ஜோகன்னஸ்பர்க், நவ.15- தென் ஆப்பிரிக்காவில் பாலஸ்தீனியர்கள் சென்ற விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால் 150 பயணிகள் நடுவானில் தவித்தனர்.
போர் நிறுத்த ஒப்பந்தம்
இஸ்ரேல்-காசா போர் கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த போரில் சுமார் 70 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகினர், லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர். இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை அழைத்துபேசினார். பின்னர் எகிப்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவில் இருதரப்பினர் இடையே கடந்த மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
வாடகை விமானம் மூலம்…
அதன்படி இஸ்ரேல் சிறை பிடித்து சென்ற 15 பாலஸ்தீனியர்களின் உடல்களை இஸ்ரேல் ராணுவம் நேற்று (14.11.2025) பாலஸ்தீன அரசாங்கத்திடம் ஒப்படைத்தது. இதன்மூலம் போர் நிறுத்த ஒப்பந்தம் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
தற்போது ஓரளவு இயல்பு நிலை திரும்பியதால் காசாவை விட்டு சென்ற மக்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். அந்தவகையில் 150-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் ஒரு வாடகை விமானம் மூலம் கென்யாவில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
உள்துறை அமைச்சகம் அனுமதி
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த குளோபல் ஏர்லைன்சுக்கு சொந்தமான அந்த விமானம் தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் தரையிறங்க முயன்றது. ஆனால் முறையான அனுமதியின்றி பயணித்ததாக அந்த விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் 12 மணி நேரத்துக்கும் மேலாக அந்த விமானம் நடுவானில் வட்டமிட்டு கொண்டிருந்தது. பின்னர் தன்னார்வ தொண்டு நிறுவனம் அளித்த உத்தரவாதத்தின்பேரில் அந்த விமானம் தரையிறங்க உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. எனவே ஓ.ஆர். டாம்போ விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியது. 130 பேர் அந்த நாட்டுக்குள் நுழைந்தனர். மேலும் 23 பேர் அங்கிருந்து வேறு நாடுகளுக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர்.
