கேள்வி 1: தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் (S.I.R.) சீராய்வைக் கைவிடக் கோரும் தமிழ்நாட்டின் உணர்வை மதித்து ஒன்றிய அரசும், தேர்தல் ஆணையமும் தம்முடைய நிலையை மறுபரிசீலனை செய்வார்களா?
– ந.யாழ்நிலா, காஞ்சிபுரம்.

பதில் 1: உச்சநீதிமன்றத்திடமே, நாங்கள் யாருக்கும், எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டியவர்கள் அல்ல என்ற குரலில் – அரசியலமைப்புச் சட்டம், உச்சநீதிமன்ற ஆணையையோ, தீர்ப்பையோகூட அலட்சியமாகக் கருதும் வானளாவிய அதிகாரம் படைத்தவர்களாகத் தங்களைக் கருதிடும் அமைப்பிடம் இதை எதிர்பார்ப்பது எவ்வகையில் சரியானது? சிந்திக்க. பொறுப்புடன் போதிய உரிமைப் பறிப்புத் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
- • •
கேள்வி 2: இரண்டு மாதங்களுக்குள் பொது இடங்களில் உள்ள தெரு நாய்களைப் பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை அடுத்து, காப்பகத்தில் அந்த நாய்களை எப்படி பராமரிப்பார்கள்?
– கு.கணேஷ், கடப்பாக்கம்.
பதில் 2: தெரு நாய் கடிப்பு, மனித வாழ்வினை முடிக்கும் நிலையில் அதற்குத் தனி ஸ்பெஷல் ‘ஜீவகாருண்யம்’ ஏனோ தெரியவில்லை. மிருகங்களுக்குப் பாதுகாப்பு உண்டு. மனிதர்களாக இருந்தால் கேள்விக்குறி. என்னே “ஜீவகாருண்யம்”, வெங்காய ஜீவகாருண்யம்?”
- • •
கேள்வி 3: முதலமைச்சர் தொடங்கி வைத்த, ‘அன்புச்சோலை’ என்ற பெயரில் முதியோர்களுக்காக தமிழ்நாட்டில் 25 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பராமரிப்பு மய்யங்கள் எவ்விதத்தில் பயனாகும் என்று கருதுகிறீர்கள்?
– த.வேல்சாமி, வால்பாறை.
பதில் 3: தற்போது சமூகத்தில் உள்ள யதார்த்த நிலை என்னவென்றால், ஆதரவற்ற குழந்தைகளை விட அன்புக்கும் ஆதரவுக்கும் தவிக்கும் முதியோர்களது பரிதாப நிலையில், சரியான ஏற்பாடு; முதியவர்கள் வாழ்த்துவார்கள், நன்றி உணர்ச்சி பொங்க!
நமது முதலமைச்சர் மனிதநேயத்தில் குடும்பத் தலைவராகவும் திகழ்கிறார்.
- • •
கேள்வி 4: மேற்கு வங்காளத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், அவை அவசர நிலையின் வடிவம் என்றும் அம்மாநில முதலமைச்சர் மம்தா சாடியிருப்பதற்கு ஒன்றிய அரசு செவிசாய்க்குமா?
– அ. அப்துல் அகத், அய்தராபாத்.
பதில் 4: முதலாவது கேள்விக்கான பதிலே இதற்கும்!
- • •
கேள்வி 5: சட்டமன்றத் தேர்தலில் (2026) எத்தனை முனைப் போட்டி அமைந்தாலும் தி.மு.க. வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டி அளித்திருப்பது மக்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையினாலா?
– சீதாலட்சுமி, திண்டிவனம்.
பதில் 5: ஆம். அவர் தேர்தல் கால மக்கள் சந்திப்பாளர் அல்ல; என்றும், எப்போதும் மக்களுக்கான -மக்கள் முதலமைச்சர். மக்கள் ஆதரவு என்ற மகத்தான சொத்தை அவர் சேர்த்துள்ளார்!
