‘இந்தியா’ கூட்டணி என்பது உள்ளத்தில் இருக்கின்ற ஈரத்தை, கொள்கையில் இருக்கின்ற வீரத்தை நிலைநாட்டக் கூடிய கூட்டணி!
சிதம்பரம், நவ.8 ‘இந்தியா’ கூட்டணி என்பது உள்ளத்தில் இருக்கின்ற ஈரத்தை, கொள்கையில் இருக்கின்ற வீரத்தை நிலைநாட்டக் கூடியது என்ற அளவில் வந்துள்ள கூட்டணியாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் – முக்கியத்துவமும்: கருத்தரங்கம்
கடந்த 6.11.2023 அன்று மாலை சிதம்பரத்தில், கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், ‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் – முக்கியத்துவமும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரையாற்றினார்.
அவரது கருத்துரை வருமாறு:
மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும், மனநிறை வோடும் நடைபெறக்கூடிய ‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் – முக்கியத்துவமும்” என்ற தலைப்பில் நடைபெறக்கூடிய கருத்தரங்கத்தினை மாவட்ட காங் கிரஸ் கமிட்டி சிறப்பாக ஏற்பாடு செய்து, அருமையாக இந்த அரங்கம் நிரம்பி வழிந்து, வெளியில் நிறைய தோழர்கள் இருக்கக்கூடிய அளவிற்கு, மகளிரும், மற்ற தோழர்களும் ஏராளமாக வந்திருக்கிறார்கள்.
இந்தக் கருத்தரங்கத்திற்குத் தலைமை ஏற்றிருக்கக் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினுடைய ஆற்றல் வாய்ந்த, திறமை வாய்ந்த, இந்த மண்ணின் மைந்தராக இருக்கக்கூடிய அய்யா திரு.கே.எஸ்.அழகிரி அவர்களே,
நாங்கள் மண்ணின் மைந்தர்கள்!
இங்கே கொள்கை ஒற்றுமை, லட்சிய ஒற்றுமை இவையெல்லாம் இருந்தாலும், எதிர்பாராத ஒரு ஒற்றுமை இந்த மேடையில் இருக்கிறது – அது என்னவென்றால், அய்யா தலைவர் கே.எஸ்.அழகிரி மண்ணின் மைந்தர். நம்முடைய தோழர் அய்யா பாலகிருஷ்ணன் அவர்கள் மண்ணின் மைந்தர். நான் மண்ணின் மைந்தன்.
என் பக்கத்தில் இருக்கக்கூடிய அருமைச் சகோ தரர் சிந்தனைச்செல்வன் அவர்களும் மண்ணின் மைந்தர்.
எனவே, ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை என்று யார் கேட்கிறார்கள் என்றால், இங்கே இருக்கின்ற மண்ணின் மைந்தர்கள் மட்டுமல்ல – இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய மண்ணின் மைந்தர்கள் அத்துணை பேரும் கேட்கக்கூடிய ஆற்றலை உருவாக்கிய ஓர் இயக்கம் இருக்கிறது என்றால், அதுதான் இந்திய தேசிய காங்கிரஸ் ஆகும். அந்தப் பெருமையோடு இன்றைக்கு ஆற்றல் மிகுந்த இளந்தலைவர் ராகுல்காந்தி அவர் களுடைய அரிய முயற்சியினாலும், அதேபோல, சோனியா காந்தி அம்மையார் அவர்களுடைய வழி காட்டுதலும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியினுடைய ஆற்றல்மிகுந்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்களும் – இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு புதிய சகாப்தத்தை – புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக் கிறார்கள்.
தமிழ்நாடுதான் வழிகாட்டியது; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதான் வழிகாட்டியது!
அய்தராபாத்தில் அவர்கள் கூடி முடிவெடுத்தவுடன், உடனடியாக முதன்முதலில் வெளிமாநிலத்தில், இதை செய்யவேண்டும் என்ற முடிவை – நம்முடைய தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அய்யா அழகிரி அவர்கள், அய்தராபாத்திலிருந்து முடிவு செய்து – சென்னையில் நாங்கள் கூட்டுகின்ற மாநாட்டிற்கு வர வேண்டும் என்று – முதல் மாநாடாக தமிழ்நாடுதான் வழிகாட்டியது; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதான் வழிகாட்டியது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அனைவரையும் அழைத்து சென்னையில் மிகச் சிறப்பாக மாநாட்டினை நடத்தினார்கள்.
