்தல் ஆணையம் அறிவிப்புகளைத் தடை செய்தது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தின் “சதி” என்று குற்றம் சாட்டி, பீகாரில் பாஜகவிற்கு ஆதரவான ரூ.10,000 வழங்க அனுமதித்ததை எடுத்துக்காட்டி, தமிழ்நாட்டில் (எதிர்க்கட்சி ஆளும்) நலத்திட்டங்களை மட்டும் முடக்கி – பாரபட்சமாக இருந்ததை சுட்டிக்காட்டினார்.
“பீகாரில் மகளிர் உதவி அனுமதி, தமிழ்நாட்டில் டிவி/விவசாய உதவி முடக்கம் – இது பா.ஜ.க.விற்கு சாதகமானது” என்று அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சியினர், தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய எஸ்.அய்.ஆர். திருத்தத்தையும் “வாக்காளர்களை நீக்கும் சதி” என்று விமர்சித்து, வழக்குத் தொடுத்துள்ளனர்.
இந்த சம்பவங்கள், தேர்தல் ஆணையத்தின் நடுநிலை குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. தி.மு.க. போன்ற கட்சிகள், தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு சாதகமாக நடக்கிறது, நியாயமான தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் தனது நடவடிக்கைகளை ஒரே மாதிரியாக அமல்படுத்த வேண்டும் என்று கூறின. இனி வரும் தேர்தல்களிலும் பாஜக தங்களுக்குச் சாதகமாக ‘ஒன்றிய அரசுத் திட்டம்’ என்ற பெயரில் மகளிர் சுய உதவிக்குழு, விவசாயிகள் நிவாரணத் தொகை, ஒன்றிய அரசின் பிரதன் மந்திரி யுவா ரொஜ்கார் யோஜனா என்ற பெயரில் இளைஞர்களுக்கு தேர்தல் நேரத்தில் பணம் அனுப்பி வாக்குகளைப் பெறும் புதிய உத்தியை பீகார் தேர்தலில் கிடைத்த வெற்றியின் மூலம் பாஜக துவங்கியுள்ளது.
தேர்தலுக்கு முன்பாக பீகாரில் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவடைந்த நிலையில் 7.45 கோடி என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. இது எப்படி நடந்தது? என்பது முக்கியமான கேள்வி.
பீகாரில் கிடைத்த வெற்றி – தேர்தல் ஆணையத்தின் துணையோடு கிடைத்த வெற்றி! இது உண்மையான ஜனநாயகத்திற்கான வெற்றி அல்ல, கள்ளப்பணம் கொடுத்து வாக்குகளை பெற்ற பாஜக இப்போது நேரடியாகவே ‘நலத்திட்டம்’ என்ற பெயரில் தேர்தல் நெருங்கும் போது பணம் கொடுத்து வாக்குகளை அறுவடை செய்துள்ளது.
இந்த நிலை தொடருமானால் ஜனநாயகம் சவக் குழிக்குப் போக வேண்டியதுதான்!
