சிவகங்கை, நவ.15– தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (14.11.2025) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைகளின் சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவ – மாணவியருக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2025 – 2026, சிறந்த பள்ளிகளுக்கான விருது 2024 – 2025 மற்றும் குழந்தைகள் தின விழாவில் தமிழ்நாடு முழுவதும் 2025- 2026 ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11- ஆம் வகுப்பு பயிலும் 5,34,017 மாணவ, மாணவியருக்கு 241 கோடி ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக 1,448 மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் மேல்நிலைக்கல்வியை ஊக்குவிக்கும் வகையில், பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் சிரமமின்றி சென்று வர உதவியாக, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிரிவைச் சார்ந்த அனைத்து மாணவ, மாணவியருக்கும், எவ்வித வருமான உச்சவரம்பின்றி ஆண்டுதோறும் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் 1,092 கோடி ரூபாய் செலவில் 22 லட்சம் மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
2025- 2026 ஆம் கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு பயிலும் 2,38,967 மாணவர்கள் மற்றும் 2,95,050 மாணவியர் என மொத்தம் 5,34,017 மாணவ, மாணவியருக்கு 241 கோடி ரூபாய் செலவில் மிதி வண்டிகள் வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் 4,938 மாணவர்கள் மற்றும் 6,511 மாணவியர் என மொத்தம் 11,449 மாணவ, மாணவியர்களுக்கு 5.18 கோடி ரூபாய் செலவில், மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் குழந்தைகள் தினமான நேற்று (14.11.2025) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு, அரசு நிதி உதவி மற்றும் பகுதியாக நிதி உதவி பெறும் 8 பள்ளிகளைச் சேர்ந்த 576 மாணவர்கள் மற்றும் 872 மாணவிகள் என மொத்தம் 1448 மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கி, தமிழ்நாடு முழுவதும் 2025- 2026 ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் 5,34,017 மாணவ, மாணவியருக்கு 241 கோடி ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கல்விப் பணியில் முன்னேற்றம் காணவும், பள்ளிகளிடையே போட்டி மனப்பான்மையினை ஊக்குவிக்கவும், ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்திலுள்ள 3 சிறந்த பள்ளிகளைத் தெரிவு செய்து மாவட்ட வாரியாக சுழற்கேடயங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
2024-2025ஆம் கல்வியாண்டில் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 114 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு துணை முதலமைச்சர் கேடயங்களை வழங்கினார்.
குழந்தைகள் தின விழா;
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14 குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினத்தையொட்டி விழாவில் நாட்டரசன்கோட்டை கே.எம்.எஸ்.சி மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், கோட்டையூர் சி.சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் நாட்டுப்புற பாடல், தேவகோட்டை புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் நடனம், மரகாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவியின் பேச்சு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவ, மாணவியரை தமிழ்நாடு துணை முதலமைச்சர் பாராட்டி கேடயங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.தமிழரசி ரவிக்குமார், எஸ்.மாங்குடி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் பி.சந்தர மோகன், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் எ.சரவணவேல்ராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, காரைக்குடி மாநகராட்சி மேயர் சே. முத்துதுரை, துணை மேயர் ந. குணசேகரன், தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் பூ.ஆ.நரேஷ், பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு. எஸ்.செல்வசுரபி, சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
