சென்னை, நவ.15- 13 வங்கிகளில் பணியாற் றும் 49 அதிகாரிகள் மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 12 அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை பாய உள்ளது.
வங்கி மோசடி பிரிவு
சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் வங்கி மோசடி பிரிவு என்ற தனிப்பிரிவு உதவி ஆணையர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. வங்கிகளில் நடைபெறும் மோசடி தொடர்பாக இந்த தனிப்படை காவல் துறை பிரிவில் கொடுக்கப்படும் புகார்கள் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
போலி ஆவணங்கள் மூலம் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு பணத்தை திரும்ப செலுத்தாமல் மோசடியில் ஈடுபடும் கும்பல் மீது இந்த தனிப்படை பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற மோசடி வழக்குகளில் மோசடிக்கு துணைப் போகும் வங்கி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறை ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
கடன் கொடுப்பதற்கு முன்பே ஆவணங்களை முறையாக சரிபார்க்காமல் தரகுத் தொகையை வாங்கி கொண்டு வங்கி அதிகாரிகள் கோடிக்கணக்கில் பணத்தை கடனாக வாரி வழங்குகின்றனர். கடன் வாங்கிய நபர்கள் பணத்தை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்த பிறகு, போலி ஆவணங்கள் மூலம் கடனை பெற்று மோசடி செய்துவிட்டதாக குறிப்பிட்ட வங்கிகள் சார்பில் புகார் கொடுக் கப்படுகிறது.
சமீபத்தில் இதுபோல் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.7 கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற புகார்களை கொடுத்து பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகளும் காவல்துறை உதவியை நாடி நிற்கிறார்கள்.
49 பேர் கைது
இது போன்ற மோசடிகளை தடுப்பதற்காக மோசடிக்கு துணை போகும் வங்கி அதிகாரிகள் மீதும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரையில் 13 வங்கிகளில் பணியாற்றும் 67 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் குறிப்பாக பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் 5 அதிகாரிகளும், பாரத ஸ்டேட் வங்கியில் 6 அதிகாரிகளும், இந்தியன் ஓவர்சீஸ் மற்றும் கனரா வங்கியில் தலா ஒரு அதிகாரியும் வழக்கில் சிக்கி இருக்கிறார்கள்.
அதிகபட்சமாக பெடரல் வங்கியில் 19 பேர் மீதும், இன்டஸ்இண்ட் வங்கியில் 18 பேர் மீதும் வழக்குகள் பாய்ந்துள்ளன. கரூஸ் வைஸ்சியா வங்கியில் 2 அதிகாரிகள் சிக்கி உள்ளனர். எச்.டி.எப்.சி. வங்கியில் 2 அதிகாரிகளும், யெஸ் வங்கியில் 7 அதிகாரிகளும், பாங்க் ஆப் பரோடாவில் 5 அதிகாரிகளும் வழக்கில் சிக்கி உள்ளனர்.
வழக்கில் சிக்கிய 67 அதிகாரிகளில் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 12 பேர் மீது கைது நடவடிக்கை பாய உள்ளது. மற்ற அதிகாரிகள் மீது விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