- • •
கேள்வி 6: பி.ஜே.பி. ஆட்சி நடக்கின்ற தலைநகர் டில்லியில், செங்கோட்டை அருகிலேயே காரில் வெடிப்பொருள் நிரப்பி வெடிக்கச் செய்த சம்பவத்தில் 13 பேர் பலியான நிலையில், அங்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு பற்றி பி.ஜே.பி. கட்சி வாய் திறக்காது மவுனம் சாதிக்கிறதே?
– ப.மாயாண்டி, மாமண்டூர்.
பதில் 6: தமிழ்நாட்டில் முன்பு கோவையில் ஒரு காரில் வெடிகுண்டு கண்டுபிடித்ததற்கு “சாமியாட்டம்” ஆடிய காவிகளும். அவர்களது அரசியல் ஆலவட்டங்களும் குதியாய் குதித்தனர். இப்போது அவர்கள் ஏனோ மவுன விரதம் பூண்டுள்ளனர். “மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைக்காத போதே குற்றச்சாட்டு.’ – விசித்திரம்! வேடிக்கை!!
- • •
கேள்வி 7: பழநி அடுத்த ஆயக்குடி கிராமத்தைச் சேர்ந்த கவிதா, தான் செய்து வந்த ஆசிரியர் பணியிலிருந்து விலகி இயற்கை விவசாயத்தை பேணிப் பாதுகாக்கும் வகையில் 110 பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்து இயற்கை வேளாண்மையை செய்து வருவதோடு, அதனை ஓர் இயக்கமாகவே நடத்தி வருவது போன்று, விவசாயிகளிடம் நஞ்சில்லா வேளாண்மை குறித்துப் போதிய விழிப்புணர்வு எற்படவில்லையே?
– ம. தங்கம், தஞ்சாவூர்.
பதில் 7: இருட்டைக் குறை கூறுவதைவிட, ஒரு மெழுகுவர்த்தியை, ஆசிரியை கவிதா போன்றவர்களைப் பின்பற்றிச் செயலாற்றிட அனைவரும் முன்வர வேண்டியது அவசியம்.
- • •
கேள்வி 8: ஆஸ்திரேலியா நாட்டில் இதய பாதிப்புக்கு உள்ளான ஒரு நபருக்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்டு, மாற்று இதயம் கிடைக்கும் வரை செயற்கை இதயத்தின் உதவியுடன் உயிர் வாழ்ந்த நிகழ்வை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– கார்த்தி ரவி, புதுடில்லி.
பதில் 8: “பக்தியினால் முடியாதது புத்தியினால் முடியும்” என்ற பாடத்தை மக்கள் இனியாவது கற்றுக்கொள்ளுவது நல்லது!
- • •
கேள்வி 9: வாக்குத் திருட்டை அங்கீகரிக்கும் முயற்சியாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் நடத்தப்படுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேட்டி அளித்திருப்பதை ஒன்றிய ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதாகக் தெரியவில்லையே?
– ஏ. பாலகிருஷ்ணன், வயநாடு, கேரளா.
பதில் 9: கண்டு கொள்ளாததுபோல் நடிக்கின்றனர். மக்கள் கவனித்துதான் வருகின்றனர். ’His master’s voice’ – கிராமபோன் தட்டு நினைவுக்கு வருகிறது.
- • •
கேள்வி 10: நாட்டிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரத்துக்கான ‘நகர்ப்புற போக்குவரத்துத் திறன்’ விருதை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பெற்றிருப்பதை எவ்விதத்தில் பாராட்டலாம்?
– ச. குப்புசாமி, கும்பகோணம்.

பதில் 10: தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பதவியேற்றவுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மகளிருக்கு இலவசப் பயணம் அறிவித்தார். இப்போது அமெரிக்கா – நியூயார்க் மேயர் யோசித்து செயல்படுத்த முனைகிறார். இதுதான் புகழ்மிக்க ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை!
- • •