அப்படிப்பட்ட ஆற்றல்வாய்ந்த தலைவர் அவர் களே, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அருமைத் தோழர் பாலகிருஷ்ணன் அவர்களே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், வி.சி.க.வின் சட்டமன்றக் கட்சித் தலைவருமான அன்பிற்குரிய சகோதரர் சிந்தனைச் செல்வன் அவர்களே, மாவட்டக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செந்தில்நாதன் அவர்களே,
மாநில செயலாளர் பி.ஆர்.கே.சித்தார்த்தன் அவர் களே, கடலூர் வடக்கு மாவட்டத் தலைவர் திலகர் அவர்களே, சிதம்பரம் நகரத் தலைவர் – சிறப்பான ஏற்பாடுகளை வெற்றிகரமாகச் செய்துள்ள அருமை வழக்குரைஞர் மக்கின் அவர்களே,
விருத்தாசலம் மாவட்டத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பிற்குரிய அய்யா என்.ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களே, மாநில பொதுச் செயலாளர் சேரன் அவர்களே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அரங்க.தமிழ்ஒளி அவர்களே,
சி.பி.எம். முதுபெரும் தோழர் மூசா அவர்களே, கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் அவர்களே, திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் அன்பு சித்தார்த்தன் அவர்களே, மாவட்டப் பொருளாளர் கண்ணன் அவர்களே, துணைச் செய லாளர் யாழ்.திலீபன் அவர்களே, கடலூர் மாவட்டக் கழகத் தலைவர் தண்டபாணி அவர்களே, அரியலூர் மாவட்டத் தலைவர் நீலமேகம் அவர்களே,
பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கக் கூடிய காங்கிரஸ் பேரியக்கத்தினுடைய முக்கிய பொறுப் பாளர்களே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்த அத்துணைத் தோழர்களுக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரியார் திடலில் எடுத்த முடிவின்படி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டம்!
திடீரென்று மீண்டும் ஜாதிவாரிக் கணக் கெடுப்பை எதிர்க்கிறோம் என்று ஒரு பக்கத்திலே சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் ஜாதியினுடைய தொழிலை மீண்டும் குலத்தொழி லாகச் செய்யவேண்டும்; அதை நாங்கள் உரு வாக்குகிறோம் என்று படம் போட்டு – ஏமாற்று வதற்காக – மோசடி வேலை செய்வதற்காக – பித்தலாட்டப் பிரச்சாரம் செய்வதற்காக – விஷ உருண்டையின்மேல் தேன் தடவப்பட்டு இருக் கிறது; சர்க்கரைத் தடவப்பட்டு இருக்கிறது என்ப தைப்போல, ‘‘விஸ்வகர்மா யோஜனா” திட்டம் என்ற ஒன்றையும் இங்கே கொண்டு வந்திருக்கின்ற ஓர் ஆபத்தை, நம் மக்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே என்ற கவலையோடு, கூட் டணிக் கட்சித் தலைவர்கள், அமைப்பாளர்கள் எல்லாம் பெரியார் திடலில் கூடி, முடிவெடுத்து, சென்னையில் வள்ளுவர்கோட்டம் அருகே நல்ல அளவிற்கு ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
அக்டோபர் 25 ஆம் தேதிமுதல் நவ.5 ஆம் தேதிவரை தொடர் பரப்புரைப் பயணம்!
அந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலை வர்கள அத்துணை பேரும் கலந்துகொண்டார்கள்; திருமா அவர்களும் கலந்துகொண்டார்கள். அப்படி நடந்தாலும், தமிழ்நாடு முழுக்க இருக்கின்றவர்களுக்கு அந்தத் தெளிவான சூழல் போய்ச் சேரவில்லை; புரிதல் இல்லை. புரிதல் வேண்டும் என்பதற்காக கடந்த 25 ஆம் தேதி நாகப்பட்டினத்திலே தொடர் பரப்புரை பயணத்தை நாங்கள் தொடங்கினோம்.
ஒவ்வொரு நாளும் ஒரு நகராட்சி, ஒரு பேரூராட்சி, மாநகராட்சி, ஊராட்சி என்றெல்லாம் பலவிதமான அளவிற்கு இருந்து, தொடர்ந்து நேற்றுவரையில் அந்தப் பிரச்சாரத்தை நாங்கள் நடத்திக் கொண்டிருந்தோம்.
அப்பொழுதுதான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அவர்கள், நம்முடைய நகர தலைவர் அவர் களுடைய முயற்சியினால், 2 ஆம் தேதியன்று சிதம் பரத்தில் கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது – அக் கருத்தரங்கத்திற்கு அவசியம் நீங்கள் வரவேண்டும் என்று சொன்னார்கள்.
