இந்தியாவில் ஒன்றிய அரசின் தொழிலாளர் நலக் கொள்கைகள் எப்போதும் முதலாளி களின் லாப வேட்டைக்கு வழி வகுப்பதாகவே அமைந்து வந்துள்ளன. குறிப்பாக, பாஜக ஆட்சி யில் இது எல்லையில்லாத லாப வேட்டைக்கு இட்டுச் செல்கிறது. இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், மோடி அரசின் தேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு வரைவுக் கொள்கைகள், “ஷ்ரம் ஷக்தி நிதி 2025” எனும் பெயரில் வெளியிடப் பட்டுள்ளன.
இக்கொள்கைகளின் அதிர்ச்சியூட்டும் அம்சம் என்னவெனில், உழைப்புச் சுரண்டலை நியாயப் படுத்தவும், சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சட்டக் கோட் பாடுகளாக நிலைநிறுத்தவும் பயன்படுத்தப்பட்ட மனுஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம் போன்ற பழமையான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டே ஒன்றிய அரசின் இக்கொள்கைகள் வடிவமைக்கப் பட்டுள்ளன எனப் பகிரங்கமாக வெளிப்படுத்துவது தான்.
சுமார் 2, 200 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக் கப்பட்ட கொள்கைகள் இன்றைய நவீன தொழில் சமூகத்திற்கு எப்படிப் பொருந்தும்? அதுவும், சூத்திர உழைப்பாளிகளை வர்ணப் படிநிலையில் அடிமட்டத்தில் வைத்து இழிவுபடுத்தும், வர்ணக் கோட்பாடுகளில் இணைக்கப்படாத “சண்டாளர்” பிரிவை கூடுதல் இழிவாக வகைப்படுத்தும் இந்தி யாவின் பழைய ஆவணங்கள், இன்றைய தொழி லாளர் கொள்கைகளாக ஏற்றுக்கொள்ளப்படு கின்றனவா எனும் கேள்வி எழுகிறது. அதே சமயம், இந்தக் கொள்கை வரைவு, குறைந்தபட்ச ஊதியம் குறித்தும், வாழ்க்கை ஊதியம் பற்றியும் மௌனம் காக்கிறது.
ஸ்மிருதிகளும்
தொழிலாளர் கொள்கையும்
தொழிலாளர் கொள்கையும்
ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள வரைவுக் கொள்கை கூறுவதாவது:
“பழமை ஆவணங்களான மனுஸ்மிருதி, யக்ஞ வல்கியஸ்மிருதி, நாரதஸ்மிருதி, சுக்ரநீதி, அர்த்தசாஸ்திரம் ஆகியவை அரச நீதி குறித்து வலுவாகக் கூறியுள்ளன. நீதி, நியாயமான ஊதியம், சுரண்டலிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை உத்தரவாதப்படுத்துவதில் ஆள்வோ ரின் கடமை என்ன என்பது கூறப்பட்டுள்ளது. நவீன தொழிலாளர் சட்டங்கள் உருவாவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உழைப்பை நிர்வ கிக்கும் இத்தகைய கோட்பாடுகள் இந்திய நாகரிக உருவாக்கத்தில் வலுவான அடிப்படை அம்சங்க ளாக உள்ளன.”
“இந்தியாவின் பாரம்பரியப் புரிதல் என்னவெ னில், உழைப்பு என்பது வாழ்வாதாரத் தேவை மட்டு மல்ல; சமூக ஒற்றுமையையும் கூட்டு முன்னேற்றத்தை யும் நிலைநிறுத்த உதவும் புனிதமான மற்றும் தார்மீக அம்சமும் கொண்டது” என கூறும் இந்த வரைவுக் கொள்கை, இத்தகைய பாரம்பரிய ஆவணங்களிலி ருந்து உத்வேகம் பெறுவதாகவும், இத்தகைய கொள்கைகள் முற்றிலும் நவீன தொழிலாளர் கொள்கைகளுடன் இசைந்துள்ளதாகவும் கூறுகிறது.
