சென்னை பெரும்பாக்கத்தில் 26,000 குடும்பங்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம்

3 Min Read

எஸ்.அய்.ஆர்-ஆல் புது சிக்கல்

சென்னை, நவ. 16– தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னை பெரும்பாக்கத்தில் சுமார் 26,000 குடும்பங்கள் ஓட்டுரிமையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளி யாகி உள்ளது.

பீகாரில் எஸ்.அய்.ஆர். (SIR) எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 65 லட்சம் வாக்காளர் கள் நீக்கப்பட்டனர். இப்போது தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இது அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இந்த நடவடிக்கைக்கு எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பொதுமக்கள் தங்களின் வாக்குரிமையை இழப்பார்கள் என்று கூறி வருகின்றன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு எதிராக திமுக உள்பட எதிர்க்கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க மாநிலம் முழுவதும் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. வீடு வீடாக பிஎல்ஓக்கள் சென்று அதற்கான படிவத்தை வாக்காளர்களிடம் வழங்கி வருகின்றனர். அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பிழையின்றி சரியான விவரங்களு டன் நிரப்பி வழங்கினால் மட் டுமே ஓட்டுரிமை இருக்கும். இல்லாவிட்டால் ஓட்டுரிமை இருக்காது. இதனால் தான் திமுக உள்பட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் தான் சென்னை பெரும்பாக்கத்தில் வசிக்கும் பல ஆயிரம் மக்கள் ஓட்டுரிமையை இழக்கும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளனர். அதாவது பெரும்பாக்கம் என்பது தமிழ்நாடு அரசின் மறுவாழ்வு மற்றும் மறு சீரமைப்பு திட்டங்களுக்கான இடமாக உள்ளது.வீடு இல்லாத வர்கள், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சென்னையில் பல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பெரும்பாக்கம் பகுதியில் வீடு கட்டி கொடுக்கப் பட்டுள்ளது. இதனால் பலரும் அங்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் பெரும்பாக்கம் மறுவாழ்வு காலனியில்(Perumbakkam Resettlement Colony) வசிக்கும் பலரது வாக்காளர் அடையாள அட்டையில் முறையான முகவரி இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. வெறுமனே கதவு எண் மட்டுமே உள்ளது. அவர்கள் வசிக்கும் பிளாக்கின் எண் உள்பட பல விஷயங்கள் இல்லை.

புதிய ஆதார் அட்டை

இங்கு இடமாற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு புதிய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் முகவரி சரியானதாக இல்லை. அதேபோல் பலருக்கும், வாக்காளர் பட்டியலில் இருக்கும் முகவரிக்கும், அவர்கள் வைத்திருக்கும் வாக்காளர் அட்டை முகவரிக்கும் தொடர்பு இல்லாமல் உள்ளது. இதனால் அவர்களின் வாக்குரிமையை உறுதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாக்கத்தில் 200 முதல் 250 பிளாக்குகள் உள்ள நிலையில் ஒவ்வொருவரின் வாக்குரிமையை உறுதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 26,000 குடும்பங்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரே முகவரியில் பலருக்கும் வாக்குரிமை உள்ளது. இது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. முகவரியில் உள்ள பிரச்சினையால் அதற்கான விண்ணப்ப படிவங்களை உரிய நபர்களிடம் .கொண்டு சேர்க்க முடியாமல் பிஎல்ஓக்கள் திணறி வருகின்றனர்.

26,000 குடும்பங்களில்,,,

இதுபற்றி அங்கிருக்கும் உள்ளூர் பிரதிநிதிகள் கூறுகையில், “26,000 குடும்பங்களில் 3,000 குடும்பங்களுக்கு மட்டுமே தங்கள் ஆவணங்களில் முழுமையான முகவரிகள் உள்ளது. மீதமுள்ளவை தெளிவற்ற முறையில் உள்ளன” என்றார். பெரும்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் நல்லதம்பி கூறுகையில், “பிஎல்ஓக்களால் ஒரு கதவு எண்ணை மட்டும் வைத்து வாக்காளர்களை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. ஏனென்றால் இங்கு மொத்தம் 250 பிளாக்குகள் உள்ளன. அரசு சார்பில் புதிய ஆவணங்கள் வழங்கப்பட்டது. ஆனால் அது முழுமையாக முகவரிகள் இல்லை” என்றார்.

இதுபற்றி பிஎல்ஓ ஒருவர் கூறுகையில், “சரியான முகவரி இல்லாததால் ஒவ்வொரு வாக்கா ளர்களையும் தேடி கண்டுபிடித்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான படிவங்களை வழங்குவது சிரமமாக உள்ளது. ஒரு நாளில் 935 வாக்காளர்களை நாங்கள் சந்தித்து படிவங்கள் வழங்க வேண்டும். ஆனால் அதனை செய்ய முடியவில்லை. 24 படிவங்களை மட்டுமே வழங்கி உள்ளேன்” என்றார். இதனால் பெரும்பாக்கத்தில் மட்டும் 26 ஆயிரம் குடும்பத்தினரின் வாக்குரிமை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *