கேளம்பாக்கம் அருகே பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது! பாராசூட் மூலம் உயிர் தப்பினார் விமானி

சென்னை, நவ.15- கேளம்பாக்கம் அருகே பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது பாராசூட்டில் குதித்து விமானி உயிர் தப்பினார்.

பயிற்சி விமானம்

தாம்பரத்தில் உள்ள விமானப்படை பயிற்சி நிலையத்தில் இருந்து நேற்று  (14.11.2025) பிற்பகல் 1.30 மணிக்கு பிளேட்டஸ் பி.சி 7 என்ற ஒரு பயிற்சி விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தை விமானி சுபம் என்பவர் இயக்கினார். விமானம் தாம்பரத்தை தாண்டி திருப்போரூர் கழிவெளி பகுதியில் வான்வெளியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

பிற்பகல் 2 மணியளவில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, விமானத்தை இயக்கிய விமானி சுபம், அதை தரை இறக்க முயற்சித்தார். ஆனால் அதற்கு போதிய விமான தளம் இல்லாததால் விமானத்தை திருப்போரூர் புறவழிச் சாலையில் இறக்க முயற்சித்ததாக தெரிகிறது. இதில், போதிய அவகாசம் கிடைக்காத நிலையில், விமானத்தில் இருந்து விமானி சுபம் பாராசூட்டில் குதித்தார்.

இதனால் தாறுமாறாக இயங்கிய விமானம் தண்டலம், திருப்போரூர் கிராமங்களில் வீடுகளின் மேல் சுற்றியபடி வந்த விமானம் நெம்மேலி சாலையில் உள்ள தனியார் உப்பு பேக்கிங் செய்யும் தொழிற்சாலையின் பின்பக்கத்தில் விழுந்து அப்பளமாக நொறுங்கியது. விமானம் விழுந்ததில் அந்த தொழிற்சாலையின் கழிவுநீர் சுத்திகரிப்பு மய்யம் முற்றிலும் சேதமடைந்து, சேறு முழுவதும் கம்பெனி மீது தெளித்தது. இதனால் தொழிற்சாலையின் உள்ளே வேலை செய்துக் கொண்டிருந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியே வந்து பார்த்தனர்.

ஆனால் விழுந்து நொறுங்கியதால் விமானத்தின் எந்த அடையாளமும் இல்லாமல் அதன் பாகங்கள் சிதறிக்கிடந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், தொழிற்சாலையை விட்டு சாலைக்கு ஓடி வந்தனர். இதனிடையே தங்களின் வீடுகளின் மீது விமானம் பறந்து அதனால் ஏற்பட்ட சத்தத்தினால் ஏராளமானோர் தண்டலம் மற்றும் திருப்போரூர் பகுதிகளில் விமானம் எங்கேயோ விழுந்து விட்டது என்று தேடிச் சென்றனர். அப்போதுதான் ஒதுக்குப்புறமாக இருந்த தனியார் தொழிற்சாலை வளாகத்தில் விமானம் விழுந்தது தெரியவந்தது.

பாராசூட் மூலம்
விமானி உயிர் தப்பினார்

இதையடுத்து காவல் துறையினர், அங்கு வந்து வேடிக்கை பார்க்க வந்தவர்களை அப்புறப்படுத்தினர். இதனிடையே திருப்போரூர் புறவழிச்சாலையில் தண்டலம் பகுதியில் பாராசூட் மூலம் குதித்த விமானி சுபம் என்பவரை, பொதுமக்கள் மீட்க முயற்சித்தனர். அவருக்கு தமிழ் சரியாக தெரியாததால் தன்னை யாரும் தொல்லை செய்ய வேண்டாம் என்றும், தன்னைக் காப்பாற்ற விமானப்படை ஏர் ஆம்புலன்ஸ் வருவார்கள் என்றும் ஆங்கிலத்தில் கூறினார்.

இதையடுத்து தண்டலம் கிராம இளைஞர்கள், அவர் பயன்படுத்திய பாராசூட்டை குடைபோல் விரித்து அவருக்கு நிழலை ஏற்படுத்தினர். இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால், அந்த ஆம்புலன்சில் ஏற விமானி மறுத்து விட்டார். தனக்கு விமானப் படை வீரர்கள் வந்து உதவுவார்கள் என்று கூறி சாலையின் நடுவிலேயே படுத்த நிலையில் இருந்தார். இந்நிலையில் விமானம் விழுந்த தகவல் பாராசூட்டில் குதித்த விமானி மூலம், தாம்பரம் விமானப்படைக்கு தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, ஒரு சிறிய ரக விமானம் வந்து வானில் வட்டமடித்து விமானம் விழுந்த இடத்தை பார்வையிட்டு சென்றது. இதையடுத்து ஹெலிகாப்டரில் வந்த இரு விமானப்படை வீரர்கள், வானில் வட்டமிட்டு பின்னர் விமானி விழுந்து கிடந்த புறவழிச்சாலையின் நடுவில் ஹெலிகாப்டரை தரை இறக்கினர். பின்னர், விமானத்தில் இருந்து ஸ்டிரெச்சர் கொண்டு வரப்பட்டு விமானி சுபம் தாம்பரம் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, விமானி மேல் சிகிச்சைக்காக பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முன்னதாக, புறவழிச்சாலையில் பாராசூட்டில் இறங்கிய விமானியை விமானப் படையினர் மீட்டுச் சென்றவுடன், அவர் பயன்படுத்திய பாராசூட்டை திருப்போரூர் காவல் துறையினர் எடுத்துச் சென்றனர்.

விமான பாகம் சேகரிப்பு

விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய இடத்தை நேற்று (14.11.2025) மாலை 4.30 மணியளவில் விமானப்படை அதிகாரிகள் பார்வையிட்ட சிதறிக்கிடந்த விமானத்தின் பாகங்களை சேகரித்து எடுத்துச்சென்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *