27 விழுக்காடு இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உறுதி செய்தது!
1992 நவம்பர் 16 அன்று, வி.பி. சிங் அரசின் முடிவின் அடிப்படையில் ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கியதை உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அமர்வு உறுதிப்படுத்தியது.
ஆனால், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அனுமதியுடன் சேர்த்து, சமூக நீதியின் ஆற்றலை குறைக்கும் மூன்று முக்கியத் தடைகளையும் நீதிமன்றம் விதித்தது:
மொத்த இட ஒதுக்கீடு 50% அய் மீறக்கூடாது என்ற உச்சவரம்பு,
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கு கிரீமிலேயர் என்ற செயற்கைத் தடையை உருவாக்குதல்,
மேலும் பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டைத் தடைசெய்தல்.
இந்த நிபந்தனைகள் மண்டல் அறிக்கையின் சீர்திருத்தங்களின் உண்மையான நோக்கத்தையே பல வீனப்படுத்தின.
இதன் விளைவாக, முப்பது ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகும், அரசின் அதிகார கட்டமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த தடைகள் அகற்றப்பட்டு, மண்டல் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைக்கு வராத வரை, இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலக்கப்பட்டவர்களாகவே தொடர வேண்டிய சூழல் நீடிக்கும்.
சமூக நீதியை எட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் ஒன்றுபட்டு உறுதியாக முன்னேற வேண்டும்.
