“சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 5.11.2023 அன்று தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
“அயோத்தியில் ஜனவரி மாதத்தில் ராமர்கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும். இந்த விஷயத்தில் உத்தரப்பிரதேச மக்களைவிட சத்தீஸ்கர் மக்கள்தான் அதிகம் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். ஏனெனில், சத்தீஸ்கர்தான் ராம பிரானின் தாய்வழி வீடாகும்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படுவது நாட்டில் ராம ராஜ்யத்தின் தொடக்கமாக இருக்கும். இந்த ராஜ்யத்தில் ஜாதி, மத பாகுபாடுகள் இருக்காது. அரசின் திட்டத்தின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமமாகக் கிடைக்கும்.
அனைவருக்கும் நாட்டின் வளர்ச்சியில் இருந்து உரிய பங்கு கிடைக்கும். மக்களின் பாதுகாப்பும், வசதிகளும் உறுதி செய்யப்படும். இதுதான் ராம ராஜ்யமாகும்.
அதே நேரத்தில் அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட விடாமல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. இப்போதும் கூட சத்தீஸ்கரில் ‘லவ் ஜிகாத்’, மதமாற்றம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நபராக முதல்வர் பூபேஷ் பகேல் திகழ்கிறார். இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு எதிராக சத்தீஸ்கர் அரசு எவ்வித உறுதியான நடவடிக்கையும் எடுப்பதில்லை.” (‘தினமணி’ 6.11.2023 பக்.9)
பிஜேபி ஆட்சி என்பது இந்து ராஜ்யமே – இராம ராஜ்யமே என்று நாம் குற்றஞ்சாட்டி வந்திருக்கிறோம்.
அதற்கு நேரிடையாகப் பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடிய சங்பரிவார் மற்றும் பார்ப்பனர்கள், இப்பொழுது பிஜேபியைச் சேர்ந்த உத்தரப்பிரதேச முதலமைச்சர், அயோத்தியில் ராமன் கோயில் கட்டி முடிக்கப்படுவது, நாட்டில் ராம ராஜ்ஜியத்தின் தொடக்கமாக இருக்கும் என்று அப்பட்ட மாகவே செதிர் தேங்காயாக, மட்டை ஒன்று கீற்று இரண்டாக உடைத்துக் கூறி விட்டாரே – பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டதே! இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
பா.ஜ.க.விலும், சங்பரிவாரிலும் சேர்ந்து கொண்டு ஆட்டம் போடும் பார்ப்பனர் அல்லாத சிலரும் இதற்கு மேலும் ‘ஜெய்சிறீராம்’ கோஷம் போடுவதும், காவி உடை அணிவதும், தாமரைக் கொடியைத் தூக்கிச் செல்லுவதும் எந்த அடிப்படையில் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?
ராமராஜ்ஜியத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்று கூறிய உ.பி. முதலமைச்சர் அதற்கான காரணத்தை எந்த அளவு முரண்பாடாகக் கூறி இருக்கிறார் என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
“ராம ராஜ்ஜியத்தில் ஜாதி, மத பாகுபாடுகள் இருக்காது” என்று சொல்லுவதைவிட யோக்கியமற்ற தன்மை ஒன்று இருக்க முடியாது.
வால்மீகி இராமாயணத்தின் உத்தரகாண்டத்திற்கு உ.பி. முதலமைச்சரிலிருந்து கமண்டலக்காரர்கள் வரை அனைவரையும் அழைத்துச் செல்லுவோம்!
அங்கே என்ன நடக்கிறது? சம்பூகன் என்பவனை வாளால் இராமன் ஏன் வெட்டிக் கொன்றான்?
சம்பூகன் என்பவன் பிறப்பால் இந்து தர்மப்படி சூத்திரன். இந்துவின் வர்ணாசிரம தர்மப்படி சூத்திரன் தவம் செய்யக் கூடாது. இது இந்து தர்மத்துக்கு விரோதம்! இதன் காரணமாக ஒரு பார்ப்பன வீட்டுப் பிள்ளை இறந்து விடுகிறானாம்.
ராமராஜ்ஜியத்தில் வருண தருமத்துக்கு மாறாக சூத்திரன் தவம் இருந்ததால் தான் அந்தப் பார்ப்பன வீட்டுப் பிள்ளை மரணம் அடைந்து விட்டானாம்.
அரசனான ராமனிடம் சென்று செத்துப் போன பார்ப்பன சிறுவனின் தந்தை முறையிட, உடனே ராமன் புறப்பட்டுப் போய், அந்தச் சூத்திரனைக் கொன்றானாம்; அந்த மாத்திரத்திலேயே செத்துப் போன பார்ப்பனச் சிறுவன் உயிர் பிழைத்து விட்டானாம்.
இப்படி நடக்க முடியுமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்; இதன் பின்னணியில் உள்ள தத்துவம் என்ன?
மனிதன் பிறப்பின் அடிப்படையிலேயே நான்கு வருணங்களாகத் தனித் தனியே பிறக்கிறான்.
ஒவ்வொரு வருணத்துக்காரனுக்கும் ஒவ்வொரு ஜாதித் தொழில் உண்டு. அதை மீறினால் அரசன் தண்டிப்பான்! எந்த அளவு? வருணதர்மப்படி குற்றம் என்று சொல்லப்படுகிற குலத் தொழிலுக்கு மாறாக செயல்படுபவனின் தலையை வெட்டிக் கொல்லும் அளவுக்கு நடப்பதுதான் வர்ணதர்மம் – ராம ராஜ்ஜியம்.
உ.பி. முதலமைச்சராக இருந்தாலும் சரி, ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்தாலும் சரி, பிஜேபி சார்பில் ஆட்சி நடத்துபவராக இருந்தாலும் சரி – அவர்களின் கொள்கை என்பது இதுதான். ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று பிரதமர் மோடி ஜி முழங்குகிறாரே – வரும் ஜனவரியில் அயோத்தியில் ராமன் கோயிலைத் திறக்க இருக்கிறாரே – அதன் செயல்பாடு என்பது சம்பூக வதம்தான்!
‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற குலத் தொழில் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறாரே – அது இராமன் காட்டிய அந்த வர்ணாசிரமக் கொள்கையின் அடிப்படையில் தான். இடஒதுக்கீட்டை நசுக்குவதும் இதே காரணத்துக்குத்தான்!
மற்றொன்று முக்கியமானது. இராமாயணம் என்பது ஆரியர் – திராவிடர் போராட்டத்தை சித்தரிப்பது என்று டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் தொடங்கி, ஜவகர்லால் நேரு, மறைமலை அடிகள் வரை ஆதாரங்களோடு எழுதியுள்ளனர்.
இதன் அடிப்படையில் பார்த்தால் பிஜேபி சொல்லும் ராமராஜ்ஜியம் என்பது ஆரியர் – திராவிடர் போராட்டமே!
2024 மக்களவைத் தேர்தலை இந்தக் கண்ணோட்டத்தோடு கவனிக்கத் தவறக் கூடாது! கூடவே கூடாது!!