வாசிங்டன், மே 10 – அமெரிக்க இதழியல் துறையில் சிறப் பான செய்திகளை வழங்கும் நிறுவனங்கள், செய்தியாளர் களுக்கு கடந்த 1917ஆம் ஆண்டு முதல் வருடாந்திர புலிட்சர் (செய்தித்தாள் வெளியீட்டாளர் ஜோசப் புலிட்சர் நினைவாக) விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த விருதானது அமெரிக்க இதழியல் துறையில் மிகவும் மதிப்புமிக்க கவுரவமான விருதாக பார்க்கப் படுகிறது. அதாவது சிறந்த படைப்புகளின் அடிப்படையில் புத்தகங்கள், இசை, நாடகம் உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்காவின் முன்னணி செய்தி ஆசிரியர்கள் அல்லது நிர்வாகிகள் அடங்கிய குழு, புலிட்சர் விருதாளர்களை தேர்வு செய் கிறது.
இந்நிலையில் இந்தாண்டிற்காக புலிட்சர் விருதுகள், வாசிங்டன் போஸ்ட் செய்தியாளர் கரோலின் கிச்சனர் (அமெரிக்கா அரசின் கருக்கலைப்பு சட்டம் தொடர்பான செய்தி), ராய்ட்டர்ஸ் (அலபாமாவில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பணி, நைஜீரிய ராணுவத்தின் மனித உரிமை மீறல்), வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் (நிதி மோதல்கள் குறித்த புலனாய்வு), லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் (அதிகாரிகளின் இனவெறி தாக்குதல்) நிறுவனங்களுக்கு கிடைத்துள்ளது.