சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து வலுக் கட்டாயமாக வெளியே அனுப்பப்பட்டபோது, அடுத்து இந்த நாட்டின் நிலைமை என்னவாகும் என்ற யோசனை எல்லோருக்கும் இருந்தது. கலங்கிய இதயத்துடன் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய கடமையைத் தன் தோள்மேல் போட்டுக் கொண்டு உழைத்தவர் நவீன சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ. இன்று உலக அளவில் வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் எடுத்துக்காட்டான நாடாக சிங்கப்பூர் உயர்ந்திருப்பதற்கு அவர் தலைமையில், இன வேறுபாடுகளைக் களைந்து சிங்கப்பூரியர்களாகவே உணர்ந்து உழைத்த ஒவ்வொருவரின் உழைப்பும் காரணம். எண்ணிப் பூரிக்கத் தக்க 60 ஆண்டுகள் பயணத்தைக் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் நாளிலிருந்து கொண்டாடி மகிழ்கின்றனர் சிங்கப்பூரியர்கள். அதே நேரம், இன்னும் போக வேண்டிய பாதையையும், அதைச் செழுமையுறச் செய்வதற்கான முயற்சிகளையும், திட்டங்களையும் உருவாக்குவதன் மூலம் தன்னைச் செம்மைப்படுத்திக் கொண்டே இருப்பது தான் சிங்கப்பூரின் தனித்தன்மை; அதுவே சிங்கப்பூரின் வலிமையும் (Spirit) கூட!

“பெரியாரும் சிங்கப்பூரும்”
சிங்கப்பூர் 60 உடன், தங்களின் 20-ஆம் ஆண்டையும் கொண்டாடுகின்றனர் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தார்! அதையொட்டி, “பெரியார் விழா – 2025”க்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் “பெரியாரும் சிங்கப்பூரும்” என்பது!
மலேயாவைப் போலவே சிங்கப்பூருக்கும் பெரியாருக்குமான நேரடித் தொடர்பு ‘குடிஅரசு’ ஏட்டுக் காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது. பின்னர் 1929-இல் தந்தை பெரியாரின் மலேயப் பயணத்தினால் விழிப்புணர்வடைந்த தமிழர்கள் சிங்கப்பூரின் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றியுள்ளனர். மீண்டும் 1954-1955 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் மலேயா, சிங்கப்பூர் வந்தபோது பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டதை அந்நாளைய ஏடுகள் அனைத்தும் பதிவு செய்திருக்கின்றன.
அந்த வகையில் இந்தத் தலைப்பு மிகப் பொருத்தமானது! விரிவான பொருளுடையது!
இவ்விழா சிங்கப்பூர் லிட்டில் இண்டியா பகுதியில் அமைந்துள்ள உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் 09-11-2025 அன்று சிறப்பாக நடந்தது.


தமிழ் வாழ்த்துப் பாடல்
இந்நிகழ்விற்கு சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் மதியுரைஞர்கள் வீ.கலைச்செல்வம், தமிழறிஞர் முனைவர் சுப.திண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ‘வாழ்வினிற் செம்மையை’ என்று தொடங்கும் தமிழ் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, “நீதி நீதி சம நீதி” என்ற பாடலுக்கு மாணவி காத்தலின் பெர்னான்டெஸ் சிறப்பாக நடனம் ஆடினார். அதற்கான பாடலைச் செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்டு சிறப்பாக இசையமைத்து இருந்தார்மதியழகன். பாடலுக்கான நடனத்தைச் சக்தி ஃபைன் ஆர்ட்ஸ் நிறுவனர் தேவி வீரப்பன் அமைத்திருந்தார்.
மன்றத்தின் தலைவர் க.பூபாலன் அனைவரையும் வரவேற்றுத் தலைமையுரையாற்றினார். பெரியார் சமூக சேவை மன்றத்தின் 20 ஆண்டுகள் பயணத்தையும், பணிகளையும் பட்டியலிட்டார். சிங்கப்பூர் மக்கள் அதற்கு அளித்துவரும் ஆதரவிற்கும், மூத்தவர்கள், சமூகத்தின் முக்கிய அங்கத்தினர் அதற்கு வழங்கும் ஆலோசனைகளுக்கும், வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவித்தார்.

இளைஞர்கள் கருத்தரங்கம்
இந்த நிகழ்வில் சிறப்பம்சமாக இளைஞர்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. “பெரியாரின் ஒளியில் – பெண் முன்னேற்றத்தின் தொடரும் பயணம்” என்ற தலைப்பில் பிலவேந்தர்ராஜ் சுந்தர் ஆரோக்கியராஜ், “மலேயாவில் பெரியாரின் வருகையும் தாக்கமும்” என்ற தலைப்பில் விஜயகுமார் அருள் ஆஸ்வின், “நுண்ணறிவு வளரட்டும், பகுத்தறிவு வழிநடத்தட்டும்.” என்ற தலைப்பில் நரசிம்மமூர்த்தி தமிழ்மதி மிகச் சிறப்பாக பேசினர். இன்றைய தலைமுறையில் இப்படிப் பேசும் இளைஞர்கள் இருப்பது தமிழின் எதிர்காலம் பாதுகாப்பாக இருப்பதற்கான நம்பிக்கையை நமக்குக் கொடுக்கிறது என்று அங்கிருந்த அனைவரும் பாராட்டினர். மன்றத்தின் உட்கணக்காய்வாளர் நா.மாறன், மாணவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அல்ஜுனைட் குழுத் தொகுதி அடித்தள அமைப்புகள் ஆலோசகர் ஜெகதீஸ்வரன் ராஜு பிபிஎம் (PBM), இந்தியாவிலிருந்து பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் (நிகர்நிலை) வேந்தர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மன்றத்தின் சார்பில், செப்டம்பர் மாதம் நடைபெற்ற தமிழ் இளையர் விழா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இந்நிகழ்வில் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜெகதீஸ்வரன் ராஜு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.