வெறும் பதவிக்கான கூட்டணியல்ல –
கொள்கைக் கூட்டணிக் குடும்பம்!
அவர்களை நாங்கள் அழைத்தாலும், தவறாமல் வருவார். அதேபோல, அவர்கள் அழைத்தாலும், நாங்கள் தவறாமல் வரக்கூடியவர்கள். ஏனென்றால், இது கொள்கைக் கூட்டணிக் குடும்பம். அதுதான் மிக முக்கியமானது. வெறும் பதவிக்கான கூட்டணியல்ல. இலட்சியத்திற்காக இருப்பது.
நம்முடைய கூட்டணியில், சில இடங்கள், சில பதவிகள் என்று கணக்குப் போட்டு வருவதில்லை யாரும். அதுதான் அடிப்படையானது. அதைத்தான், இன்றைய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக ஒப்பற்ற வழிகாட்டியாக இருக்கக்கூடிய அம்மையார் சோனியா காந்தி அவர்கள், நீங்கள் என்றைக்குத் திட்டமிட்டிருந்தீர்களோ, அதே 2 ஆம் தேதி எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள்.
அதைத்தான் இங்கே துரை.சந்திரசேகரன் அவர்கள் படித்தார்கள்.
சோனியா காந்தி அம்மையாருக்கு
எழுதிய கடிதம்
நான் எழுதிய கடிதத்தில், ‘‘நம்முடைய இந்தியா கூட்டணி என்பது இருக்கிறதே, அக்கூட்டணி, மற்ற கூட்டணியைப் போன்று கிடையாது. வெறும் பதவிக் காகச் சேருகின்ற கூட்டணியல்ல. இந்தியாவைக் காப் பாற்றுகின்ற உதவிக்கான உயிர்க் கூட்டணி. இந்தியா என்பதே இப்பொழுது நம்மால்தான் காப்பாற்றப்படுகிறது” என்று கூறியிருந்தேன்.
இப்பொழுது வேடிக்கை என்னவென்றால், அரசியல் எதிரிகளைப் போல இந்தக் கூட்டணியில் உள்ளவர் களையெல்லாம் சொன்ன பா.ஜ.க.வினர் காவிகள் – இன்றைக்கு இந்தியா என்ற பெயரைச் சொல்வதற்கே பயப்படுகிறார்கள்.
இந்தியா என்ற பெயர் வேண்டாம்; அதை ‘பாரத்’ என்று மாற்றவேண்டும் என்று துடிக்கிறார்கள்.
புள்ளி போட்ட ‘இந்தியா’ –
புள்ளி போடாத இந்தியாவைக் காப்பாற்றப் போகிறது!
‘இந்தியா’ கூட்டணிதான், இந்தியாவைக் காப் பாற்றப் போகிறது. அதுதான் மிகவும் முக்கியம்.
இன்னும் சிறிது காலம் போனால், இந்தியா, புள்ளி, புள்ளி புள்ளி போட்டிருக்கும். (I.N.D.I.A.) புள்ளி போட்ட இந்தியா! புள்ளி போடாத இந்தி யாவைக் காப்பாற்றப் போகிறது.
எனவே, அந்தப் புள்ளி, இந்தப் புள்ளி எல்லாப் புள்ளிகளும் சேர்ந்து, யாருக்கு சுள்ளி போடவேண்டுமோ, அவர்களுக்குச் சுள்ளிப் போடக்கூடிய தேர்தல் வரப் போகிறது என்பதுதான் மிக முக்கியமானது.
பகுத்தறிவாளர்களாகிய நாங்கள் பொதுவாக நாங்கள் சுள்ளிகளப் போடுவதில்லை. இருந்தாலும், அதைப் பின்பற்றுகிறவர்கள் இங்கே பலர் இருக்கிறீர்கள். அது உங்களுடைய நம்பிக்கை, பழக்கவழக்கம். அதனால், உங்களுக்கு எதைச் சொன்னால் புரியுமோ, அதைச் சொன்னேனே தவிர, அவர்களைக் கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை.
நம்முடைய பிரதமரைப்பற்றி அழகாக ஒன்றைச் சொன்னார் நம்முடைய காங்கிரஸ் தலைவர் அவர்கள்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி டில்லி செங்கோட்டையில் கொடியேற்றும்பொழுது, அடுத்த முறையும் நான்தான் கொடியேற்றுவேன் என்று பிரதமர் மோடி சொன்னார்.
யார்?
