சென்னை, நவ.15- சென்னை கலைவாணர் அரங்கில் உலக நீரிழிவு தினம் நேற்று (14.11.2025) கடைபிடிக்கப்பட்டது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.
அப்போது, ‘நீரிழிவு நோய் வகை -1′ விழிப்புணர்வு காணொலி மற்றும் புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து, கர்ப்பகால நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்கும் மாதிரி திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர், தேசிய நலவாழ்வு குழுமத்துடன் இணைந்து பணியாற்றும் பங்குதாரர்களை சிறப்பித்தார்.
அதைதொடர்ந்து செய்தி யாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
மாதிரித் திட்டம்
கர்ப்பகால நீரிழிவு நோயினை தடுப்பதற்கு ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்கினால் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் நீரிழிவு நோய் பாதிப்பு இருக்காது என்பது குறித்த ஆய்வறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான மாதிரி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்தத் திட்டம் தொடங்கிவைக்கப்பட இருக்கிறது.
சென்னை, தஞ்சாவூர், கோவை, சேலம், நெல்லை, தர்மபுரி, திருச்சி ஆகிய 7 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான பிரத்யேக சிகிச்சை மய்யங்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 2.5 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கும் நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது.
நீரிழிவு நோய் பாதிப்பு இந்திய அளவில் 12 சதவீதமாகவும், தமிழ்நாட்டில் 13 சதவீதமாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் பாதிப்புகள் இருந்தாலும் உயிரிழப்பு கள் வெகுவாக குறைக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், பொது சுகாதார இயக்குநர் சோமசுந்தரம், மருத்துவக் கல்வி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, ஊரகநலப்பணிகள் இயக்குநர் சித்ரா, நீரிழிவு நோய் மருத்துவ நிபுணர் ஷேசையா மற்றும் டாக்டர்கள் கலந்துகொண்டனர்.
