நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் பீகார் தேர்தலுடன் நடைபெற்ற இடைத் தேர்தல் முடிவுகள் நேற்றுமுன்தினம் (14.11.2025) அறிவிக்கப்பட்டன.
அதன்படி ராஜஸ்தானில் உள்ள அன்டா தொகுதியிலும், தெலங்கானாவில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் தொகுதியிலும் நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள புட்காம் தொகுதியில் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி வேட் பாளர் ஆகா சையத் முன்தாசிர் மெஹ்தி வெற்றி பெற்றார். மேலும் பாஜக வேட்பாளர் தேவயானி ராணா நக்ரோட்டாவில் வெற்றி பெற்றார்.
ஜார்க்கண்டில் உள்ள காட்சிலா தொகுதியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் சோமேஷ் சந்திரசோரன் வெற்றி பெற்றார்.
மிசோராமில் உள்ள தம்ஷாவிலிருந்து மிசோ தேசிய முன்னணி வேட்பாளர் டாக்டர் ஆர். லால்தாங்லியானா வெற்றி பெற்றார்.
ஒடிசாவில் உள்ள நௌபாடாவிலிருந்து பாஜக வேட் பாளர் ஜெய் தோலகியா, பஞ்சாபில் உள்ள தர்ன் தரனில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஹர்மீத் சிங் சந்து ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பானி பூரி, சூப் முதலியவற்றை விற்பனை செய்யும்
தள்ளுவண்டி உரிமையாளர்கள்
உரிமம் பெறுவது கட்டாயம்
உரிமம் பெறுவது கட்டாயம்
உணவு பாதுகாப்பு துறை உத்தரவு
சென்னை, நவ.16 தமிழ்நாட்டில் தள்ளுவண்டியில் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உரிமையாளர்கள் அனைவரும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-இன் கீழ், உணவுப் பாதுகாப்புத் துறையிடமிருந்து முறையான உரிமத்தை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
சமீப காலமாக, மாநிலம் முழுவதும் தள்ளுவண்டி உணவு வணிகம் அதிகரித்துள்ள நிலையில், குறிப்பாக கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு குறித்து அதிக அளவில் புகார்கள் பெறப்பட்டதன் அடிப்படையில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பானிபூரி, சமோசா, ரவா லட்டு, சிப்ஸ், போண்டா, சூப், மீன், வறுத்த கறி, சிக்கன் பகோடா உட்பட, காலை, மதியம், இரவு நேரங்களில் தள்ளுவண்டியில் வைத்து விற்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களுக்கும் இந்த உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தள்ளுவண்டி வைத்து உணவுப் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு இந்த உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம் இலவசமாக வழங்கப்படும்.
உரிமத்தைப் பெற விரும்புவோர் இணைய வழி மூலமாகவோ அல்லது இ-சேவை மய்யங்கள் மூலமாகவோ விண்ணப்பித்து, அதற்கான பதிவிறக்க நகலை பெற்றுக் கொள்ளலாம். உரிமம் பெறாமல் உணவுப் பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது தரமற்ற உணவுப் பொருட்களை விநியோகம் செய்தாலோ, சம்பந்தப்பட்ட தள்ளுவண்டி கடை உரிமையாளர்களுக்கு அறிவிக்கை வழங்கி, அபராதம் விதித்து, கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
மேலும், தள்ளுவண்டி கடைகளில் உணவுப் பாதுகாப்பு விதிகளின்படி தரநிலைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்ய, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர்கள் மூலம் முறையான ஆய்வுகளை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவானது, உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.
இருவர் உறவு சம்மதத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்டு
உறவு முறிந்தபின் தகராறு எழுந்தால் குற்றவியல் வழக்கு தொடுக்க இயலாது
நீதிமன்றம்
மதுரை, நவ.16 பலமுறை உடலுறவு வைத்துக் கொண்ட பின் திருமணம் செய்ய மறுப்பதாக திண்டுக்கல்லை சேர்ந்த பெண் அளித்த புகாரில் இளைஞர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து அந்த இளைஞர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் முறையீடு செய்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி “தனிப்பட்ட உறவு தகராறுகளில் குற்றவியல் சட்டம் பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்துள்ளதை சரிபார்க்க வேண்டும். இருவர் உறவு சம்மதத்துடன் ஒப்புக்கொள்ளப்பட்டு உறவு முறிந்த பின் தகராறு’’ எழுந்தால் குற்றவியல் வழக்கு தொடங்க இயலாது.
தனிப்பட்ட அல்லது உணர்ச்சி ரீதியான தகராறுகளை தீர்க்க குற்றவியல் சட்டத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியாது. சமகாலத்தில் சமூகத்தில் தனிப்பட்ட உறவுகளின் மாறிவரும் வரையறையை ஒப்புக்கொள்வதற்காக கருத்து முன்வைக்கப்படுகிறது.
தனிப்பட்ட நடத்தையை ஒழுக்கப்படுத்தவோ, தனிப்பட்ட ஏமாற்றத்தை குற்றவியல் செயல்முறை வழக்காகவோ மாற்ற முடியாது. வற்புறுத்தல், ஏமாற்றுதல், இயலாமையால் சம்மதம் பாதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சட்டம் தலையிடுகிறது.
இருவர் சம்மதத்துடன் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு தகராறு என்றவுடன் குற்றவியல் சட்டத்தை பயன்படுத்துவதா?. தனிப்பட்ட முரண்பாட்டை தவறான நடத்தை என்று சித்தரிக்க யாருக்கும் உரிமை இல்லை. உணர்ச்சி ரீதியான தகராறுகளை தீர்க்க தனிமனிதருக்கு எதிராக வழக்கு தொடர்வது சட்ட செயல்முறையை விதி மீறல் செய்வதற்கு சமம்.” என கருத்து தெரிவித்தார். மேலும், பல ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வாழ்ந்தது இணைய உரையாடல்கள் மூலம் தெளிவாகி உள்ளதால் இளைஞர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்றார்.
