எஸ்.அய்.ஆர்.அய் ஆதரித்து நீதிமன்றத்திற்கு அதிமுக சென்றது வெட்கக்கேடு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை, நவ. 15– “தங்களது கட்சியை டில்லியில் அடமானம் வைத்துவிட்டு, தற்போது எஸ்அய்ஆரை ஆதரித்து வருகிறது அதிமுக. இது வெட்கக் கேடு” என கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் நேற்று (14.1.2025) நடைபெற்ற “என் வாக்குச் சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது கூறியதாவது, “இன்றைக்கு நாம் எங்கு சென்றாலும் எஸ்அய்ஆர் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அதைப் பேசாமல் இருக்க முடியாது என்கிற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. மக்கள் ஒவ்வொருவரும், ‘நாங்கள் இந்திய குடிமக்கள்தான்’ என்று நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில், கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். காரணம், தேர்தல் ஆணையம் அப்படிப்பட்ட ஒரு பெரும் சுமையை நம்மீது சுமத்தியிருக்கிறது.

மக்களின் வாக்குரிமையே பறிபோகும் அளவுக்கு ஒரு சூழ் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை உரு வாக்கியவர்கள் யார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஒன்றியத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் இதை உருவாக்கியிருக்கிறார்கள். எவ்வாறு, விசாரணை அமைப்புகளை வைத்து, பல்வேறு மாநிலங்களில் இருக்கும் ஆட்சிகளுக்கு இன்னல் களையும், துன்பங்களையும் தந்து கொண்டிருக்கிறார்களோ, அதேபோல் தேர்தல் ஆணையத்தையும் பயன்படுத்தி அப்படி ஒரு சூழ்நிலையை அவர்கள் ஏற் படுத்தியிருக்கிறார்கள்.

வாக்குத் திருட்டு

ஏற்கெனவே, நீங்கள் தொலைக் காட்சிகளில், பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள். நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளிப் படையாகவே வாக்குத் திருட்டைப் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை எடுத்துவைப்பது மட்டுமல்லாமல், ஆதாரங்களோடு அதைச் சுட்டிக்காட்டி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் உண்மையான வாக்காளர் ஒருவர்கூட வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறோம். மக்கள் மன்றத்திலும் விளக்கிக் கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கடந்த அக்டோபர் 27ஆம் தேதி நம்முடைய தோழமைக் கட்சிகளாக இருக்கக்கூடிய கூட்டணிக் கட்சித் தலைவர்களையெல்லாம் அழைத்து இது சம்பந்தமாக கூட்டத்தை நடத்தி பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அதைத் தொடர்ந்து நவம்பர் 2ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துக்கட்சிக் கூட்டம் கட்சிப் பாகுபாடின்றி – பதிவு செய்யப்பட்டிருக்கும் எந்தக் கட்சியாக இருந்தாலும் – அது நமக்கு எதிர்க் கட்சியாக இருந்தாலும் சரி, நம்மை விமர்சிக்கும் கட்சியாக இருந்தாலும் சரி, எந்த கட்சிகளாக இருந்தாலும் பாகுபாடு பார்க்காமல் அத்தனை கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தோம்.

அந்த கூட்டத்தையும் கூட்டினோம். அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறோம். அந்த அடிப்படையில் நாம் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறோம். அதுமட்டுமின்றி, கடந்த 11ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் மாவட்டத் தலைநகரங்களில் நம்முடைய தோழமைக் கட்சிகளின் தலைவர்களெல்லாம் பங்கேற்கக் கூடிய வகையில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்திருக்கிறோம்.

நம்முடைய உணர்வுகளையெல்லாம் தொடர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறோம். வழக்கமாகத் தேர்தலில் தி.மு.கழகத்தை வெற்றிபெற வைக்கும் பொறுப்பைத்தான் உங்களிடத்தில் ஒப்படைப்பதுண்டு. ஆனால் இந்த முறை, மக்களுடைய வாக்குரிமையைப் பெற்றுத் தரும் பெரும் பொறுப்பையும் கூடுதலாக உங்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். அதுவும் கொளத்தூர் தொகுதியின் செயல் வீரர்களாக விளங்கிக் கொண்டிருக்கும் உங்களிடம் சொல்லவேண்டிய அவசியமில்லை.

