சென்னை, நவ.16– சென்னை திருவல்லிக்கேணி வாத்தியார் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 54). தீவிர சிவ பக்தரான இவருக்கு இமயமலையில் உள்ள கைலாயத்துக்குச் செல்ல வேண்டும் என்று நீண்டநாளாக ஆசை இருந்துள்ளது. இவர், திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோவிலுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்போது அவர், தனது இந்த ஆசை குறித்து கோவிலில் தூய்மை பணி செய்துவரும் ராயப்பேட்டையைச் சேர்ந்த செல்வி (வயது 58) என்பவரிடம் தெரிவித்துள்ளார்.
அம்பத்தூரில் வசிக்கும் சுவாதீஸ்வரன் (வயது 34) என்பவர் அடிக்கடி கைலாயம் சென்று வருகிறார். விருப்பம் உள்ளவர்களை ஆன்மிக சுற்றுலாவாக உடன் அழைத்துச் செல்கிறார் என்று செல்வி கூறியுள்ளார். இதே போன்று செல்வி பலரிடம் கூறியுள்ளார். அவர் கூறியதை உண்மை என்று நம்பி 38 பேர் தலா ரூ.35 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை ரூ.12.7 லட்சம் பணம் செலுத்தி உள்ளனர்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட சுவாதீஸ்வரன் கைலாய மலைக்கு அழைத்துச் செல்லாமல் ஏமாற்றி உள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் ஜாம் பஜார் காவல் நிலையத்தில் புகார் மனுக்கள் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி, மோசடியில் ஈடுபட்ட சுவாதீஸ்வரன், செல்வி ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.