“தார்மீகம்”, “புனிதம்” போன்ற வார்த்தைகள் உழைப்புச் சுரண்டலையும் அதன் பாதக விளைவு களையும் மூடி மறைக்கும் பட்டுத்துணி என்பதை கூறத் தேவையில்லை. இந்து மதம் மட்டுமல்ல; பல மதங்களும் இத்தகைய கருத்துகளைக் கூறி யுள்ளன. “உழைப்பவனின் வியர்வை கீழே சிந்தி உலர்வதற்கு முன்பே அவனுக்குரிய கூலி தரப்பட வேண்டும்” என்கிறது இஸ்லாம். “ஊசியின் ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழைவதைவிட பணக்காரன் தேவனுடைய ராஜ்யத்தில் நுழைவது கடினம்” எனக் கூறுகிறது கிறித்துவம். ஆனால், நவீன யுகத்தில் முதலாளிகள் இத்தகைய பழமையான பாரம்பரிய மான கோட்பாடுகளை மதிப்பதில்லை என்பது மட்டும ல்ல; தமது லாப வேட்டைக்கும் சுரண்டலுக்கும் ஆன்மீகத்தை மிகத் திறமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
மௌரியர் காலத்துக்கு முன்பு அபஸ்தாம்ப தர்மசூத்திரம், பவுதாயன தர்மசூத்திரம், கௌதம தர்மசூத்திரம், வசிஷ்டர் தர்மசூத்திரம் (கி.மு. 300க்கு முன்பு), மௌரியர்கள் காலத்தில் உருவான அர்த்தசாஸ்திரம் (கி.மு. 300 முதல் 200), பின்னர் உருவான மனுஸ்மிருதி (கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை), அதற்குப் பின்னர் உருவான யக்ஞ வல்கியஸ்மிருதி, நாரதஸ்மிருதி, விஷ்ணுஸ்மிருதி (கி.பி. 200 முதல் 500 வரை) போன்ற பல கோட்பாடு களும் அடிப்படையில் சொன்ன கருத்து என்ன? சமூகம் நால் வர்ணங்களைக் கொண்டது; அதில் உழைப்பை வழங்கும் சூத்திர வர்ணம் கடைக்கோடி யில் உள்ளது; சூத்திரர்களின் கடமை ஏனைய வர் ணத்தாருக்குக் குறிப்பாகப் பிராமணர்கள் மற்றும் சத்திரிய வர்ணத்தாருக்குப் பணிவிடை செய்வது என்பதுதான்.
அர்த்தசாஸ்திரத்தின்
பொருளாதார அம்சங்கள்
பொருளாதார அம்சங்கள்
சூத்திரர்களின் பொருளாதாரம் மற்றும் ஊதியம் குறித்துப் பல கோட்பாடுகளை உருவாக்கியது அர்த்தசாஸ்திரமே. அது முன்வைக்கும் சில அம்சங்கள்:
* புறம்போக்கு நிலங்களைச் சூத்திரர்களின் உழைப்பு மூலம் விளை நிலங்களாக மாற்ற வேண்டும். l இதற்காகச் சூத்திரர்களை அடிமைகளாகப் பயன் படுத்தலாம்.
* நிலங்களை அவர்கள் நிர்வகிக்க அனுமதிக்கலாம், ஆனால் நில உரிமை தரக்கூடாது.
* இலக்குகள் நிறைவேற்றாவிட்டால் நிலம் திரும்பப் பறிக்கப்பட வேண்டும்.
* கால்நடைகளைப் பராமரிக்கும் சூத்திரர்கள் ஒரு கால்நடையைத் தொலைத்தால் கூடத் தண்டனை வழங்க வேண்டும்; அது மரண தண்டனையாகவும் இருக்கலாம்.
* தொல்லைகளின் பிறப்பிடம் தொழிலாளர்கள்தான்! எனவே அவர்களைப் பொருத்தமாகக் கையாள வேண்டும்.
* நிலத்தில் இலக்குகளைத் தவறும் சூத்திர உழைப்பா ளிக்கு உடனடியாக ஊதியத்தில் 25% அபராதம்.
* தொடர்ந்து இலக்குகள் தவறினால் ஊதியத்தை விட இரு மடங்கு அபராதம்.
* ஒரு பிராமண ஆன்மீகவாதிக்கு 48, 000 பனா (நாணய மதிப்பு) ஊதியம் எனில், சூத்திர கைவினைஞருக்கு 120 பனாக்கள்தான் ஊதியம். l வீடுகளில் பணிபுரியும் பணியாளருக்கு 60 பனாக்க ளுக்கு மேல் ஊதியம் கூடாது.
* அரசு உயர் பதவிகளில் சூத்திரர்களுக்கு இடம் தரக்கூடாது.
* உயர் வர்ணத்தாரின் சட்டப் பிரச்சனைகளில் சூத்திரர்கள் அல்லது சண்டாளர்களின் சாட்சியம் செல்லாது.
* ஒரே குற்றத்தைச் செய்த சூத்திரனுக்குக் கடும் தண்டனையும் உயர் வர்ணத்தாருக்குக் குறைவான தண்டனையும் தரப்பட வேண்டும்.