கால அவகாசம்

என்னைவிட விழிப்பாக இருக்கக் கூடியவர்கள் நீங்கள். வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை நிறைய இருக்கிறது. நமக்கு அதிக கால அவகாசம் இல்லை. அதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நவம்பர் 4-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரையில் ஒருமாத காலம் நிர்ணயம் செய்யப்பட்டு, ஒரு மாதத்திற்குள் எல்லோருடைய கணக்கீட்டுப் படிவமும், அதாவது நாம் வாக்காளராக சேரும் விண்ணப்பப் படிவம் – அதைத்தான் கணக்கீட்டுப் படிவம் என்று சொல்கிறோம். கணக்கீட்டுப் படிவம் என்றாலும் சில பேருக்குப் புரியாது.

நாம் வாக்காளராக சேருவதற்கு ஒரு படிவம் கொடுக்கிறார்கள். இன்றைக்கு தேதி 14. பத்து நாட்கள் முடிவடைந்துவிட்டன. மீதி இருப்பது எத்தனை நாட்கள் என்று உங்களுக்குத் தெரியும். அந்த விண்ணப்பதை நாம் வாங்கிப் பார்க்கும் போது, நமக்குப் பெரிய குழப்பம் வருகிறது. தலை சுற்றுகிறது. தமிழ்நாடு அதுகுறித்து புலம்பிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, மேற்கு வங்கத்தில் முதலமைச்சராக இருக்கும் மம்தா மிகப் பெரிய போராட்டங்களை நடத்தித் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அதேபோல், கேரளாவில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆளுங்கட்சி மட்டுமல்லாமல் அங்கு இருக்கும் எதிர்க்கட்சியும் ஒன்றுசேர்ந்து போராட்டம் நடத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு அவர்களும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி என்று ஒன்று இருக்கிறது. அது எதிர்க்கட்சியாக இல்லை. இப்படியே சென்றுக்கொண்டிருந்தால் எதிர்க்கட்சி யாக மட்டுமல்ல. உதிரிக் கட்சியாக கூட இருக்க முடியாத ஒரு சூழ்நிலை நிச்சயம் ஏற்படும்.

வெட்கக்கேடு

அதாவது தங்களுடைய கட்சியை டில்லியில் கொண்டுசென்று அடமானம் வைத்துவிட்டு அந்த எஸ்அய்ஆரை ஆதரித்து – அவர்கள் போட்டுக் கொண்டிருக்கும் நிபந்தனைகளை எல்லாம் ஏற்றுக்கொண்ட நிலை யில் அவர்கள் அடமானம் வைத்திருக் கிறார்கள். அதை ஆதரித்துக் கொண்டி ருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எல்லா கட்சிகளும் உச்ச நீதிமன்றத்திக்குச் செல்கிறோம்.

ஆனால், இங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக அதை ஆதரித்து உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும் வெட்கக் கேடு நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. மக்களை சந்திக்க அவர்களுக்கு தெம்பு இல்லை. அதனால்தான் இந்த குறுக்கு வழியை அவர்கள் நாடியிருக்கிறார்கள். எனவே, இப்படிப்பட்ட நிலையில் உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, தொகுதி முழுவதும் ஒரு பூத் விடாமல் சுற்றிச் சுழல வேண்டும். அந்தக் கணக்கீட்டுப் படிவங்களை நிரப்ப நாமெல்லாம் மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் நியமித்திருக்கும் பிஎல்ஓ-க்கும் – மக்களுக்கும் இடையே நம்முடைய பிஎல்ஏ2-தான் துணை நிற்க வேண்டும். உதவிசெய்ய வேண்டும். ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதைப் பூர்த்தி செய்ய அனைத்து வகையிலும் நீங்கள் துணைநிற்க வேண்டும் என்று உங்களையெல்லாம் இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஏற்கெனவே சொன்னதுபோன்று, இந்த மாதம் 4ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை என்று சொன்னாலும், பத்து நாட்கள் முடிந்துவிட்டது. எனவே, மீதமிருப்பது இன்னும் 15 நாட்கள்தான். எனவே, அதனை முடிக்க வேண்டிய பணிகளில் நீங்கள் ஈடுபடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது.

அந்தப் பணியை வெற்றிகரமாக முடித்துத் தாருங்கள் என்று உங்களை அன்போடு கேட்டு, எவ்வாறு கொளத்தூர் தொகுதி, மற்ற தொகுதிகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறதோ, அதேபோல் இந்த எஸ்அய்ஆர் பிரச்சினையில் முறையாக வாக்கு சேகரிக்கின்ற பணிகளிலும் முதலிடத்தைப் பெறும் வகையில் நீங்கள் இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது”. இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *