காரைக்கால், நவ.16 புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்கால் பிராந்தியத்தில் மொத்தம் 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் தற்போது என்.ஆர். காங்கிரஸ் வசமுள்ள மேனாள் அமைச்சரின் தொகுதி உள்ளிட்ட 3 தொகுதிகளுக்குக் குறி வைத்திருக்கிறது பா.ஜ.க.
காரைக்கால் பிராந்தியத்தில் காரைக்கால் தெற்கு, வடக்கு, திருநள்ளாறு, நெடுங்காடு (தனி), நிரவிதிருப்பட்டினம் ஆகிய 5 தொகுதிகள் உள்ளன. தொகுதி தற்போது வசம் உள்ள கட்சி காரைக்கால் தெற்கு திமுக நிரவிதிருப்பட்டினம் திமுக காரைக்கால் வடக்கு என்.ஆர். காங்கிரஸ் நெடுங்காடு (தனி) என்.ஆர். காங்கிரஸ் திருநள்ளாறு சுயேச்சை நிரவிதிருப்பட்டினம் மற்றும் திருநள்ளாறு தொகுதிகளில் கடந்த முறை பாஜக போட்டியிட்டுத் தோல்வியடைந்தது. இருப்பினும், இம்முறையும் அந்தத் தொகுதிகளைத் தனது பட்டியலில் வைத்திருக்கிறது.
திருநள்ளாறு
இங்கு போட்டியிட்டுத் தோல்வி யடைந்த தொழிலதிபர் ஜி.என்.எஸ். ராஜசேகரன், மேலிட செல்வாக்கால் தற்போது நியமன சட்டமன்ற உறுப்பினரா இருக்கிறார். இவர் மீண்டும் திருநள்ளாறை இலக்கு வைத்து களப்பணிகளைச் செய்து வருகிறார்.
இம்முறை காரைக்காலில் கூடுதலாக ஒரு தொகுதிக்கும் பாஜக குறிவைக்கிறது.
தற்போது என்.ஆர். காங்கிரஸ் வசம் உள்ள நெடுங்காடு (தனி) தொகுதியில் மேனாள் அமைச்சரும் முதலமைச்சர் ரங்கசாமியின் விசுவாசியுமான சந்திரகாசு வின் மகள் சந்திரபிரியங்கா இப்போது இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். ரங்கசாமி அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்த இவர், அரசியல் நெருக்கடிகள் காரணமாக 2023 அக்டோபரில் அமைச்சர் பதவியை விட்டு விலகினார்.
இந்த நிலையில், இம்முறை நெடுங்காடு தொகுதியில் போட்டியிட பா.ஜ.க. மருத்துவரணி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் விக்னேஸ்வரன், சிபாரிசுக்கு ஆள் பிடித்து வருகிறார்.
முன்பு தி.மு.க.வில் இருந்த இவர், கடந்த தேர்தலில் கட்சி தனக்கு வாய்ப்பளிக்காததால் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தோற்றார். அதன் பிறகு பாஜகவில் இணைந்த இவருக்குக் குறுகிய காலத்திலேயே மாநிலப் பொறுப்பு வழங்கப்பட்டது.
சமீபத்தில் நெடுங்காடு பகுதியில் நடைபெற்ற எஸ்அய்ஆர் திருத்தப் பணி பயிற்சி முகாமில் பேசிய பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, “இந்தத் தொகுதியை மனதில் வைத்து கட்சியினர் இப்போதிலிருந்தே மிகக் கடுமையாக உழைக்க வேண்டும்” என பாஜக நிர்வாகிகளுக்குக் கோடிட்டுக் காட்டிச் சென்றார்.