ஒற்றுமையே தமிழர்களை முன்னேற்றும்
மன்றத்தின் துணைப்பொருளாளர் ச.மனோகர் போட்டிகளைப் பற்றிக் கூறி பரிசு நிகழ்வை ஒருங்கிணைத்தார். முன்னதாக, வெற்றிபெற்ற குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டன.
நிகழ்வில் உரையாற்றிய அல்ஜுனைட் குழுத் தொகுதி அடித்தள அமைப்புகள் ஆலோசகர் ஜெகதீஸ்வரன் ராஜு பிபிஎம் சிங்கப்பூரில் தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்தினார். நாம் கடந்து வந்த பாதையை மறந்துவிடாமல் முன்னேற வேண்டும் என்றுரைத்தார். தந்தை பெரியார் குறித்தும், பெண்ணுரிமை உள்ளிட்டவற்றில் பெரியாரின் பங்களிப்புகள் குறித்தும் செறிவாக எடுத்துரைத்தார். நிகழ்வு சிறக்க ஒத்துழைத்த நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

பெரியார் விருது
இந்நிகழ்வில் “பெரியார் விருது” கல்வியாளர், மூத்த எழுத்தாளர் மு.அ.மசூது அவர்களுக்கு வழங்கப்பட்டது. மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் குடியரசி பெரியார் விருது பற்றி அறிவிப்பினைச் செய்தார். தமிழர் தலைவர் அவர்கள் விருது வழங்கிச் சிறப்பித்தார். விருதைப் பெற்றுக் கொண்ட மு.அ.மசூது ஏற்புரை வழங்கினார்.
சிங்கையில் 65 ஆண்டுகளாக சமூகத் தொண்டாற்றி வரும் பெரியார் தொண்டர் சு.தெ.சுசீலா அவர்களுக்குப் “பெரியார் பெருந்தொண்டர் விருது” வழங்கப்பட்டது. இவர், மறைந்த பெரியார் பெருந்தொண்டரும், சமூகநீதிக்கான வீரமணி விருது பெற்றவருமான சு.தெ.மூர்த்தி அவர்களின் வாழ்விணையர் என்பது குறிப்பிடத்தக்கது.
“பெரியார் பணி 2025 விழா சிறப்பு மலரைச்” சிறப்பு விருந்தினர் அல்ஜுனைட் (Aljunied) குழுத் தொகுதி அடித்தள அமைப்புகள் ஆலோசகர் பி.பி.எம். ஜெகதீஸ்வரன் ராஜு வெளியிட வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் ஜோதி.மாணிக்கவாசகம் பெற்றுக்கொண்டார். அரங்கத்தில் உள்ள அனைவருக்கும் பெரியார் பணி 2025 விழா மலர் வழங்கப்பட்டது.
நிறைவாக, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் (நிகர்நிலை) வேந்தர் ஆசிரியர் கி. வீரமணி சிறப்புரை ஆற்றினார். சிங்கப்பூருக்கும் பெரியாருக்கும், அவர்தம் தொண்டர்களுக்கும் இருக்கும் தொடர்பை எடுத்துக் காட்டிய அவர், ஜாதியும், தீண்டாமையும் இங்கும் வந்து சேர்ந்துவிடக் கூடாது, தமிழர்களைப் பிரித்துவிடக் கூடாது என்பதையும் சிங்கப்பூரின் மேனாள் அதிபரும், இந்நாள் அதிபரும் தெரிவித்துள்ள கருத்துகளையும், சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ அவர்களின் கருத்தையும் எடுத்துச் சொல்லி சிறப்புரையாற்றினார்
பல்வேறு தமிழ் அமைப்பைச் சார்ந்த தலைவர்கள், மற்றும் உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், சிங்கப்பூர் பெரியார் சமூக மன்றத்தின் உறுப்பினர்கள் அவர்தம் குடும்பத்தினர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். சிங்கப்பூரின் மதிப்புமிகு பெருமக்கள் அரங்கு நிறையும் அளவில் பெருமளவில் பங்கேற்றனர்.
மெல்போர்ன் நகரில் நடந்த நான்காவது பன்னாட்டு மனிதநேயம், சமூக நீதி மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டில் கலந்து கொண்டு சிங்கப்பூர் வழியாகத் தாயகம் திரும்பிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் இந்நிகழ்விற்காக தன் பயணத்திட்டத்தை மாற்றிக் கொண்டு இங்கு வந்து நிகழ்வில் கலந்து கொண்டார். தமிழர் தலைவரின் வாழ்விணையர் மோகனா வீரமணி, திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
மன்றத்தின் துணைச் செயலாளர்செ.வள்ளியப்பன் நன்றியுரை கூறினார்.
மன்றத்தின் செயலாளர் தமிழ்ச்செல்வி ராஜராஜன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
– நமது சிறப்புச் செய்தியாளர்
