
காலங்காலமாக இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த தலைமை அமைச்சர்கள் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகி வந்தனர். இந்த நிலையை மாற்றி தமிழ்நாட்டையும், தமிழர்களையும் நேசித்த, தமிழ்நாட்டு மக்களால் நேசிக்கப்பட்ட தலைமை அமைச்சர் வி.பி.சிங் அவர்கள் தான் என்றால் அது மிகையாகாது.
அரண்மனையில் பிறந்த போதும் அடித்தட்டு மக்களின் வலிகளை உணர்ந்த தலைவராக மிளிர்ந்தவர் வி.பி.சிங். வெறும் 11 மாதங்களே (02.12.1989 – 10.11.1990) ஆட்சி செய்த போதும் அவர் தமிழ்நாட்டின்பால் காட்டிய அக்கறை அளவற்றது.
“உன் வீட்டு அரிசியில் வறியவர் பெயர் பொறி” என்கிறது ஒரு பொன்மொழி. காவிரி நதிநீர் மூலம் விளைவிக்கப்படும் அரிசியில் சமூக நீதிக் காவலர் வி.பிசிங் அவர்கள் பெயரும், முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரும் தான் பொறிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு தமிழ்நாட்டின் உணவுக் களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்களில் வாழ்வாதார பிரச்சினையான காவிரி நதிநீர் பங்கீட்டிற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் தலைவர் கலைஞர் வலியுறுத்தலின் பேரில் காவிரி நடுவர் மன்றத்தை ஏற்படுத்தி தந்தவர் வி.பி.சிங் அவர்கள் தான். இதனால் கருநாடகத்தில் தன்னுடைய ஜனதா தளம் கட்சியின் வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்று துளி கூட அவர் கவலை கொள்ளவில்லை.
தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்த அம்மையார் ஜெயலலிதா, ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக பாடுபட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகள் என்று தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால் வி.பி.சிங் அவர்களிடம் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகள் என்று நீங்கள் கருதவில்லையா? என்று கேட்ட போது, “எந்த இயக்கத்தின் மீதும் பயங்கரவாதிகள் என்ற முத்திரையைக் குத்தும் ரப்பர் ஸ்டாம்ப் என்னிடம் இல்லை” என்று அதை கடுமையாக மறுத்தார்.
அத்துடன் ஈழத்தில் பெரும் கொடுமைகளை அரங்கேற்றிக் கொண்டிருந்த இந்திய அமைதிப்படையை விலக்கி இந்தியாவிற்கு வரவழைத்தார். வி.பி.சிங் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைத்துப் போராளி இயக்கங்களுடன் தலைவர் கலைஞர் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் விவரங்கள் அவ்வப்போது வி.பி.சிங் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக சுமூக முடிவு ஏற்படுவதற்கு முன்பாகவே வி.பி.சிங் அவர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஒருவேளை வி.பி.சிங் அவர்கள் முழு ஆட்சி காலத்தையும் நிறைவு செய்திருந்தால், ஈழப் பிரச்சினையில் நிரந்தர தீர்வு ஏற்பட்டிருக்கும்.
தலைவர் கலைஞரின் வேண்டுகோளை ஏற்று விழா மேடையிலேயே சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் வி.பி.சிங் சூட்டினார்.
தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சினையான சமூகநீதியை காப்பாற்றும் வகையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்த மண்டல் குழு அறிக்கையை கடும் எதிர்ப்புகளுக்கிடையே வி.பி.சிங் அமல்படுத்தினார். மதச்சார்பின்மையைக் காக்க தனது ஆட்சியே பறிபோனாலும் பரவாயில்லை என்று பா.ஜ.க தலைவர் அத்வானியின் ரதயாத்திரையை தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தார். அதனால் ஆட்சியையும் இழந்தார். இத்தகைய சமூகநீதி உணர்வினை எனக்கு ஊட்டியது பெரியார் மண்ணான தமிழ்நாடு தான் என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டார்.
பிரதமர் பதவியிலிருந்து விலகிய பிறகு தான் பிறந்த உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் வி.பி.சிங் உரையாற்றிய போது கற்கள் வீசப்பட்டது. அந்த மேடையில் “நான் உங்கள் முன்னால், ரத்தமும் சதையுமாக நின்று கொண்டிருக்கிறேன். என் முன்னால் வந்து உங்கள் விருப்பப்படி தாக்குங்கள். ஆனாலும் நான் ஏற்றுக் கொண்டிருக்கிற சமூக நீதிக் கொள்கையில் எப்போதும் உறுதியாக இருப்பேன்” என்று முழங்கினார் வி.பி.சிங்.
சொந்த மாநிலத்தில் தாக்குதலை எதிர்கொண்ட வி.பி.சிங் அவர்களுக்கு தமிழ்நாட்டில் சென்னை முதல் குமரி வரை மாபெரும் வரவேற்பு வழங்கப்பட்டது. அத்துடன் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகத் தோழர்கள் பலரின் குழந்தைகளுக்கு வி.பி.சிங் அவர்களின் இயற்பெயரான “விஸ்வநாத் பிரதாப் சிங்” என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
பின்னாளில் வி.பி.சிங் அவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட போது திராவிடர் கழக இளைஞர்கள் ஏராளமானோர் அவருக்கு தங்கள் சிறுநீரகத்தை வழங்க முன்வந்தனர். ஆயினும் அவர்கள் வாழ வேண்டியவர்கள் என்று கூறி வி.பி.சிங் அவர்கள் அதை ஏற்க மறுத்து விட்டார்.
தனது ஆட்சிக் காலத்தில் வி.பி.சிங் அவர்கள் எந்த ஒரு மாநில அரசையும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி கலைக்கவில்லை. அத்துடன் தொழிலாளர் நாளான மே 1 அன்று தேசிய விடுமுறை அறிவித்ததும் வி.பி.சிங் அவர்கள் தான்.
சமூக நீதி, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, தொழிலாளர் நலன் போன்ற பல்வேறு துறைகளில் சாதனைகளைப் படைத்து குறைவான காலத்தில் நிறைவான ஆட்சியைத் தந்த வி.பி.சிங் அவர்களுக்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை அமைத்து அவருக்கு பெருமை சேர்த்துள்ளார் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழர்களை அவமதிக்கும் வகையில் பிரதமர் மோடியும், அவரது அமைச்சரவை சகாக்களும் பேசி வரும் இன்றைய சூழலில் அவர்களை துணிவோடு எதிர்த்து நிற்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் “திராவிட மாடல்” ஆட்சியை தொடரச் செய்வதே சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு நாம் செய்யும் ஆகச் சிறந்த நன்றி பாராட்டல் ஆகும்.