நம்முடைய 56” மார்பு அளவுள்ள பிரதமர். இதுவரையில் இந்திய நாட்டில் 16 பிரதமர்கள் வந் திருக்கிறார்கள். அவர்களில் யாரும் இஞ்ச் டேப் எடுத்துக்கொண்டு போன பிரதமர் யாரும் கிடையாது.
இவர்தான் இஞ்ச் டேப் எடுத்து, ‘‘56” மார்பு அகலம் கொண்டவன் நான்” என்று சொன்னவர்.
மார்பளவு 56” அகலமாக இருந்தால் மட்டும்போதாது; உள்ளம் எவ்வளவு ஈரமாக இருக்கிறது என்பதுதான் மிகவும் முக்கியம்.
உள்ளத்தில் இருக்கின்ற ஈரத்தை, கொள்கையில் இருக்கின்ற வீரத்தை நிலைநாட்டக் கூடியது!
‘இந்தியா‘ கூட்டணி என்பது ஈரமானக் கூட்டணி யாகும். உள்ளத்தில் இருக்கின்ற ஈரத்தை, கொள்கையில் இருக்கின்ற வீரத்தை நிலைநாட்டக் கூடியது என்ற அளவில் வந்துள்ள கூட்டணியாகும்.
ஆனால், ஒன்றிய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் உள்நோக்கத்தை மக்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகத்தான் கடந்த 25 ஆம் தேதி தொடங்கிய தொடர் பரப்புரை பயணம் – நேற்று (5.11.2023)தான் மதுரையில் நிறைவு பெற்றது.
உலகப் பார்வை இருந்தாலும்,
ஊர்ப் பாசம் என்பது என்றும் போகாது!
2 ஆம் தேதி அன்று இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று நம்முடைய கொள்கைக் குடும் பத்தைச் சார்ந்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் அவர்களும், இங்கே இருக்கின்ற கடலூரைச் சேர்ந்தவர்களும் உரிமையோடு, ஏனென்றால், நம்முடைய மாவட்டம் – என்னதான் உலகப் பார்வை இருந்தாலும், ஊர்ப் பாசம் என்பது என்றும் போகாது.
‘‘உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்” என்று சொல்பவர்கள் நாங்கள்; ஆனாலும், நம் மூரில் இருந்து தான் அதையும் தொடங்குகின்றோம்.
கட்சி வேறுபாடோ, மற்ற மற்ற வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், ஊர்க்காரர்கள் என்று வரும் பொழுது ஒன்றுதான்.
அப்படிப்பட்ட சூழலில், அவரிடம் நான் சொன்னேன், எங்களுடைய பொதுச்செயலாளரை கூட்டத்திற்கு அனுப்பி வைக்கிறேன் என்று.
ஆனால், நம்முடைய வழக்குரைஞர், அமைப்பாளர் கள், மாவட்டத் தலைவர்கள் எல்லோரும் சேர்ந்து, இந்த அளவிற்கு வற்புறுத்தி சொன்னதில்லை என்னிடம்.
அவர் மிக இயல்பாக அமைதியாக, எதைச் சொன் னாலும், விட்டுக் கொடுத்துப் போகக்கூடியவர். அது தான் அவருடைய தனித்தன்மை. அதுதான் அவருடைய வெற்றியின் ரகசியமும்கூட.
அப்படிப்பட்டவர், நீங்கள் கட்டாயமாகக் கலந்து கொள்ளவேண்டும் என்று சொன்னார்.
இல்லீங்க அய்யா, ஒவ்வொரு நாளும் இரண்டு ஊர் களில் நடைபெறும் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தாகிவிட்டது.
மழை வரும், இடிஇடிக்கும், மின்னல் அடிக்கும் – எதுவென்றாலும்,
‘‘குடிசெய்வார்க் கில்லை பரும்வ மடிசெய்து
மானம் கருதக் கெடும்” என்பதுபோல, நாங்கள் பரப்புரைப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகி றோம்” என்று சொன்னோம்.
கருத்தரங்கத் தேதியை
மாற்றி விடுகிறோம் என்றார்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யா அவர்கள், ‘‘தோழர்கள் எல்லாம் நீங்கள் கண்டிப்பாக பங்கேற்கவேண்டும் என்று. ஆகவே, தேதியை மாற்றி விடுகிறோம்” என்றார்.
எனக்கு, மிகவும் சங்கடமாகப் போயிற்று. இத்தனை தோழர்கள் பங்கேற்கவிருக்கிறார்களே, நமக்காக தேதியை மாற்றி வைக்கிறேன் என்று சொல்லுகிறாரே! என்று.
(தொடரும்)