* உயர் வர்ணங்களைச் சேர்ந்த பெண்கள் சூத்திர ஆண்களை மணந்தால், அவர்கள் மூலம் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்குச் சொத்துரிமை கிடையாது.
* அவர்ணத்தாரான சண்டாளர்கள் சூத்திரர்களுக்குக் கூட இணையில்லாத இழிவானவர்கள்.
* சண்டாளர்களைக் கண்ட கண்கள் கூட அசுத்தப் பட்டுவிடும்; எனவே உடனடியாகக் கண்கள் கழுவப்பட வேண்டும். மனுஸ்மிருதியின் பொருளாதார அம்சங்கள்
* சூத்திரர்கள் சொத்து சேமிக்க அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் அது பிராமணர்களுக்கு வலியைத் தரும்.
* தமக்குத் தேவையெனில், பிராமணர்கள் சூத்தி ரர்களின் சொத்துக்களை எப்பொழுது வேண்டுமா னாலும் பறிக்கலாம்.
* கடனுக்கு வட்டி வசூல் செய்யும்பொழுது பிராம ணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் குறைவான வட்டியும் சூத்திரர்களுக்கு அதிகமான வட்டியும் விதிக்கப்பட வேண்டும்.
* உயர் வர்ணப் பெண்களுக்குப் பிறக்கும் சூத்திர குழந்தைகளுக்கு 10%க்கு மேல் சொத்து தரக் கூடாது. உயர் வர்ணத்தாரின் எஞ்சிய உடைகள், உணவு கள்தான் சூத்திரர்கள் பயன்படுத்த வேண்டும்.
பிற ஸ்மிருதிகளின் கோட்பாடுகள்
யக்ஞவல்கியஸ்மிருதி, நாரதஸ்மிருதி, விஷ்ணுஸ் மிருதி, பிரகஸ்பதி ஸ்மிருதி ஆகியவை முன்வைத்த சில அம்சங்கள்:
* சூத்திரர்கள் தமக்கு இடப்பட்ட பணிகள் நிறை வேற்றாவிட்டால் ஊதியம் முழுமையும் பறிக்க வேண்டும்.
* வணிகம் மூலம் கிடைக்கும் லாபத்தில் அரசுக்கு, பிராமணர்கள் 1/20 பங்கும், சத்திரியர்கள் 1/10 பங்கும், வைசியர்கள் 1/9 பங்கும் கொடுக்க வேண்டும். ஆனால் சூத்திரர்கள் 1/6 பங்கு தர வேண்டும்.
* புதையல் கிடைத்தால் பிராமணர்கள் முழுவ தையும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் சூத்தி ரர்கள் புதையலை 12 பாகங்களாகப் பிரித்து, 5 பாகத்தைப் பிராமணருக்கும் 5 பாகத்தை அர சுக்கும் போக, மீதி 2 பாகத்தைத்தான் தான் வைத்துக்கொள்ள இயலும்.
கேரள இடதுசாரி அரசாங்கத்தின் நிராகரிப்பு
இப்படி இந்திய நாகரிகத்தின் பழமையான ஆவணங்கள் அனைத்தும் சூத்திர உழைப்பாளி களுக்கு அநீதியை முன்மொழிந்துள்ளன. காலத்து க்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் உருவானாலும், உழைப்பை நல்கிய சூத்திர வர்ணம் மற்ற மூன்று வர்ணங்களைவிட இழிவானதாகவே கருதப்பட்டது. சண்டாளர்கள் என வகைப்படுத்தப்பட்டவர்கள் கூடு தலாக இழிவாகக் கருதப்பட்டனர். இதேபோல, பெண்களும் உரிமையற்றவர்களாக மதிக்கப் பட்டனர். இத்தகைய ஆவணங்கள் 2025-இல் எப்படித் தொழிலாளர் சட்டங்களுக்கு ஆதாரமாகவும் உத்வேகம் தருவதாகவும் அமைய முடியும்?
கேரள இடதுசாரி அரசாங்கம் ஏற்கெனவே இந்தச் சட்டத்தை நிராகரித்துள்ளது. வரைவுச் சட்டத்தில் உள்ள இந்தப் பாதகமான அம்சங்களையும் ஏனைய மோசமான விதிகளையும் இந்தியத் தொழிலாளர் வர்க்கம் சிறிது கூட அனுமதிக்காது என்பது நிச்சயம்!
ஆதாரம்: Sudras in Ancient India – R.S.Sharma
நன்றி: ‘தீக்கதிர்’ (15.11.2025)
